ஆஸ்திரேலியாவிற்கு வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் கல்வித்துறை மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
குறிப்பாக சர்வதேச மாணவர்கள் ஆண்டொன்றுக்கு நாட்டின் பொருளாதாரத்தில் 19 பில்லியன் டொலர்கள் பங்களிப்புச் செலுத்துகின்றனர்.
இதற்கு காரணம் ஆஸ்திரேலிய அரசால் வழங்கப்படும் வேலை செய்வதற்கான அனுமதியுடன் கூடிய மாணவர் விசாக்கள் ஆகும்.

Source: AAP
ஆனால் இதுவே பல சர்வதேச மாணவர்களின் உழைப்பு சுரண்டலுக்குள்ளாகுவதற்கும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இதிலிருந்து மாணவர்கள் எப்படித் தப்பிக்கலாம் என்று பார்ப்போம்.
நாட்டில் தற்போது 330,000 சர்வதேச மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்கள் கல்விகற்றுக்கொண்டிருக்கும் போது இருவாரங்களுக்கு 40 மணித்தியாலங்களும் விடுமுறைக்காலத்தின்போது எத்தனை மணிநேரங்கள் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.

Source: AAP
ஆஸ்திரேலிய சட்டத்தின்படி பணியிடங்களில் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் அனைத்தும் சர்வதேச மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதற்குள் வருடாந்த விடுமுறை, பொது விடுமுறைகள் என பல அம்சங்கள் அடங்குகின்றன.
ஆனால் சில நேர்மையற்ற முதலாளிகள் சர்வதேச மாணவர்களை பணிச்சுரண்டல்களுக்கு உள்ளாக்குவதாக CISA ஆஸ்திரேலிய சர்வதேச மாணவர் பேரவையின் தலைவர் Nina Khairina சொல்கிறார்.

Source: AAP
குறிப்பாக ஒப்பந்தம் எதுவுமின்றி மாணவர்களை வேலைக்கமர்த்துதல், ஆகக்குறைந்த ஊதியத்தொகையைக்கூட வழங்காதிருத்தல், சம்பளப் பற்றுச்சீட்டு வழங்காமை உட்பட பலவிதங்களில் மாணவர்கள் ஏமாற்றப்படுவதாக Nina Khairina கூறுகின்றார்.
எனினும் பணத்தேவை அதிகம் இருப்பதால் தாம் சுரண்டலுக்குள்ளாவதையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் வேலை செய்வதாகக் குறிப்பிடும் அடிமைத்தனத்திற்கெதிரான அமைப்பான Anti-Slavery Australia வின் நிர்வாகி Jennifer Burn தமது அமைப்பு பாதிக்கப்படும் மாணவர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குவதாக தெரிவிக்கிறார்.
இதேவேளை மாணவர்கள் சுரண்டலுக்குள்ளாவதை வெளிக்கொண்டுவந்த முக்கிய சம்பவங்களில் ஒன்று 7-Eleven நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடியாகும்.
இதுபோல இன்னும் பல இடங்களில் வேலை செய்யும் 60 வீதமான மாணவர்களின் உழைப்பு சுரண்டலுக்குள்ளாவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.
ஆஸ்திரேலியச் சட்டத்தின்படி ஒருவருக்குக் கொடுக்கப்படவேண்டிய ஆகக்குறைந்த சம்பளம் 17.29 டொலர்கள் ஆகும்.

Source: AAP
இதற்குக் குறைவாக சம்பளம் வழங்கப்பட்டாலோ அல்லது பணியிடங்களில் வேறு வகைகளில் சுரண்டலுக்குள்ளாக்கப்பட்டாலோ மாணவர்கள் தயங்காமல் தம்மைத் தொடர்பு கொள்ள வேண்டுமென Fair Work அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் தாம் பணிபுரிந்த மணிநேரங்களை பதிவு செய்து வைத்து அதற்கேற்ப தமக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை மாணவர்கள் கவனிக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவின் சட்ட திட்டங்கள், பணியிடப்பாதுகாப்பு, விசா நிபந்தனை போன்றவை தொடர்பில் மாணவர்களுக்கு போதிய விளக்கமின்மையே அவர்கள் சுரண்டலுக்குள்ளாகுவதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே இவை தொடர்பில் அறிந்து கொள்வதற்கு சர்வதேச மாணவர்கள் முதலில் நாட வேண்டியது Fair Work Ombudsman இணையத்தளமாகும். இங்கே 26 மொழிகளில், வேலை செய்யும் மாணவர்களுக்கு இருக்கும் உரிமைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பணியிடங்களில் தாம் ஏமாற்றப்படுவதாக உணரும் சர்வதேச மாணவர்கள் Fair Work Ombudsman ஐ தொடர்பு கொள்ளலாம். மொழிப்பிரச்சினை இருந்தால் 131 450 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் Fair Work அமைப்பின் மொழிபெயர்ப்பு வசதியையும் பெற்றுக் கொள்ளலாம்.

Source: AAP