ஆஸ்திரேலியாவில் சராசரியாக ஒவ்வொரு 26 நொடிக்கும் ஒருவர் ஆம்புலன்ஸ் சேவைக்காக 000 எனும் எண்ணை அழைக்கின்றனர். வாரத்தில் எழு நாட்கள் 24 மணி நேரம் அவசர மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும் பொழுது 000வை நாம் அழைக்கலாம்.
1.எப்பொழுது நாம் ஆம்புலன்சை அழைக்கலாம்?
திடீரென்று ஒருவர் மயங்கி விழும்போது, மார்பு பகுதி விரைத்து சுவாசிக்க சிரமப்படும்போது, சுயநினைவு இழந்து போகும்போது, கட்டுபடுத்த முடியாத ரத்தப்போக்கு, மோசமான வாகன விபத்து, திடீரென்று பக்கவாதம் ஏற்படும்போது, முதியவர்களுக்கு வலிப்பு வரும்போது, மோசமான தீக்காயம், அதிக காய்ச்சலினால் குழந்தைகளுக்கு வலிப்பு வரும்போது, துப்பாக்கி சூடு, கத்தி குத்து போன்ற அனைத்திற்கும் அவசர சிகிச்சை தேவைப்படும்போது உடனே 000வை நீங்கள் அழைக்கலாம். இவ்வகையான நிலைகளுக்கு தான் அம்புலன்சை அழைக்க வேண்டும் என்பது இல்லை உங்களுக்கு நோயாளியின் நிலை குறித்து நிச்சயம் இல்லாத பொழுதும் 000வை அழைப்பது நல்லது.
அதுமட்டுமல்ல, mobile, landline மற்றும் payphone என்று எல்லா வகையான தொலைபேசி வழியாகவும் இலவசமாக 000வை நீங்கள் அழைக்கலாம்.
2. அவசர உதவிக்கு 000வை அழைத்த உடன் என்ன நடக்கும்?
முதலில் அவசர உதவிக்கு 000வை அழைப்பவர்கள் அமைதியாக பதட்டம் இல்லாமல் அழைப்பை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் அழைத்தவுடன் Telstra ஆபரேட்டர் ஒருவர் உங்களுக்கு போலீஸ், தீ அல்லது ஆம்புலன்ஸ் சேவை வேண்டுமா என்று கேட்ப்பார். நீங்கள் ஆம்புலன்ஸ் என்று சொன்னவுடன் ஆம்புலன்ஸ் கட்டுபாட்டு நிலையத்துடன் இணைக்கப்படுவீர்கள். எவ்வகையான சிகிச்சை வழங்கவேண்டும் என்பதை தீர்மானிப்பதற்காக உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும்.
அவசர சிகிச்சை தேவைப்படுகின்றவரின் சரியான முகவரி - அவர் இருக்கும் இடத்தின் பெயர், தெரு பெயர், கதவு எண் மற்றும் அவரை இலகுவாக கண்டுபிடிக்க அந்த இடத்திற்கு அருகமையில் உள்ள தெரு பெயர் அல்லது வேறு எதாவது முக்கிய அடையாளங்களை பொறுமையுடன் சொல்ல வேண்டும். அவசர சிகிச்சை தேவைப்படும் இடம் வீடாக இருக்கலாம் , நெடுஞ்சாலையாக இருக்கலாம், பெரிய ஷாப்பிங் நிலையமாக இருக்கலாம் ஆகவே நீங்கள் விபரமாக முகவரி கொடுத்தால் மட்டுமே ஆம்புலன்ஸ் உங்களை சரியாக வந்தடைய முடியும்.
நீங்கள் அழைக்கும் தொலைபேசி எண் - இத்தகவல் மிகவும் முக்கியம் ஏனெனில் ஆம்புலன்ஸ் வந்தடைவதற்கு முன்னர் வேறு தகவல்கள் தேவைப்பட்டால், கட்டுபாட்டு நிலையம் உங்களை தொடர்புகொள்ள இந்த எண் அவர்களுக்கு தேவைப்படலாம்.
ஆம்புலன்ஸ் சேவை உங்களிடம் பேசும்போது நோயாளிக்கு என்ன நடந்தது என்பதை துல்லியமாக, விரிவாகச் சொல்லுங்கள். நோயாளியின் வயது என்ன? அவர் சுயநினைவில் உள்ளாரா? அவரால் சுவாசிக்க முடிகிறதா? போன்ற கேள்விகளுக்கு முடிந்தவரை பதட்டப்படாமல் தெளிவாக பதில் சொல்லுங்கள்.
அழைப்பவர்கள் அனைவருக்கும் ஆம்புலன்ஸ் சேவை தேவைப்படாது. ஆகவே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் சொல்லும் பதிலை கொண்டு உங்களுக்கு எவ்வகையான சேவை தேவை என்பதை ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு நிலையத்தில் பயன்படுத்தப்படும் Medical Priority Dispatch System தீர்மானிக்கும்.
உயிர் அச்சுறுத்தும் மருத்துவ அவசரத்திற்கு உடனே ஒலி எழுப்பியுடன்(Siren) துணை மருத்துவ குழு கொண்ட ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும். இவ்வகையான சமயத்தில் உங்கள் அழைப்பை நீங்கள் துண்டிக்க கூடாது. ஏனெனில் விரைவாக உங்கள் இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்து சேர நீங்கள் வழி கூறி உதவ முடியும். மேலும் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன் நோயாளியின் நிலையை பொறுத்து கட்டுபாட்டு நிலைய அதிகாரி உங்களுக்கு சில மருத்துவ ஆலோசனைகள் வழங்கலாம் ஆகவே அழைப்பை துண்டிக்காதீர்கள்.
அவசர மருத்துவ உதவி தேவை, ஆனால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை எனும் தருணங்களில் ஒலி எழுப்பி இல்லாத துணை மருத்துவ குழு கொண்ட ஆம்புலன்ஸ் 30 முதல் 90 நிமிடங்களில் நீங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஆம்புலன்சிற்காக காத்திருக்கும் போது நோயாளியின் நிலை மோசமானால் உடனே மீண்டும் 000வை அழைக்க தயங்காதீர்கள்.
மருத்துவ சிகிச்சை தேவை ஆனால் அவசரமாக மருத்துவ சிகிச்சை தேவை இல்லை என்கின்ற போது மருத்துவ ஆலோசனை வழங்கும் மருத்துவ தாதியுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். இம்மருத்துவ தாதி தொலைபேசி வழியாக உங்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் எவ்வாறு நீங்கள் நோயாளியை மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லலாம் போன்றவைகளை சொல்லுவார். இச்சமயத்தில் நோயாளியின் நிலை மோசமாகி போனால் நீங்கள் உடனே அத்தாதியிடம் சொல்லவேண்டும். அவரால் உடனே உங்களை ஆம்புலன்ஸ் கட்டுபாட்டு நிலையத்துடன் இணைக்க முடியும்.
3. ஆம்புலன்சிற்கு காத்திருக்கும் வேளையில் நாம் செய்ய வேண்டியவை என்ன?
நோயாளியுடன் நீங்கள் இருக்கும் இடத்தை ஆம்புலன்சில் வருபவர்கள் இலகுவாக கண்டுபிடிக்க, நீங்கள் இருக்கும் இடத்திற்கு வெளியே ஒருவரை நிறுத்தி வைத்து ஆம்புலன்சுக்கு சமிக்கை காட்ட சொல்லுங்கள்.
ஸ்ட்ரெச்சர் போன்றவைகளை நோயாளி இருக்கும் இடத்திற்கு இலகுவாக கொண்டுவரும் வகையில் வழியிடங்களை அப்புறப்படுத்தி வையுங்கள்.
வீட்டில் செல்ல பிராணிகள் இருந்தால் அவைகளை கட்டி போடுங்கள்.
நோயாளிக்கு தேவையான துணிகளை சிறிய பையில் எடுத்து வையுங்கள்.
நோயாளி உட்கொள்ளும் மருந்து பட்டியலை எடுத்து வையுங்கள். நோயாளி குழந்தையாக இருக்கும் பட்சத்தில் குழந்தையின் மருத்துவ புத்தகம் Blue Bookயை எடுத்து வையுங்கள்.
நோயாளிக்கு ஒவ்வாமை (Allergies) இருந்தால் ஆம்புலன்சில் வரும் மருத்துவரிடம் தெரிவிக்க மறக்க வேண்டாம்.
குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களின் தொலைபேசி இலக்கங்களை தயார்ப்படுத்தி வையுங்கள்.
Medicare மற்றும் Health Card ஆகியவைகளை எடுத்து வையுங்கள்.
விலையுர்ந்த பொருட்களை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டாம்.
வீட்டு சாவியை மறக்காமல் எடுத்து வையுங்கள். வீட்டு பின்புற கதவு, ஜன்னல் ஆகியவைகளை சரியாக மூடுங்கள். மின்சார சதனங்கள் எதுவும் போட்டபடி இருந்தால் அவைகளை அணைத்து வையுங்கள்.
நோயாளியுடன் மருத்துவமனைக்கு போக நீங்களும் தயாராக இருங்கள்.
4. ஆம்புலன்சில் செல்வதன் மூலம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் முன்னுரிமை தரப்படுமா?
நிச்சயமாக இல்லை. ஆம்புலன்சில் சென்றால் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அவசர சிகிச்சை பிரிவிற்கு வரும் நோயாளிகளின் மருத்துவ தேவைகளைப் பொறுத்தே அவர்கள் கவனிக்கப்படுவார்கள் அல்லது முன்னுரிமை தரப்படுவார்கள்.
5. ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டுமா?
ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் உள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ள சுகாதார அமைச்சகம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கட்டணம் இல்லை. அதேபோல் நீங்கள் "Ambulance only" தனியார் மருத்துவ காப்பீடு வைத்திருந்தாலும் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
இந்த தகவல்களை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் துரிதமாக செயல்பட்டால் ஒருவரின் உயிரை காப்பாற்ற முடியும்.