SKIP TO MAIN CONTENT

ஒரு பொருளை மாற்றித்தர கடைக்காரர் மறுக்கிறாரா? இந்த முறையை முயற்சித்துப்பாருங்கள்!

AAP
Source: AAP-Sam Mooy

2 min read

Published

Source: SMH



Skip to article content

நீங்கள் வாங்கிய ஏதாவதொரு பொருளில் பழுது இருந்தும் அதை மாற்றித்தர கடைக்காரர் மறுத்தால் நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரச் சொல் 'Australian Consumer Law'-ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டம்.

ஒரு பொருளை நாம் வாங்கும் போது, manufacturer's warranty - அதைத் தயாரித்த நிறுவனத்தால் வழங்கப்படும் உத்தரவாதத்துடன் சேர்த்து, consumer guarantee-யும் சேர்ந்துகொள்வது பலருக்குத் தெரிவதில்லை.

உதாரணமாக ஒரு கைபேசியை வாங்கும் பொழுது அது பாவனைக்கு உகந்ததாக பிழையின்றி செயற்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாதபட்சத்தில் அதை மாற்றி வேறொரு புதிய கைபேசி கொடுக்க வேண்டும், அல்லது சிறிய பிழை என்றால் இலவசமாக திருத்திக் கொடுக்க வேண்டும், அல்லது பணத்தை மீளக் கொடுக்க வேண்டும்.(வெறுமனே அந்தப் பொருள் பிடிக்கவில்லை என்றால் இச்சட்டம் பொருந்தாது).

ஆனால் சில வேளைகளில் பழுதுள்ள பொருளை நீங்கள் கடைக்கு எடுத்துச் செல்லும் போது 2 பதில்கள் உங்களுக்குக் கிடைக்கக்கூடும்.

1."மன்னிக்கவும். இந்தப் பொருளுக்கு அதன் தயாரிப்பு நிறுவனம் வழங்கிய உத்தரவாதம்-manufacturer's warranty முடிவடைந்துவிட்டது. அதனால் நாம் ஒன்றும் செய்ய முடியாது"

ஆனால் தயாரிப்பு நிறுவனம் வழங்கிய உத்தரவாதம் வேறு, consumer guarantee என்பது வேறு. சிலவேளைகளில் குறித்த பொருளுக்கான consumer guarantee முடிவடையாமல் இருக்கலாம் என்பதால் அதைப்பற்றி கடைக்காரரிடம் கேளுங்கள்.

2. "இந்தப் பொருளை அதன் தயாரிப்பு நிறுவனத்திடம்தான் நீங்கள் கொண்டுசெல்ல வேண்டும்"

ஆனால் பழுதுள்ள ஒருபொருளை நீங்கள் எங்கு வாங்கினீர்களோ அவர்கள்தான் அதற்கான மாற்றுத்தீர்வை வழங்க வேண்டும்.

அதேநேரம் ஒரு பொருளை வாங்கும் போது நீங்கள் கூடுதலாகப் பணம் செலுத்தி extended warranty-ஐ பெற்றுக்கொண்டால், 12 மாதங்கள் முடிந்த பிறகும் அந்தப் பொருளுக்கான உத்தரவாதம் தொடரும் என்று கடைக்காரர் கூறலாம்.

அப்படியென்றால் ஏற்கனவே ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டத்தின்கீழ் உள்ள உத்தரவாதத்திற்கு மேலதிகமாக extended warranty-யில் என்னென்ன அடங்கும் என கடைக்காரரிடம் கேட்கலாம்.

மேற்கூறிய சந்தர்ப்பங்களில் உங்களுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் அந்த நிறுவனத்திடம் நீங்கள் முறையிடலாம். அப்போதும் சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் Australian Competition and Consumer Commission - ACCC  யிடம் முறையிடலாம்.

வாங்கிய பொருட்களை மாற்றுவதில் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில், கடந்த ஆண்டு சுமார் 20,000 முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்ததாக ACCC  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now