மெல்பேர்ன் நகரை பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான சிறப்புப் பொறிமுறைகளை விக்டோரிய மாநில முதல்வர் Daniel Andrews அறிவித்துள்ளார்.
இதன்படி பாதசாரிகள் மீது வாகனங்களை மோதி தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் வகையில் மெல்பேர்ன் நகருக்குள் சனநடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் concrete bollards- சிறியதூண்கள் நிலைநிறுத்தப்படவுள்ளன. முதலில் தற்காலிகமாக நிலைநிறுத்தப்படும் இத்தூண்கள் பின்னர் நிரந்தரமாக நிறுவப்படவுள்ளன.
Federation Square, Bourke Street உட்பட மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் இப்பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்படுவதாக முதல்வர் Daniel Andrews தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக CCTV கண்காணிப்பு கமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் அதேநேரம் அபாய ஒலி எழுப்பும் Siren-களும் பொருத்தப்படவுள்ளன.
மெல்பேர்ன் நகரின் பாதுகாப்பு மேம்பாட்டுக்கென 10 மில்லியன் மேலதிக நிதி செலவிடப்படவுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் மெல்பேர்ன் நகரின் Bourke Street-இல் காரால் மோதி 6 பேர் கொல்லப்பட்டமை, லண்டன் தாக்குதல்கள் மற்றும் சில தினங்களுக்கு முன்னர் Brighton-இல் நடந்த சம்பவம் ஆகியவற்றையடுத்து இப்பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை விக்டோரிய அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
