மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்ட சுமார் 1900 ஆண்களுக்கு ஆஸ்திரேலிய அரசிடமிருந்து நஷ்டஈடு கிடைக்கக்கூடும் என ஏபிஸி செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த தீவில் நவம்பர் 2012 முதல் டிசம்பர் 2014 வரை தடுத்து வைக்கப்பட்ட 1905 ஆண்கள், அங்கு தாம் நடத்தப்பட்ட முறை தொடர்பில், ஆஸ்திரேலிய குடிவரவுத்திணைக்களத்திற்கெதிராக class action எனப்படும் கூட்டு சட்டநடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இவ்வழக்கு விசாரணை நாளை ஆரம்பமாகவுள்ளது.
விக்டோரிய நீதிமன்றில் ஆரம்பமாகும் இவ்வழக்கை Slater and Gordon சட்ட நிறுவனம் எடுத்து நடத்துகின்றது.
ஆனால் இந்த வழக்கு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே, நஷ்டஈடு வழங்குவதற்கான இணக்கப்பாடு ஒன்றுக்கு அரசு வரக்கூடுமென்றும், இதன்மூலம் கணிசமான தொகையொன்று அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடுமென்றும் ஏபிஸி செய்தி தெரிவிக்கின்றது.
மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களால், குடிவரவுத் திணைக்களத்திற்கெதிராக தொடரப்பட்ட பல நஷ்டஈடு கோரல் வழக்குகள், நீதிமன்றுக்கு வெளியிலேயே தீர்த்துவைக்கப்பட்ட சம்பவங்கள், கடந்த 2015 முதலே இடம்பெற்றுவருவதாக ஏபிஸி தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த 1905 பேருக்கும் அரசு நஷ்டஈடு வழங்கும்பட்சத்தில், ஆஸ்திரேலிய சட்ட வரலாற்றிலேயே மனித உரிமைகளை அடிப்படையாக வைத்து நஷ்டஈடு வழங்கப்படும், முதலாவது மிகப்பெரிய சம்பவமாக இது அமையுமென்பது குறிப்பிடத்தக்கது.
Share
