ஆஸ்திரேலியாவிலுள்ள இணைய மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களின் metadata எனப்படும் தரவுகளின் தரவுகளை 2 வருடங்களுக்கு சேகரித்து வைக்க வேண்டுமென்ற புதிய சட்டம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
Metadata என்பது நீங்கள் எந்த இணையத்தை எப்போது பார்த்தீர்கள், யாருடன் எப்போது பேசினீர்கள், யாருக்கு எப்போது குறுஞ்செய்தி அனுப்பினீர்கள் என்பன உள்ளிட்ட பல தரவுகளின் தரவுகள் ஆகும்.
கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்படி இணைய மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் சேகரித்து வைக்கப்படும் தரவுகள், காவல்துறை மற்றும் புலனாய்வுத்துறையினரின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுமென குறிப்பிடப்பட்டது.
ஆனால் இவ்வாறு சேகரித்து வைக்கப்படும் தரவுகளை சிவில் வழக்குகளுக்கும் பயன்படுத்த அரசு திட்டமிடுவதாகவும், இது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் The Attorney-General’s Department அறிவித்துள்ளது.
இதன்படி நீங்கள் ஒரு சிவில் வழக்கை எதிர்கொண்டால், உங்களது தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் உட்பட பல தரவுகள் உங்களுக்கு எதிராகவோ சாதகமாகவோ சாட்சி சொல்லக்கூடும்.
இவ்விடயத்தில் பொதுமக்கள் தமது கருத்துக்களை CommunicationsSecurity@ag.gov.au என்ற மின்னஞ்சலூடாக ஜனவரி 27ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கலாம்.
Share
