வரி செலுத்தாமல் “கையில் காசு” எனப்படும் 'cash-in-hand' முறையில் தமக்கு சம்பளம் தருவதாக 5500க்கும் அதிகமான பணியாளர்கள் ATO-வரித்திணைக்களத்திடம் புகார் தந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக, புகார் தந்தவர்களில் 95 வீதமானோர் தமது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பொதுமக்கள் புகார் தருவதுபோன்று தகவல் தந்துள்ளனர்.
மற்றொரு பக்கம் 2813 பேர் தமக்கு Superannuation கட்டப்படுவதில்லை என்றோ அல்லது குறைந்தளவான தொகையே Superannuationஆக கட்டப்படுகிறதென முறையிட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் தாம் நிரந்தர பணியாளர்களா அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களா என்ற விபரத்தைக் கூட பல தொழில்வழங்குநர்கள் சொல்வதில்லை எனவும் இன்னொருசாரார் முறையிட்டுள்ளனர்.
இப்படியாகப் பல வழிகளில் பணியாளர்கள் சுரண்டலுக்குள்ளாகின்றமை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பல நிறுவனங்களின் கணக்குகள் Audit-ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருவதாக ATO தெரிவித்துள்ளது.
இதன்படி 2015-2016 காலப்பகுதியில், 127,000 வியாபார நடவடிக்கைகளை கண்காணித்து, அதில் 15,000 நிறுவனங்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, சுமார் 208 மில்லியன் டொலர்களை வரியாகவும் அபராதமாகவும் ATO பெற்றுள்ளது.
சிகை அலங்கார நிலையங்கள், அழகுச் சிகிச்சை நிலையங்கள், உணவகங்கள், கட்டுமானத்துறை மற்றும் சுத்திகரிப்புத்துறை உள்ளிட்டவற்றிலேயே இவ்வாறு 'cash-in-hand'க்கு பலர் வேலை செய்வதாகவும், அதிகளவு பணியாளர்கள் சுரண்டலுக்குள்ளாகுவதாகவும் தெரிவித்துள்ள ATO, தொடர்ச்சியாக தமது கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் நாடு முழுவதும் நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.
தமது கணிப்பின்படி நாடு முழுவதுமுள்ள 233 துறைகளைச் சேர்ந்த 1.6 மில்லியன் சிறிய மற்றும் பெரிய வர்த்தக நடவடிக்கைகள் இவ்வாறு இயங்குவதாக தெரிவித்துள்ள ATO, பல்லின கலாச்சாரப்பின்னணி கொண்ட தமது பணியாளர்கள் நேரடியாகப் பல வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்று கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளது.
Share
