ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தரமாக குடியேற அரசு தற்போது வழங்கிவரும் மொத்த விசாக்களில் சுமார் பத்தாயிரம் விசாக்களை ஆஸ்திரேலியாவில் பணிசெய்யும் நியூசிலாந்து நாட்டவருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தரமாக குடியேற அரசு தற்போது வழங்கிவரும் விசாக்களைப் பெற்றுவரும் இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட ஆசியர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கை குறைப்பிற்கு அரசின் அமைச்சரவை ஒப்புதலோ அல்லது நாடாளுமன்ற ஒப்புதலோ தேவையில்லை என்பதால் இந்த மாற்றம் உடனடியாகவே நடைமுறைக்கு வந்துள்ளது.
நாட்டில் குடியேறுவோரின் எண்ணிக்கை இதனால் குறைகிறது என்ற வாதத்தை குடிவரவுத்துறை நிராகரித்துள்ளது. விசா எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்றும் நியூசிலாந்து நாட்டவரும் இந்த முறையில் விசா வழங்க சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் குடிவரவுத்துறை கூறியுள்ளது.
நாட்டில் குடியேற ஆண்டொன்றுக்கு சுமார் 250,000 வழங்கப்படுகிறது. அதே வேளையில் ஒருவரின் திறமை, படிப்பு, வேலைப்பின்னணி, ஆங்கில மொழி அறிவு, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் நாட்டில் நிரந்தரமாக குடியேற ஒவ்வொரு ஆண்டும் 44000 விசாக்களை அரசு தற்போது வழங்கிவருகிறது. இந்த நாற்பத்தி நான்காயிரம் விசாவில் சுமார் பத்தாயிரம் விசாக்கள் நியூசிலாந்து நாட்டவருக்கு வழங்கப்படுவதால் இனி பிற நாட்டவருக்கு சுமார் 33000 விசாக்களே வழங்கப்படும். இதனால் இந்திய, சீன பின்னணி கொண்ட விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுவர் என்று நம்பப்டுகிறது.
கடந்த ஆண்டில் (2016 – 2017) நாட்டில் நிரந்தரமாக குடியேற அரசு வழங்கிய 44000 விசாக்களைப் பெற்றவர்கள்:
இந்தியா: 14484
சீனா: 6071
பிரிட்டன்: 3462
பாகிஸ்தான்: 3050
பிலிப்பின்ஸ்: 2697
மலேசியா: 1234
மொத்தமுள்ள நாற்பத்தி நான்காயிரம் விசாவில் சுமார் பத்தாயிரம் விசாக்கள் நியூசிலாந்து நாட்டவருக்கு வழங்கப்படுவதால் இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாக குறையும்.
முன்பு நியூசிலாந்து நாட்டவருக்கு ஆஸ்திரேலிய அரசு வேறொரு பிரிவின்கீழ் இத்தகைய விசாக்களை வழங்கிவந்தது என்றும் தற்போது அந்த பிரிவை விலக்கிவிட்டு அவர்களையும் பொதுப்பிரிவின் கீழ் கொண்டுவந்திருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தரமாக குடியேற இந்திய, சீன பின்னணி கொண்டவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கை குறையவுள்ளது.
Share
