புதிய நிதியாண்டு ஆரம்பித்துள்ள பின்னணியில் ஆஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் விசாக்களில் நடைமுறைக்குவரும் மாற்றங்களைப் பார்க்கலாம்.
இவற்றில் சில மாற்றங்கள் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளன. சில இனிவரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
ஆஸ்திரேலியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை
புதிதாக நாட்டில் குடியேற அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 160,000 என்ற அளவிலேயே தொடர்ந்தும் இருக்கும்.
2021-2022 நிதியாண்டில் புதிய குடிவரவாளர்களின் எண்ணிக்கை மேலும் 77 ஆயிரத்தால் குறைவடையும் எனவும் 2024-25 ஆண்டளவில் இந்த எண்ணிக்கை படிப்படியாக 230,000 என்ற அளவை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னுரிமை அடிப்படையிலான தொழிற்பட்டியல்
கடந்த 2020-21 நிதியாண்டில் Global Talent Independent program, Business Innovation and Investment Program மற்றும் Employer-Sponsored விசாக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன்கீழ் Global Talent Independent program-க்கான இடங்கள் 15 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. Business Innovation and Investment Program -க்கான இடங்கள் 13,500 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்த ஆண்டு குறித்த விசாக்களுக்கான வரம்பில் சிறிது மாற்றம் கொண்டுவரப்பட்டு Employer-sponsored விசாக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனடிப்படையில் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Priority Migration Skilled Occupation List (PMSOL)- முன்னுரிமை அடிப்படையிலான தொழிற்பட்டியலில் புதிதாக 22 தொழில்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Chef, Accountant, Civil Engineer உள்ளிட்ட தொழில்கள் இப்புதிய பட்டியலில் அடங்குகின்றன.
இதையடுத்து Priority Migration Skilled Occupation List-இல் உள்ள மொத்த தொழில்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.Priority Migration Skilled Occupation List-இன் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
புதிய விவசாய விசா
தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பத்து நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் புதிய விவசாய விசாவின்கீழ் ஆஸ்திரேலியா வந்து இங்குள்ள விவசாயிகளிடம் பணிபுரிய முடியும்.
முன்னதாக பிரிட்டன் நாட்டவர்களை மையப்படுத்தி அறிவிக்கப்பட்ட இப்புதிய விவசாய விசாவில் தற்போது இந்தோனேசியா, மியன்மார், வியட்நாம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, Brunei மற்றும் Laos ஆகிய 10 நாடுகள் இணைத்துக்கொள்ளப்படுகின்றன.
இப்புதிய விசாவை இவ்வருட இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவர அரசு எதிர்பார்த்துள்ளது.குடும்ப விசாக்கள்
Family reunion stream-க்கான விசா இடங்கள் கடந்த நிதியாண்டைப்போலவே இவ்வருடமும் 77,300 என்ற அளவிலேயே தொடர்ந்தும் பேணப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் Family reunion stream விசாக்களுக்கான நிபந்தனைகளில் அரசு நடைமுறைப்படுத்திய தளர்வுகள் அல்லது சலுகைகள் இவ்வருடமும் தொடர்கிறது.
இதன்கீழ் குறித்த விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்கள் அந்த விசா வழங்கப்படும்போது ஆஸ்திரேலியாவுக்கு வெளியே இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஆஸ்திரேலியாவில் இருந்தவாறே அவர்கள் இந்த விசாக்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
Partner விசா விண்ணப்பங்கள்
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைமுறைக்குவரும் சட்டமாற்றத்தின்படி வெளிநாட்டிலுள்ள தனது துணையை ஆஸ்திரேலியாவுக்கு ஸ்பொன்சர் செய்பவரின் நடத்தையானது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அவர் தேவையான நிபந்தனைகளை பூர்த்திசெய்யும்பட்சத்தில் மாத்திரமே sponsorship approval வழங்கப்படும்.
குடும்ப வன்முறை, பாலியல் முறைகேடு, சிறுவர்கள் மீதான பாலியல் முறைகேடு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடையதாக ஏதேனும் குற்றச்சாட்டு இருந்தால் அவரது sponsorship விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதில் சிக்கல்கள் எழலாம்.அதேநேரம் ஆஸ்திரேலியாவிலுள்ள தமது துணையுடன் இணைவதற்காக Partner விசா ஊடாக வருபவரும் அவரை ஸ்பொன்சர் செய்யும் மணத்துணையும் தமது ஆங்கிலமொழிப்புலமையை நிரூபிக்க வேண்டுமென்ற சட்டம் இவ்வாண்டு நடைமுறைக்கு வருகிறது.
Partner விசா விண்ணப்பதாரிகள் ஆங்கிலப்பரீட்சையை சித்தியடைந்தால்தான் விசா வழங்கப்படும் என்றில்லை. அவர்கள் ஆங்கிலத்தை பயில்வதில் ஆர்வத்துடன் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதை நிரூபித்தால்- உதாரணமாக Adult Migration English Program போன்ற செயற்றிட்டமூடாக 500 மணித்தியால வகுப்பில் கலந்துகொள்கின்றமை போன்ற விடயங்களை உறுதிசெய்துகொண்டாலே போதும் என தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர் பற்றாக்குறையை நீக்குவதற்கான நடவடிக்கைகள்
ஆஸ்திரேலியாவில் Temporary Activity Visa Subclass 408 விசாவில் இருந்துகொண்டு விவசாயத்துறையில் பணியாற்றுபவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தை நீடித்துக்கொள்ள முடியும்.
ஆஸ்திரேலியாவின் விவசாயத்துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப ஏதுவாக இம்மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேபோன்று ஆஸ்திரேலியாவின் மருத்துவத்துறை, சுற்றுலாத்துறை, விவசாயத்துறை, ஊனமுற்றோர் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் hospitality துறையில் பணியாற்றும் வெளிநாட்டு மாணவர்கள் இருவாரங்களுக்கு 40 மணிநேரங்கள் மட்டுமே வேலைசெய்யமுடியும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு அவர்கள் மேலதிக மணிநேரங்கள் வேலைசெய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.கொரோனா பரவல் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்ட மற்றும் அதிகளவில் பணியாளர்கள் தேவைப்படுகின்ற துறைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும்வகையில் இம்மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Business விசா
Business Innovation and Investment Program வர்த்தக மற்றும் முதலீடு தொடர்பிலான பிரதான விசா பிரிவுகளின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து நான்காக குறைக்கப்படுகிறது(Business Innovation, Entrepreneur, Investor and Significant Investor)
ஆஸ்திரேலிய குடியுரிமை விண்ணப்ப கட்டணம்
ஆஸ்திரேலிய குடியுரிமைக்கான விண்ணப்ப கட்டணம் இன்று ஜுலை 1 முதல் 72 வீதத்தினால் அதிகரிக்கிறது.
இதுவரைகாலமும் 285 டொலர்களாக இருந்த குடியுரிமை விண்ணப்ப கட்டணம் இனி 490 டொலர்களாக அதிகரிக்கிறது.பெற்றோருடைய குடியுரிமை விண்ணப்பத்தில் உள்ளடக்கப்படும் 15 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு கட்டணம் அறவிடப்படாது.
தனியாக விண்ணப்பிக்கும் பிள்ளைகளுக்கான விண்ணப்ப கட்டணம் 180 டொலர்களிலிருந்து 300 டொலர்களாக அதிகரிக்கப்படுகிறது.
புதிய குடியேறிகளுக்கான அரச கொடுப்பனவு
அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 1 முதல் ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை பெறும் அனைவரும் அரசு நிதி உதவிபெற நான்கு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.