நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத்திற்கெதிரான சட்டத்தின்கீழ் தனது ஆஸ்திரேலிய குடியுரிமையை இழக்கும் முதல் நபர் Khaled Sharrouf என தெரிவிக்கப்படுகின்றது.
சிரியாவில் ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து போராடும் Khaled Sharrouf-க்கு இரட்டைக்குடியுரிமை வழங்கப்பட்டிருந்தநிலையில், தற்போது அவரது ஆஸ்திரேலிய குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதன்மூலம் Khaled Sharrouf இனிமேல் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது.
கடந்த 2013ம் ஆண்டு தனது சகோதரரின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சிரியா சென்ற Khaled Sharrouf அங்குள்ள ஐஎஸ் அமைப்பினருடன் இணைந்து போராடிவருகின்றமை புகைப்பட ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் துண்டிக்கப்பட்ட தலையை வைத்திருந்த Sharrouf-இன் மகனது புகைப்படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை வெளிநாட்டில் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள ஒருவரின் ஆஸ்திரேலியக்குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள குடிவரவுத்திணைக்களம், அது யாருடையது என்ற பெயரை வெளியிடவில்லை.
வெளிநாடுகளில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களின் ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பறிப்பது என்ற தீர்மானம் கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share
