அமெரிக்க அதிபர் Donald Trump அந்நாட்டின் குடிவரவு மற்றும் அகதிகள் திட்டத்தில் அதிரடியாக மாற்றங்களைச் செய்திருக்கின்ற பின்னணியில், ஆஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull அவருடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார்.
இந்த உரையாடலில் இருநாடுகள் சம்பந்தப்பட்ட முக்கிய கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும், குறிப்பாக என்ன விடயங்கள் பேசப்பட்டன என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.
முக்கியமாக அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே செய்துகொள்ளப்பட்ட அகதிகள் உடன்படிக்கை பற்றி ஏதேனும் பேசப்பட்டதா என்பது பற்றி வெள்ளைமாளிகை தரப்போ அல்லது பிரதமர் அலுவலகமோ எவ்வித அறிக்கைகளையும் வெளியிடவில்லை.
ஆனால் முன்னாள் அதிபர் Obama-வின் நிர்வாகத்தின் கீழ் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு தமது நிர்வாகம் மதிப்பளிக்கும் என தற்போதைய அதிபர் Trump, பிரதமரிடம் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் அகதிகள் அனுமதி திட்டம் 4 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ள அதேநேரம், சிரியா அகதிகளுக்கான அனுமதி காலவரையறையின்றி நிறுத்தப்பட்டுள்ளமை உட்பட பல கடும்போக்குமிக்க தீர்மானங்களை அமெரிக்க அதிபர் Donald Trump அமுல்படுத்தியுள்ள நிலையில், மனுஸ் மற்றும் நவுறுவிலுள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் ஒப்பந்தத்திற்கு என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அதேநேரம் ஆஸ்திரேலியாவுடனான உடன்படிக்கையை Donald Trump நிராகரிக்க மாட்டார் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக பிரதமர் Malcolm Turnbull மீண்டும் தெரிவித்துள்ளமை, இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதையே உறுதி செய்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
