Watch FIFA World Cup 2026™ LIVE, FREE and EXCLUSIVE

விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டதற்கான சில விசித்திரமான காரணங்கள்!

twitter

Source: Twitter

உலகின் பாதுகாப்பான பயண முறைகளில் விமானப்பயணமும் ஒன்று. எதிர்பாராத விபத்துக்களைத் தாண்டி  இயந்திரக் கோளாறு, பயணிகளின் உடல்நலம் பாதிக்கப்படுதல், தீவிரவாத அச்சுறுத்தல் என பல நியாயமான காரணங்களால் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்படுவதுண்டு. ஆனால் கடந்த ஆண்டுகளில் சில விந்தையான, அசாதாரணமான காரணிகளாலும், பல தடவைகள் விமானம் தரையிறக்கப்பட்டிருக்கிறது. அவை என்னவென்று பார்ப்போம்.

1. விமானத்தினுள் பயணிகளுடன் சேர்த்து பாம்பு போன்ற எதிர்பாராத விருந்தாளிகள் சேர்ந்து கொள்வதாலும் விமானம் தரையிறக்கப்படுவதுண்டு. கடந்த ஆண்டு மெக்ஸிக்கோ விமானமொன்றுக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தது.

2. 2013ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயோர்க் சென்று கொண்டிருந்த விமானத்தினுள், Whitney Houston-இன் I Will Always Love You என்ற பாடலை, பயணிகளின் காதில் இரத்தம் வராத குறையாக ஒரு பெண் பயணி தொடர்ந்து பாடிக்கொண்டிருக்க, வேறுவழியில்லாமல் விமானம் இடையில் தரையிறக்கப்பட்டது.

Public domain
Source: Public Domain

3. விமானத்தினுள் குடிபோதையில் இருக்கும் பலர் குழப்பங்கள் ஏற்படுத்த முனைவதுண்டு. ஆனால் நிதானமாக இருந்த ஒருவர் விமானத்தில் சிற்றுண்டிகள் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டிலில் ஏறி விளையாடியதுடன், அதைத் தடுக்க முற்பட்டவர்களுடன் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,கடந்த ஆண்டு துபாயிலிருந்து கேரளா சென்றுகொண்டிருந்த விமானமொன்று மும்பையில் தரையிறக்கப்பட்டது

 

4. 2011ம் ஆண்டு பரிஸிலிருந்து டப்ளின் புறப்பட்ட விமானத்திலிருந்த Gerard Depardieu என்ற பிரெஞ்சு நடிகர், விமானம் புறப்பட்ட போது சிறுநீர் கழிக்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறார். ஆனால் சீட் பெல்ட் கட்டாயம் போட்டிருக்க வேண்டுமென்பதால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. உடனே போத்தல் ஒன்றினுள் சிறுநீர் கழிக்க முற்பட்ட Gerard Depardieu,  தரையையும் அசிங்கப்படுத்த, உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே விமானம் திரும்பியது.

Gérard Depardieu
Source: Gérard Depardieu

5. விமானத்தினுள் ஏற்படும் சகிக்க முடியாத துர்நாற்றமும் சில வேளைகளில் அவசர தரையிறக்கத்திற்குக் காரணமாவதுண்டு. 2015ம் ஆண்டு லண்டலிருந்து துபாய் சென்று கொண்டிருந்த விமானத்தில் வயிற்றுக்கோளாறால் அவதிப்பட்ட யாரோ ஒரு பயணியால் விமானத்தின் கழிவறையொன்றிலிருந்து தாங்க முடியாத துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. விமானப் பணியாளர்களால் அந்த துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியாமல் போக 'Smelly poo' காரணத்தால் விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில் திரும்பவும்  தரையிறக்கப்பட்டது.

british airways
Source: british airways

6. விமானத்தின் கழிவறைகளில் அடைப்பு அல்லது பழுது ஏற்படும்பட்சத்தில் குறித்த விமானம் தரையிறக்கப்படும்.

இந்தக் காரணத்தால் கடந்த ஆண்டு ரொறன்டோவிலிருந்து பாகிஸ்தான் சென்று கொண்டிருந்த விமானம் இடையில் தரையிறக்கப்பட்டிருந்தது.

7. பறந்து கொண்டிருக்கும் விமானத்தின் எஞ்சின்களில் பறவைகள் மோதும் சம்பவங்கள் பல தடவைகள் நேர்ந்திருக்கின்றன. கடந்த வருடமும் ஒரே நாளில் இரு விமானங்கள் பறவைகள் மோதியதால் தரையிறக்கப்பட்டன. அதேநேரம் 2009ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு விமானத்தை பறவைக் கூட்டம் தாக்கியதில், அந்த விமானத்தின் எஞ்சின்கள் செயலிழக்க, குறித்த விமானத்தை ஹட்சன் ஆற்றினுள் இறக்கினார் விமானி. இதனால் 155 பேர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து Sully என்ற ஆங்கிலத் திரைப்படமும் அண்மையில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

US Airways flight 1549
Source: Public Domain

8. சமய ஒழுங்கைப் பின்பற்றும்போது யூதர்கள் அணிந்துகொள்ளும் Tefillin எனப்படும் கருப்புத் தோலினாலான பெட்டியை ஒருவர் வைத்திருக்க, அது சந்தேகத்திற்கிடமான பொருளாகக் கருதப்பட்டு, அமெரிக்காவின் நியூயோர்கிலிருந்து லூயிஸ்வில் சென்றுகொண்டிருந்த விமானம், கடந்த 2010ம் ஆண்டு அவசர அவசரமாக ஃபிலடெல்பியாவில் தரையிறக்கப்பட்டது.

Tefillin
Source: Tefillin


2 min read

Published

Presented by Renuka.T



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now