Tax return செய்யும் காலம் இது. பலர் உங்கள் Tax return-ஐ செய்திருப்பீர்கள். இன்னும் பலர் செய்ய ஆயத்தமாயிருப்பீர்கள். கடந்த ஜுன் 30ம் திகதி முதல் தாக்கல் செய்யப்பட்ட Tax return விண்ணப்பங்களில் ஆஸ்திரேலிய வரித்திணைக்களத்தினால் செலவுகளாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என நிராகரிக்கப்பட்ட சில அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. Railway guard ஒருவர் தனது காரை பணி நிமித்தம் பயன்படுத்திய செலவாக 3700 டொலர்களை காண்பித்துள்ளார். தனது வேலையுடன் சம்பந்தப்பட்ட பாரமான பொருட்களை வீட்டுக்கும் வேலையிடத்திற்கும் மாறி மாறி ஏற்றிச் சென்றதாக அவர் சொன்னதாகவும் அந்தப் பொருட்களை அவர் அலுவலகத்திலேயே வைத்திருக்கலாம் என்பதை ATO கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
2.உயர்தர விடுதி ஒன்றில் வேலை செய்யும் Wine நிபுணர் ஐரோப்பாவுக்கு உல்லாசப் பயணம் சென்றுவிட்டு தான் wine சம்பந்தமாக ஆராய்வதற்கே அங்கு சென்றதாகக்கூறி பல ஆயிரம் டொலர்களை செலவாகக் காட்டியுள்ளார். ஆனால் ATO அவரது முதலாளியுடன் பேசி அவர் தனிப்பட்ட பயணமாகவே ஐரோப்பா சென்றிருந்தார் என்பதைக் கண்டறிந்துவிட்டது.
3.மருத்துவர் ஒருவர் மாநாடு ஒன்றிற்காக தான் அமெரிக்கா சென்றதாக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். ஆனால் அந்த மாநாடு நடைபெற்ற போது அவர் ஆஸ்திரேலியாவில் இருந்தார் என்பதை ATO கண்டறிந்துவிட்டது. பிறகென்ன தண்டப்பணத்தையும் சேர்த்து கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
4.ஒருவர் car expenses கார் சம்பந்தப்பட்ட செலவுகளைக் காட்டுவதற்கு note book ஒன்றில் எப்போது எத்தனை கிலோமீட்டர்கள் ஓடினார் என்பதைப் பதிந்து வைத்திருந்தார். ஆனால் அவை பொய்யான தகவல்கள் என்றும் அதற்கான Toll road பதிவுகள் இல்லை என்றும் சில நேரங்களில் அவர் நாட்டிலேயே இருந்திருக்கவில்லை என்றும் ATO குறிப்பிட்டுள்ளது.
5.ஒருவர் தான் படிப்பதற்கான அமைதியான சூழல் வேண்டுமென்பதற்காக தனது வீட்டை விடவும் இன்னொரு இடத்தை வாடகைக்கு எடுத்ததாகக்கூறி 57,000 டொலர்களை செலவாக காட்டியுள்ளார். அத்துடன் தனது புத்தகங்களை நிறுவனம் ஒன்றில் சேமித்து வைத்ததற்கான செலவாக 7,500 டொலர்களை குறிப்பிட்டுள்ளார். இவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள ATO அவர் மேற்கொண்ட கல்விக்கான வருடச்செலவே வெறும் 1200 டொலர்கள் என்பதைக்கூட கண்டறிந்துவிட்டது.
ஒவ்வொரு வரி ஆண்டிலும் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் சுமார் 21 பில்லியன் டொலர்களை வேலை சம்பந்தப்பட்ட செலவுகளாகக் காட்டுகின்றனர்.
இந்தப்பின்னணியில் பொய்யான செலவுகளைக் காட்டுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அதை கண்டுபிடிக்கும் பட்சத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ATO- வரித்திணைக்களம் எச்சரித்துள்ளது.
