ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகளுக்கு படகு மூலம் பயணத்தை மேற்கொள்ளவிருந்த 34 பேர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு மீண்டும் படகுகள் புறப்பட ஆயத்தமாவதற்குக் காரணம் லேபர் கட்சியினரே என பிரதமர் Scott Morrison குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி 4ம் திகதி படகுப் பயணம் மேற்கொள்வதற்கு சற்று முன்னதாக 34 பேரும் கைதுசெய்யப்பட்டதாகவும், ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 11 பெண்கள் 7 சிறுவர்கள் மற்றும் 3 ஆட்கடத்தல் முகவர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.
ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்துக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள் என ஆட்கடத்தல்காரர்கள் தம்மிடம் வாக்குறுதியளித்திருந்ததாக குறித்த படகில் பயணம் செய்யவிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நடைபெறவுள்ள தேர்தலில் லேபர் கட்சி வெற்றிபெற்றால் மீண்டும் படகுகள் வர ஆரம்பிக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனத் தெரிவித்துள்ள பிரதமர் Scott Morrison, லேபர் கட்சி ஆஸ்திரேலியாவின் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு குந்தகம் ஏற்படும்வகையில் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினார்.
எனினும் இக்குற்றச்சாட்டினை மறுத்துள்ள லேபர் கட்சித் தலைவர் Bill Shorten, தாம் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கை தொடர்ந்தும் பேணப்படும் என தெரிவித்துள்ளார்.
Share
