கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலங்களில் திருடர்கள் தமது கைவரிசையை அதிகமாக காண்பிப்பதுண்டு.
வீடுகளுக்குள் நுழைந்து திருடுதல், பரிசுப் பொதிகளின் பெயரால் மோசடி, Online மற்றும் கடனட்டை மோசடி என பலவகையான மோசடிகளுக்கு நாம் ஆளாக நேரிடலாம்.
Crime Statistics Agency தரவுகளின்படி கிறிஸ்மஸ் விடுமுறை நாட்களில் மட்டும் ஒரு நாளைக்கு 160 திருட்டு அல்லது break-in சம்பவங்கள் பதிவாகின்றன.
அந்தவகையில் விடுமுறை நாட்களில் வீடுகளில் இல்லாமல் வெளியில் செல்லும் போது நமது வீடுகளை திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்கான சில குறிப்புகள்.
1. உங்கள் வீட்டிற்கு வெளியே வாகனம் ஒன்றை நிறுத்தி வைக்கலாம். அது சாத்தியமில்லை எனில் உங்கள் அயலவர்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள் இருந்தால் அவற்றில் ஒன்றை உங்களது drivewayயில் நிறுத்தச் சொல்லலாம். இதன்மூலம் வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முடியும்.
2. பரிசுப்பொதிகளை உங்கள் அலுவலகத்திற்கோ அல்லது தபால் நிலையத்திற்கோ அனுப்புமாறு கோரலாம். இதன்மூலம் பரிசுப்பொதிகள் களவு போவதைத் தடுக்க முடியும் என்பதுடன் பரிசுப் பொதிகளின் பெயரால் இடம்பெறும் மோசடிகளையும் தடுக்கலாம்.
3. வீட்டை திருடர்களிடமிருந்து பாதுகாப்பதில் மிக முக்கியமாக உதவக்கூடியது Home alarm system ஆகும். சொந்தவீடு என்றால் நல்ல நிறுவனம் ஒன்றினூடாக இதனைப் பொருத்தலாம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் உங்கள் வீட்டின் சொந்தக்காரரிடம் இதற்கான கோரிக்கையை முன்வைக்கலாம். ஒவ்வொரு தடவை வீட்டைவிட்டுச் செல்லும் போதும் Home alarm system இயங்கு நிலையில் இருக்கிறதா என உறுதிப்படுத்தவும்.
4. வீட்டின் அஞ்சல்பெட்டி கவனிப்பாரற்று இருந்தால் திருடர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். எனவே விடுமுறையில் செல்வதற்கு முன்னர் அயலகத்தவர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ உங்கள் அஞ்சல் பெட்டியில் கடிதங்களும் பேப்பர்களும் நிரம்பி வழியாமல் பார்த்துக்கொள்ளுமாறு கேட்கலாம்.
5. வீட்டினுள்ளிருக்கும் தொலைபேசி மணியின் ஒலி அளவைக் குறைத்து விடலாம். தொலைபேசி மணி ஒலித்துக் கொண்டே இருந்தால் வீட்டில் யாரும் இல்லை என்பது இலகுவாகத் தெரிந்துவிடும்.
6. Dummy-போலி கண்காணிப்பு கமராக்களை திருடர்கள் இலகுவாக கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற போதிலும் சிலநேரங்களில் அது கைகொடுக்கக்கூடும்.
7. Automatic timers-ஐப் பயன்படுத்தி குறிப்பிட்ட நேரங்களில் வீட்டினுள் மின்விளக்குகள் எரியும்படி பார்த்துக்கொள்ளலாம்.
8. வீட்டிற்கு வெளியே ladders, shovel, picks போன்ற திருடர்களுக்கு உதவக்கூடியதான பொருட்களை வைத்திருக்கக் கூடாது.
9. வீட்டைச்சுற்றி மரங்கள் வளர்ப்பதும் வேலி போடுவதும் ஒருபுறம் நல்லது என்றாலும் மறுபுறம் திருடர்களுக்கும் வசதியாகிவிடும்.
10. உங்கள் வீட்டினுள் என்னென்ன பொருட்கள் இருக்கிறதென்பது வெளியிலிருந்து பார்க்கும் போது தெரியக்கூடாது. எப்போதும் திரைச்சீலை அல்லது Blinds-ஐ மூடுவதற்கு மறக்கக்கூடாது.
Share