ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் Peter Dutton, இரு ஆப்கான் அகதிகளின் citizenship-குடியுரிமை விண்ணப்பங்களின் மீதான முடிவை எடுப்பதற்கு நியாயமான காரணமின்றி நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டதாக Federal நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த இரு விண்ணப்பங்களையும் நிராகரித்தமை தவறு என்றும் இம்முடிவு செல்லுபடியாகாதென்றும் Federal நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
ஆப்கானிலிருந்து வந்து புகலிடம் கோரிய இரு Hazara அகதிகள், நிரந்தர வதிவிடம் பெற்று கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்த நிலையில் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் ஒருவரது விண்ணப்பத்தின் மீதான முடிவு 18 மாதங்களின் பின்னர் வழங்கப்பட்ட, அதேநேரம் மற்றவருக்கு 23 மாதங்களின் பின்னர் வழங்கப்பட்டிருந்தது.
மேலும் இவர்களில் ஒருவரது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாமலிருந்ததாகவும் மற்றவரது நடத்தையில் தமக்கு திருப்தி இல்லை எனவும் கூறி இவர்களுக்கான குடியுரிமை, குடிவரவு அமைச்சர் Peter Dutton-ஆல் மறுக்கப்பட்டிருந்தது.
இந்தப் பின்னணியில் குறித்த இரு அகதிகள் சார்பில் Refugee Council of Australia அமைப்பு சில சட்டத்தரணிகளின் உதவியுடன் தாக்கல் செய்திருந்த வழக்கின் மீதான தீர்ப்பே நேற்று வழங்கப்பட்டது.
இதேவேளை ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கும் விடயத்தில் அகதிகளுக்கு சாதகமாக வந்துள்ள இத்தீர்ப்பானது, குடியுரிமை பெறுவதற்காக காத்திருக்கும் பல அகதிகளுக்கு நம்பிக்கையளிக்கும் ஒன்று என அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Share