Coming Up Sun 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

COVID-19 பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை- உங்கள் மொழியில்!

உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் COVID-19 தொடர்பில் நம்பகத்தன்மைவாய்ந்த தகவல்களை உங்கள் மொழியிலேயே வழங்குவதற்கு SBS உறுதிபூண்டுள்ளது. COVID-19 தொடர்பில் சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் அறிந்துவைத்திருக்க வேண்டிய விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

வீட்டில் இருங்கள்.  பாதுகாப்பாக இருங்கள்.  தொடர்பில் இருங்கள்.  உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். 

ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் குறித்த மேலதிக விபரங்களைப்பெற இங்கே அழுத்துங்கள். 

நிதிநெருக்கடியைச் சந்திப்பவர்கள் www.moneysmart.gov.au என்ற இணையத்தளத்திற்கு செல்லுங்கள். அல்லது 1800 007 007 என்ற இலக்கத்தில் National Debt Helpline-ஐ அழையுங்கள். 

Jobseeker மற்றும் Jobkeeper

நாட்டில் கொரோனா பரவலையடுத்து வேலை இழந்தவர்களுக்கும் நிதிநெருக்கடியை எதிர்கொள்பவர்களுக்கும் உதவும் வகையில் அரசு அறிமுகப்படுத்திய Jobseeker மற்றும் Jobkeeper  கொடுப்பனவு திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி Jobkeeper திட்டம் 2021 மார்ச் மாதம் வரையும் Jobseeker திட்டம் டிசம்பர் 2020 வரையும் நீடிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கானJobseeker திட்டம் தொடர்பில் வரும் மாதங்களில் அரசாங்கம் அறிவிக்கும். ஆனால் இவ்விரு திட்டங்கள் ஊடாக வழங்கப்பட்ட கொடுப்பனவுத் தொகை குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்கள் வருமாறு:

Jobseeker கொடுப்பனவு
இப்போது கொடுக்கப்படுவது(இருவார கொடுப்பனவு): 1115 டொலர்கள்
செப்டம்பர் 2020 முதல்(இருவார கொடுப்பனவு): 815 டொலர்கள்

வேலையற்றவர்களுக்கான கொடுப்பனவைப் பெற்றுவருபவர்கள், ஆகஸ்ட் 4 முதல் மாதமொன்றுக்கு ஆகக்குறைந்தது 4 இடங்களில் வேலைவாய்ப்புக்கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

Jobkeeper கொடுப்பனவு
இது இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது.

முழுநேர வேலையாட்களுக்கான இருவார கொடுப்பனவு
இப்போது கொடுக்கப்படுவது: 1500 டொலர்கள்
செப்டம்பர் 2020 முதல்: 1200 டொலர்கள்
ஜனவரி 2021 முதல்: 1000 டொலர்கள்

பகுதிநேர வேலையாட்களுக்கான இருவார கொடுப்பனவு
இப்போது கொடுக்கப்படுவது: 1500 டொலர்கள்
செப்டம்பர் 2020 முதல்: 750 டொலர்கள்
ஜனவரி 2021 முதல்: 650 டொலர்கள்

COVID-19 தொற்று எவ்வாறு பரவுகிறது?

COVID-19  ஒரு நபரிலிருந்து மற்றொரு நபருக்கு கீழ்க்காணும் செயற்பாடுகளினூடாக பரவுகின்றது.

  • இந்நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவருடன் அல்லது அந்த நபருக்கு தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு 24 மணிநேரங்களுக்கு முன்பு அவருடன் நெருக்கமான தொடர்பில் இருத்தல்.
  • நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இருமிக்கொண்டும் தும்மிக்கொண்டும் இருக்கும் நபருடன் நெருங்கிய தொடர்பில் இருத்தல்.
  • நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவர் இருமும்போதும் தும்மும்போதும் வெளியேறும் சிறுதுளிகள் மேசை அல்லது கதவுகைபிடிகள் போன்ற மேற்பரப்புக்களில் படிந்திருக்கும். நீங்கள் அவற்றைத் தொட்டுவிட்டு பின் உங்களது வாயையோ முகத்தையோ தொடுதல்.

ஆஸ்திரேலிய அரசு COVIDSafe செயலியை அனைவரையும் தரவிறக்கிக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. மேலதிகமாக அறிந்துகொள்ள இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள். 

COVID-19 ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எவை?

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது.

Flu மற்றும் cold ஏற்படுவதுபோன்ற அறிகுறிகளையொத்த கீழ்க்காணும் அறிகுறிகள் காணப்படும். 

  • காய்ச்சல்
  • சுவாச கோளாறு
  • இருமல்
  • தொண்டை நோவு
  • மூச்சுத் திணறல்
  • பிற அறிகுறிகள்- மூக்கு ஒழுகுதல், தலைவலி, தசை அல்லது மூட்டு வலிகள், குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி, வாசனை உணர்வு இழப்பு, சுவை மாற்றம், பசியின்மை மற்றும் சோர்வு.

இந்த அறிகுறிகள் தோன்றினால் நான் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து 14 நாட்களுக்குள் இவ்வாறான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்து 14 நாட்களுக்குள் இவ்வறிகுறிகள் தோன்றினாலோ உங்களது மருத்துவருடன் பேசி நேரமொன்றை ஏற்பாடு செய்யுங்கள்.  உங்களுக்கு இவ்வாறான அறிகுறிகள் இருப்பதைத் தெரியப்படுத்தாமல் மருத்துவ நிலையமொன்றுக்கோ அல்லது மருத்துவமனைக்கோ செல்லவேண்டாம்.

நீங்கள் மருத்துவ நிலையமொன்றுக்கோ அல்லது மருத்துவமனைக்கோ செல்வதற்கு முதல் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்களது பயண விபரங்களையும் COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவருடன் நீங்கள் தொடர்பில் இருந்ததையும் தெரிவியுங்கள். உங்களது வீட்டிலோ, விடுதியிலோ அல்லது பராமரிப்பு நிலையத்திலோ நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பொது சுகாதார அதிகாரிகள் நீங்கள் வழக்கமான செயற்பாடுகளுக்கு திரும்பலாம் என அனுமதி கொடுக்கும்வரை உங்களை தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

உங்களுக்கு இருக்கும் அறிகுறிகள் தொடர்பில் எவரிடமேனும் பேசவேண்டுமெனில் 24x7 இயங்கும் 1800 020 080 என்ற தேசிய கொரோனாவைரஸ் உதவி இலக்கத்தை அழையுங்கள்.

COVID-19 அறிகுறி உள்ளவர்களைப் பரிசோதிக்கவென நாடு முழுவதும் GP respiratory clinic-ஐ ஆஸ்திரேலிய அரசு ஏற்படுத்தியுள்ளது.

இவை நீங்கள் வாழும் பகுதிகளில் எங்கு அமைந்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்.

GP respiratory clinics உங்கள் பகுதியில் இல்லையென்றால், மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள health direct அல்லது நீங்கள் வாழும் மாநிலத்தின் சுகாதார அமைச்சு இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.

உங்களுக்கு மூச்செடுப்பதில் சிரமம் இருந்தாலோ அல்லது மருத்துவ அவசரநிலை ஏற்பட்டாலோ 000-ஐ அழையுங்கள்.

COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா என்று நான் சோதித்துப்பார்க்க வேண்டுமா?

COVID-19 தொற்றை விரைவில் இனங்காண்பதற்கு ஏதுவாக அறிகுறிகள் உள்ள எவரும் தம்மைப் பரிசோதித்துக்கொள்ளலாம். 

கொரோனா வைரசுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?

கொரோனா வைரசுக்கு பிரத்தியேகமான சிகிச்சை எதுவும் கிடையாது. ஆனால் பெரும்பாலான அறிகுறிகளுக்கு வழக்கமான மருத்துவ உதவி செயன்முறைகள் மூலம் சிகிச்சையளிக்கப்படும். ஆன்டிபயோட்டிக் மருந்துகள் வைரசுக்கு எதிராக பயனளிக்காது.

COVID-19  தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது?

இத்தொற்று ஏற்பட்ட சிலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படாமலே போகலாம். இன்னும் சிலருக்கு இலேசான அறிகுறிகள் மாத்திரம் ஏற்பட்டு விரைவில் குணமடையலாம். மற்றவர்கள் மிகக்கடுமையாக விரைவாக நோய்வாய்ப்படலாம். ஏனைய கொரோனா வைரஸ் தொற்று அனுபவங்களின்படி தொற்று ஏற்படக்கூடிய அதிக ஆபத்து கீழ்க்காணும் பிரிவினருக்கு உள்ளது.

  • கடுமையான வியாதிக்குட்பட்டவர்கள்/நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் 
  • 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்
  • 50 வயதுக்கு மேற்பட்டபூர்வகுடி மற்றும் டொரஸ் ஸ்ரெயிட் தீவு மக்கள்
  • 65 வயதுக்கு மேற்பட்ட நீண்டநாட்கள் நோய்வாய்ப்பட்டிருப்போர்

COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த எப்படி உதவலாம்?

தும்மும்போதும் இருமும்போதும் கைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றவர்களிடமிருந்து இடைவெளியொன்றைப் பேணுவதன்மூலமும் பெரும்பாலான வைரசுக்களிலிருந்து தப்பிக்கலாம்.

  • வீட்டில் தங்கியிருங்கள்.
  • சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்.
  • உங்கள் கைகளை சோப்பு பயன்படுத்தி தண்ணீரில் அடிக்கடி கழுவுங்கள். 
  • இருமும்போதும் தும்மும்போதும் tissue ஒன்றைப் பயன்படுத்திவிட்டு அதனை குப்பைத்தொட்டிககுள் வீசுங்கள். alcohol-based hand sanitiser-ஐ பயன்படுத்துங்கள்.
  • உங்களுக்கு உடல்நலமில்லை என்றால் மற்றவர்களிடமிருந்து தள்ளியிருங்கள்.(1.5 மீட்டர் இடைவெளியைப் பேணுங்கள்)
  • முடிந்தவரை எங்கும் செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருங்கள்.

யார் சுய-தனிமையைப் பேண வேண்டும்?

நீங்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்திருந்தால் 14 நாட்களுக்கு வீட்டில் தங்கியிருங்கள். 28 மார்ச் சனிக்கிழமை இரவு 11.59 முதல், வெளிநாட்டிலிருந்து திரும்பிவரும் எவரும் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அனைத்துப் பயணிகளும் நிர்ணயிக்கப்பட்ட தங்குமிடமொன்றில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.(உதாரணமாக ஹோட்டல் ஒன்றில்)

உங்களுக்கு COVID-19 தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் நீங்கள் வீட்டில் இருக்கவேண்டும்.

  • வேலையிடம், பள்ளி, வணிக வளாகங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகம் என பொது இடங்கள் எவற்றுக்கும் செல்லக்கூடாது.
  • உங்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை முன் கதவருகில் கொண்டுவந்துவைக்குமாறு யாரிடமேனும் கேட்கலாம்.
  • வெளியாட்களை வீட்டினுள் அனுமதிக்க வேண்டாம். உங்கள் வீட்டில் வழக்கமாக இருப்பவர்கள் மாத்திரமே அங்கு தங்கலாம்.

சமூக இடைவெளி என்றால் என்ன?

COVID-19 தொற்று பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஒன்றே சமூக இடைவெளி ஆகும். நீங்கள் வீட்டில் தங்கியிருப்பதையும், தனிநபர்களுக்கிடையில் 1.5 மீட்டர் இடைவெளியைப் பேணுவதையும், கைகொடுப்பது மற்றும் கட்டியணைத்தலைத் தவிர்ப்பது போன்றவற்றை இது குறிக்கிறது.

நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவர் இருமும்போதும் தும்மும்போதும் வெளியேறும் சிறுதுளிகள் மேசை அல்லது கதவுகைபிடிகள் போன்ற மேற்பரப்புக்களில் படியும் என்பதால் நீங்கள் அவற்றைத் தொடுவதைத் தவிர்ப்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது.

ஆட்களுக்கிடையில் இடைவெளி பேணப்படும்போது வைரஸ் பரவல் கடினமாக்கப்படுகின்றது.

முதியோர் பராமரிப்பு நிலையங்களிலுள்ள எனது குடும்பத்தவரையோ நண்பர்களையோ நான் சென்று பார்க்கலாமா?

முதியோர் பராமரிப்பு நிலையங்களில் வைரஸ் பரவல் ஏற்பட்டால் அது பல சிக்கல்களை உண்டுபண்ணும். அந்தவகையில் COVID-19 என்பது முதியவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே அவர்களைப் பாதுகாப்பதற்கென புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கீழ்க்காணும் சந்தர்ப்பங்களில் நீங்கள் அங்கே செல்ல முடியாது.

  • கடந்த 14 நாட்களுக்குள் வெளிநாடு சென்று திரும்பியிருந்தால்.
  • கடந்த 14 நாட்களுக்குள் COVID-19 தொற்று ஏற்பட்ட ஒருவருடன் நெருங்கிப் பழகியிருந்தால்.
  • காய்ச்சல் அல்லது சுவாசநோய் சம்பந்தப்பட்ட அறிகுறிகள் காணப்பட்டால்(உதாரணமாக இருமல், தொண்டை நோவு, மூச்செடுக்க சிரமம்)
  • மே முதலாம் திகதியிலிருந்து முதியோர் பராமரிப்பு நிலையங்களுக்குச் செல்பவர்கள் influenza தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

நான் முகக்கவசம் அணிய வேண்டுமா?

COVID-19 தொற்று ஏற்பட்ட ஒருவர் முகக்கவசம் அணிந்து கொள்வதன் மூலம் ஏனையவர்களுக்கு அத்தொற்று பரவுவதிலிருந்து பாதுகாக்கலாம். 

ஆஸ்திரேலியாவில் COVID-19 சமூக பரவல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக சில மாநிலங்களும் பிராந்தியங்களும் இப்போது முககக்கவசங்களைப் பரிந்துரைக்கின்றன.

இதன்படி விக்டோரியாவில் 22.07.2020 புதன்கிழமை இரவு 11.59 முதல் மெல்பேர்ன் மற்றும் Mitchell Shireஆகிய பகுதிகளில் வாழ்பவர்கள் வீட்டிற்கு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொள்வது கட்டாயமாக்கப்படுகின்றது. https://www.dhhs.vic.gov.au/face-coverings-1159pm-wednesday-22-july

நியூ சவுத் வேல்ஸில் உள்ளவர்கள் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள hotspot பகுதியில் வசித்தால் அல்லது வேலை செய்தால் சமூக இடைவெளி பேண முடியாத சந்தர்ப்பங்களில் முகக்கவசம் அணிவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் பயன்படுத்துவதுடன் நின்றுவிடாமல் கீழ்வருவனவற்றை தொடர்ந்து செய்ய வேண்டும்:

  • உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள்
  • சமூக இடைவெளயைப் பேணவும் (1.5 மீட்டருக்கு மேல்)
  • பெரிய கூட்டங்கள் மற்றும் நெரிசலான உட்புற இடங்களைத் தவிர்க்கவும்
  • கை மற்றும் சுவாசம் தொடர்பிலான சுகாதாரம் பேணவும்

உங்கள் மாநிலத்தில் அல்லது பிராந்தியத்தில் சூழ்நிலைகள் மாறினால், முகக்கவசம் குறித்த ஆலோசனை மாற்றமடையும். உங்கள் மாநில அல்லது பிராந்திய அரசு இது குறித்த ஆலோசனைகளை வழங்கும். https://www.health.gov.au/news/health-alerts/novel-coronavirus-2019-ncov-health-alert/how-to-protect-yourself-and-others-from-coronavirus-covid-19

ஆஸ்திரேலியாவிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு மற்றும் ஆஸ்திரேலியாவிற்குள் பயணம் செய்தல்

ஆஸ்திரேலியர்கள் அநாவசிய தேவைகளுக்காக உள்நாட்டுப்பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவிலுள்ள மாநிலங்களும் பிராந்தியங்களும் தமது எல்லைகளை மூடுதல் உட்பட தமக்கேற்றவாறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தமுடியும். விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ACT ஆகியன தமது எல்லைகளை மூடவில்லை.

பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் 

நாடுமுழுவதும் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் சமூக இடைவெளியை  இறுக்கமாக கடைப்பிடிப்பது அவசியமாகும். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பொதுப்போக்குவரத்தில் பயணம்செய்வதை தவிருங்கள்.

பொதுப்போக்குவத்தைப் பயன்படுத்தும்போது முகக்கவசம் அணியவேண்டியது கட்டாயமல்ல. வேண்டுமானால் அணிந்துகொள்ளலாம்.

பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள:  https://www.infrastructure.gov.au/transport/files/COVID19_public_transport_principles_29052020.pdf

சர்வதேச பயணிகள் 

ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களும் அவர்களுடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் மாத்திரமே ஆஸ்திரேலியாவுக்குள் வரமுடியும். 

ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிவரும்  அனைவரும் 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். 

அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பும்  தனிமைப்படுத்தல் முடிவடைந்து அவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவதற்கு முன்பும் கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்படும்.

தனிமைப்படுத்தப்படும் செலவில் நீங்கள் பங்களிக்க வேண்டியிருக்கலாம். இதுகுறித்த நடைமுறைகள் அந்தந்த மாநில மற்றும் பிராந்திய அரசாங்கங்களால் நிர்வகிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன:

NSW: https://www.nsw.gov.au/covid-19/travel-and-transport-advice VIC: https://www.dhhs.vic.gov.au/information-overseas-travellers-coronavirus-disease-covid-19

ACT: https://www.covid19.act.gov.au/community/travelling-and-transport NT: https://coronavirus.nt.gov.au/stay-safe/quarantine

QLD: https://www.qld.gov.au/health/conditions/health-alerts/coronavirus-covid-19/protect-yourself-others/quarantine

SA: https://www.covid-19.sa.gov.au/restrictions-and-responsibilities/travel-restrictions

TASMANIA:https://www.coronavirus.tas.gov.au/travellers-and-visitors

WA: https://www.wa.gov.au/organisation/department-of-the-premier-and-cabinet/covid-19-coronavirus-travel-wa

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டுப்பயணம் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில விதிவிலக்குகள் உண்டு.

  • கொரோனா வைரஸ் தொற்கு தொடர்பிலான ஆராய்ச்சி மற்றும் உதவிப்பணிகளுக்குச் செல்லுதல்
  • தவிர்க்க இயலாத ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் தொடர்பிலான பயணம்
  • ஆஸ்திரேலியாவில் கிடைக்காத அவசர மருத்து சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள
  • தவிர்க்க இயலாத தனிப்பட்ட காரணங்களுக்காக செல்லுதல்
  • கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான பயணம்
  • தேசிய நலன் கருதிய பயணம்

நீங்கள் ஆஸ்திரேலியா திரும்புவதற்கு முடிவெடுத்தால் உங்கள் பயண முகவர் மற்றும் விமான நிறுவனத்துடன் தொடர்பில் இருங்கள்.

அரசு மற்றும் விமானநிலையங்களின் அறிவித்தல்களுக்கு கவனம் செலுத்துங்கள்.

ஏதாவது அவசர உதவி தேவையெனில் அந்தந்த நாடுகளின் தூதரகங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு www.smartraveller.gov.au என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்.

ஆஸ்திரேலியா இப்பரவலை எவ்வாறு கையாளுகின்றது?

கொரோனா வைரசுக்கெதிரான  Emergency Response Plan for Novel Coronavirus (COVID-19) திட்டமொன்றை பிரதமர் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல் human biosecurity அவசர காலத்தை 2020 ஜூன் 17 முதல் 2020 செப்டம்பர் 17 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளார்.

எரிபொருள், மின்சாரம், தண்ணீர், வங்கிக் கட்டணம், கடனட்டை கட்டணம், வீட்டுக்கடன் போன்ற பல அம்சங்களில் சம்பந்தப்பட்ட துறையினர் நெகிழ்வுத் தன்மையைக் கடைப்பிடிக்கும்வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Working holiday visa, Temporary Skilled visa போன்ற விசா நிபந்தனைகளிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவிலுள்ள சர்வதேச மாணவர்கள் வேலை இல்லையென்றாலோ அல்லது நிதி ஆதாரம் எதுவுமில்லையென்றாலோ தமக்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயலாம்.

அவர்கள் 12 மாதங்களுக்கு மேல் இங்கே இருந்தால் தமது சூப்பர் அனுவேசன் பணத்தை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம்.

குடும்பத்தினரின் உதவியின்றி இங்கே சுற்றுலா விசாவில் தங்கியிருப்பவர்கள் தமது சொந்தநாடுகளுக்குத் திரும்ப வேண்டும்.

இவைதவிர மனநல உதவித்திட்டங்கள் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான திட்டங்கள் போன்றனவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் ஆங்கிலத்தில் மேலதிகமாக அறிந்துகொள்ள  www.headtohealth.gov.au.

உள்துறை அமைச்சின் இணையத்தளத்தில் உங்கள் மொழியில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள homeaffairs.gov.au

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் குறித்த மேலதிக விபரங்களைப்பெற இங்கே அழுத்துங்கள். 

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன