Coming Up Fri 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

டாஸ்மேனியன் டெவிலை பேய் பிசாசு என்று ஏன் அஞ்சினர்?

Source: SBS

ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்கள் வரிசையில் அதிமுக்கிய இடம் டாஸ்மேனியன் டெவில் எனும் விலங்குக்கு உண்டு. டாஸ்மேனியன் டெவில் என்றதும் பேயோ பிசாசோ என்ற அச்சம் நிலவியது. ஆனால் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது டாஸ்மேனியன் டெவில். இவை குறித்த அரிய தகவல்களைத் தொகுத்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியாக்கிப் படைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்கள் வரிசையில் அதிமுக்கிய இடம் டாஸ்மேனியன் டெவில் விலங்கினத்துக்கு உண்டு. டாஸ்மேனியன் டெவில் என்றதும் பேயோ பிசாசோ என்ற அச்சம் வேண்டாம். சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கும் இவற்றைப் பற்றி அறியாத நாளில் இடப்பட்ட பெயர் இது.

டாஸ்மேனியன் டெவில்கள் மனிதர்களை வேட்டையாடித் தின்னும் என்னும் நம்பிக்கை ஆரம்பகால ஐரோப்பியக் குடியேறிகளிடம் இருந்தது. ஆளரவமற்ற புதர்க்காடுகளில் கொலை, தற்கொலை, அதீத வெப்பம், வறட்சி, பசி, தாகம் உள்ளிட்ட பல காரணங்களால்  இறந்து அழுகிக் கிடக்கும் உடல்களை டாஸ்மேனியன் டெவில்கள் தின்பதைக் கண்டவர்கள் டாஸ்மேனியன் டெவில்கள்தான் மனிதர்களை வேட்டையாடி உண்பதாக நம்பினார்கள்.

கரியநிறமும், கூரிய பற்களும், பிணந்தின்னும் வழக்கமும், முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் வண்ணம் வீறிட்டலறும் ஒலியும், அதன் உடலிலிருந்து வெளிப்படும் வீச்சமும், இரையுண்ணுகையில் ஒன்றுக்கொன்று காட்டும் மூர்க்கமும் அவர்களை அச்சுறுத்தியதில் வியப்பென்ன?

பேய் என்று ஒன்று இருந்தால் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணிய அவர்கள் இதற்கு டெவில் என்று பெயரிட்டனர். டாஸ்மேனியாவில் மட்டுமே காணப்படுவதால் டாஸ்மேனியன் டெவில் என்று பெயராகிவிட்டது.

டாஸ்மேனியன் டெவிலின் உடலமைப்பைக் கூர்ந்து கவனித்தால் அதன் தலைக்கும் உடலுக்குமான விகிதம் பொருத்தமற்றதாய்த் தோன்றும். உண்மைதான். சாதாரணமாக ஒரு மனிதனுடைய தலையின் எடை அவனுடைய உடல் எடையில் 8% இருக்கும். ஆனால் டாஸ்மேனியன் டெவில்களுக்கோ தலையின் எடை அவற்றின் உடல் எடையில் கிட்டத்தட்ட 25% சதவீதம் என்றால் வியப்பாக உள்ளதல்லவா? எண்பது கிலோ மனிதனுக்கு தலையே இருபது கிலோ இருந்தால் எப்படியிருக்கும்? தாங்கமுடியாத தலைக்கனத்துடன் திரியவேண்டியதுதான்.

பெரும்பான்மையான ஆஸ்திரேலிய விலங்கினங்களின் சிறப்பம்சம் அவை மார்சுபியல் என்பதுதான். டாஸ்மேனியன் டெவில்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? இது ஒரு வளைவாழ் விலங்கு என்பதால், வளை தோண்டும்போது வயிற்றுப்பைக்குள் மண் புகுந்து குட்டிகளை பாதிக்காமலிருக்க ஏதுவாக இதன் வயிற்றுப்பையின் திறப்பு பின்னோக்கி இருக்கும். டாஸ்மேனியன் டெவில்கள் ஓடுவதிலும், மரம் ஏறுவதிலும் நீந்துவதிலும் கில்லாடிகள். இவை  பகல் நேரங்களில் வளைக்குள்ளோ, உள்ளீடற்ற மரக்கட்டைகளுக்குள்ளோ உறங்கிவிட்டு, இரவு நேரத்தில் மட்டும் இரைதேடிப் போகும்.

டாஸ்மேனியன் டெவில்கள் மாமிச உண்ணிகள். அடிப்படையில் scavengers அதாவது இறந்து அழுகிய உடல்களைத் தின்று வாழும் விலங்குகள். காட்டுக்குள் எந்த இடத்தில் விலங்குகள் இறந்துகிடந்தாலும் தன் அதீத மோப்பத்திறனால் அந்த இடத்தைக் கண்டறிந்துவிடும். ஒரு இறந்த விலங்கின் உடலை பல டாஸ்மேனியன் டெவில்கள் சூழ்ந்திருப்பதைப் பார்க்கையில் குப்பைத் தொட்டியை தெரு நாய்கள் முற்றுகையிட்டிருப்பதைப் போல் இருக்கும். நாய்களைப் போலவே, இவற்றிலும் ஆளுமை மிக்கது மற்றவற்றை விரட்ட முனைவதும், தங்களுக்குள் மூர்க்கமாகச் சண்டையிட்டுக் கொள்வதையும் கூட காணமுடியும்.

டாஸ்மேனியன் டெவில்கள் இறந்த உடல்களை மட்டுமல்ல, போசம், வல்லபி, வாம்பேட், எக்கிட்னா போன்ற பெரிய விலங்குகளையும் வேட்டையாடி உண்ணக்கூடியவை. காட்டுப்பூனைகள், நரிகள் போன்ற அயலக விலங்கினங்களின் எண்ணிக்கையையும் கட்டுக்குள் வைக்க இவைதாம் பெரிதும் உதவுகின்றன.

இவற்றின் நீண்ட கூரான கால் நகங்கள் வேட்டையாடும்போது மிருகங்களை இறுகப் பற்ற உதவுகின்றன. இல்லையென்றால் ஏழு கிலோ எடையுள்ள டாஸ்மேனியன் டெவிலால் முப்பது கிலோ எடையுள்ள வாம்பேட்டை வீழ்த்தமுடியுமா? டாஸ்மேனியன் டெவில்கள் ஒரு விலங்கைத் தின்னும்போது அதன் உடலில் எலும்பு, ரோமம் என்று எதையும் விட்டுவைப்பதில்லை. முள்ளம்பன்றி போன்ற எக்கிட்னாவை அதன் முட்களுடனேயே தின்றுவிட்டு பிறகு முட்களை கழிவோடு வெளியேற்றிவிடக்கூடியவை என்பதை அறிந்தால் அவற்றின் சீரணத் திறன் எப்படிப்பட்டது என்று புரியும்.

இரண்டு ஆண் டாஸ்மேனியன் டெவில்கள் தங்கள் ஆளுமையை நிரூபிக்க தங்களுக்குள் சண்டையிடும்போது சுமோ வீரர்கள் மல்யுத்தம் புரிவதைப் போன்று பின்னங்கால்களால் நின்றுகொண்டு முன்னங்கால்களாலும் தலையாலும் எதிரியின் தோள்களில் மோதித்தள்ளும். முடிவில் வெற்றி பெற்ற ஆணுடன் பெண் இணையும்.

21 நாள் கர்ப்பத்துக்குப் பிறகு பெண் டாஸ்மேனியன் டெவில் இருபது முதல் முப்பது வரையிலான குட்டிகளை ஈனும். இளஞ்சிவப்பு வண்ணத்தில் நெல்மணி அளவிலான புழு போன்ற குட்டிகள் பிறந்த நொடியிலிருந்தே அவற்றின் வாழ்க்கைப் போராட்டம் துவங்கிவிடுகிறது. ஏனெனில் இவற்றுள் நான்கே நான்கு குட்டிகளுக்கு மட்டுமே வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கிறது இயற்கை. தாயின் வயிற்றுப்பைக்குள் இருக்கும் நான்கு பால்காம்புகளை நோக்கி முட்டிமோதி ஒன்றையொன்று முந்திச் சென்று தங்கள் இருப்பைத் தக்கவைக்க வேண்டிய நிர்ப்பந்தம். பந்தயத்தில் வென்ற நான்கு குட்டிகள் தங்கள் வாழ்வை உறுதிப்படுத்திக்கொள்ள மற்ற குட்டிகளின் கதி? அதோகதிதான். வாழ்க்கைப் போராட்டத்தில் வலிமையுள்ளவை மட்டுமே வாழும் என்ற நியதியை மெய்ப்பித்து மடிந்துவிடுகின்றன. ஐந்து மாதங்கள் வரை தாயின் வயிற்றுப்பைக்குள் வாழும் குட்டிகள் அதன் பின்னர், வளைக்குள் புல்லால் அமைக்கப்பட்ட மென்படுக்கையில் விடப்படுகின்றன. ஐந்து மாதமானபிறகு குட்டிகள் தன்னிச்சையாய் இயங்க ஆரம்பித்துவிடுகின்றன.

1954 ஆம் ஆண்டுதான் Looney Tunes  உபயத்தால் முதன் முதலில் டாஸ்மேனியன் டெவில் என்ற விலங்கினத்தின் இருப்பு உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தங்கள் நாட்டைச் சார்ந்த ஒரு விலங்குக்கு உலகளவில் இருக்கும் மகத்துவம் அறிந்த பல டாஸ்மேனிய நிறுவனங்களும், அமைப்புகளும் தங்களுக்கு இல்லாத உரிமையா என்ற எண்ணத்தில் தங்கள் விளம்பரத்துக்கு இந்த உருவத்தைப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தன.

1997 இல் ஒரு பத்திரிகை, டாஸ்மேனியன் டெவில் என்ற பெயரும் உருவமும் சட்டப்படி வார்னர் பிரதர்ஸுக்கு உரிமையானது என்று பிரச்சனையைக் கிளப்பிவிட, அது குறித்து வருடக்கணக்காக வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. முடிவில் டாஸ்மேனியாவின் பிரதிநிதி ஒருவரும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் சந்தித்து வாய்மொழி ஒப்பந்தமொன்றை பரிமாறிக்கொணடனர். அதன்படி டாஸ் என்னும் டாஸ்மேனியன் டெவில் சின்னத்தைத் தாங்கள் பயன்படுத்துவதற்காக, வருடந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வார்னர் பிரதர்ஸுக்கு டாஸ்மேனிய சுற்றுலாத்துறை செலுத்திவிடவேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. ஆனால்… சமீப காலமாக, டாஸ்மேனியன் டெவில்களைத் தாக்கும் முகப்புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிக்காக டாஸ்மேனிய அரசு ஏராளமாய் செலவழிப்பதை அறிந்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், அந்த ஒப்பந்தத்தை 2006-ஆம் ஆண்டிலிருந்து விலக்கிக்கொண்டுவிட்டதாம்.

மார்சுபியல் மாமிச உண்ணிகளில் தற்போதைக்குப் பெரியது டாஸ்மேனியன் டெவில்தான். இதற்குமுன் வாழ்ந்த மிகப்பெரிய மார்சுபியல் மாமிச உண்ணி, டாஸ்மேனியன் டைகர் எனப்படும் தைலாஸின் (thylacine). 1936-இல் உலகின் கடைசி தைலாஸின் இறந்துபோனது. அதன் பிறகு அடுத்ததாய் அப்பெருமை இதைச் சார்ந்துள்ளது. ஆனால் இவையும்  விரைந்து பரவும் முகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு மடிவதன் காரணமாக தற்போது அருகிவரும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டன. இனம் தழைப்பதற்கான முயற்சி எடுக்கப்படாவிடில் இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் இவ்வினம் முற்றிலுமாய் அழிந்துவிட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காடுகளிலும் வயற்புறங்களிலும் இறந்துபோன மிருகங்களை உடனுக்குடன் தின்று சுத்தப்படுத்தும் துப்புரவுப் பணியாளர்களான அவை இல்லையென்றால்….? அங்கங்கே நாறிக்கிடக்கும் அழுகிய பிணங்களால் நோய்களும் கிருமிகளும் காட்டு மிருகங்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் கூட பரவும் அபாயம் உள்ளது. காடு வளமாயிருந்தால்தானே நாடு வளம்பெற முடியும்!

ஆதிகாலத்தில் டாஸ்மேனியன் டெவில் இவ்வளவு பயங்கரத் தோற்றத்துடன் காணப்படவில்லையாம். ஏன் இப்படி மாறியது என்பது பற்றிய பூர்வகுடி கதையை அறிவோமா?

அப்போது டராபா என்ற அழகிய மிருகம் காட்டில் வாழ்ந்துவந்தது. பெரிய கண்களுடனும் குஞ்சம் வைத்த வாலுடனும் பார்க்கவே அப்படியொரு அழகாம். ஆனால் அதற்கு ஒரு கெட்ட குணம் இருந்தது. வேட்டையாடுவதற்கு எப்போதும் விலங்குகளின் குட்டிகளையே தேர்ந்தெடுத்தது. மிகவும் சிரமப்படாமல் எளிதாக குட்டிகளை வேட்டையாடமுடியும் என்பதால் அவற்றைத் தேர்வு செய்து வேட்டையாடித் தின்றது. நாளடைவில் எல்லா விலங்குகளின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டது. பேராசை, சோம்பேறித்தனம், கோழைத்தனம் போன்றவற்றின் ஒட்டுமொத்த வடிவம் என்னும் பெயரைப் பெற்றுவிட்டது.

அந்தக் காட்டில் வாழ்ந்துவந்த வன தேவதைகள் டராபாவின் மேல் மிகுந்த கோபமும் அதிருப்தியும் கொண்டிருந்தனர். டராபா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அது தன்பாட்டுக்கு தன் விருப்பம் போல குட்டிகளை வேட்டையாடிக் கொன்று தின்றுகொண்டிருந்தது. ஒருநாள் அப்படி ஏதோவொரு விலங்கின் குட்டியைத் துரத்திக்கொண்டு போனபோது ஒரு வனதேவதையின் இருப்பிடத்துக்கு தவறி நுழைந்துவிட்டது. டராபாவின் அநியாயத்தைப் பார்க்கப் பொறுக்காத வனதேவதை, டராபாவை அதன் அழகு கெடும்படி சபித்துவிட்டது. அன்றுமுதல்தான் டராபாவின் உருவம் மாறிப்போய் யாரும் பார்த்தாலே பயப்படும் அளவுக்கு ஆகவிட்டதாம்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
டாஸ்மேனியன் டெவிலை பேய் பிசாசு என்று ஏன் அஞ்சினர்? 03/06/2019 10:25 ...
State Nomination ஊடாக ஆஸ்திரேலியாவின் எந்த மாநிலத்தில் குடியேறுவது இலகு? 06/07/2022 13:46 ...
வெளிநாடு பயணிப்பவர்களின் கவனத்திற்கு !! 06/07/2022 09:04 ...
மொழி தொடர்பிலான சவால்களை எதிர்கொள்ளும் நோயாளிகளும் மருத்துவர்களும் 06/07/2022 05:25 ...
'காளி'யினால் சர்ச்சை 06/07/2022 05:53 ...
NSWஇல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு நிதியுதவி 06/07/2022 06:44 ...
நாட்டின் வட்டி வீதம் 1.35 ஆக அதிகரிப்பு! 05/07/2022 05:54 ...
கோவிட்-19 தொற்று முன்னர் ஏற்பட்டிருந்ததா என்பதை எப்படி அறிவது? 04/07/2022 11:37 ...
அமெரிக்க கருக்கலைப்பு சட்ட மாற்றம் ஆஸ்திரேலியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? 04/07/2022 14:11 ...
இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி : முழு நாடும் முடங்கும் நிலை 04/07/2022 06:28 ...
View More