புதிதாக வேலை செய்ய ஆரம்பிப்பதென்பது பலருக்கும் மகிழ்ச்சியான, உற்சாகமான தருணம். ஆனால் வேலை தேடுவதென்பது சவாலான ஒன்று.
அதிலும் குறிப்பாக அகதி அல்லது புலம்பெயர் பின்னணி கொண்ட இளைஞர்களுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை தேடுவதென்பது எப்போதும் சவாலானதாகவே இருக்கின்றது.
இவர்களுக்கு பலதரப்பட்ட வேலைகளை திறம்படச் செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தாலும் அதைச் செய்ய முடியாமலிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
மட்டுப்படுத்தப்பட்ட ஆங்கில அறிவு மற்றும் வெளியிடங்களில் எதிர்கொள்ளும் இன மற்றும் மொழிப்பாகுபாடும் இவர்களுக்கு முன்னாலிருக்கும் பாரிய சவால்களாகும்.
இதன் காரணமாக இங்கு புதிதாக குடியேறுபவர்களில் பெரும்பாலானவர்கள் casual அடிப்படையிலேயே வேலைபார்ப்பதாக தாம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஏம்ஸ் அமைப்பின் Monica O´DWYER தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள் வேலை தேடுவதற்கான உதவிகளை ஏம்ஸ் அமைப்பு வழங்கிவரும்நிலையில் நல்லதொரு CV- சுயவிபரக் கோவையை தயாரிப்பதென்பது வேலை தேடுவதற்கு மிக முக்கியமான விடயமென்கிறார் ஏம்ஸ் அமைப்பின் Margaret Davis
நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட சுயவிபரக் கோவையை அனுப்பிய பின்னர் அடுத்தகட்டமாக உங்களை நேர்காணல்களுக்கு வருமாறு அழைப்பு வரலாம். எனவே அடுத்தகட்டமாக நேர்காணல்களை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும்.
ஆஸ்திரேலிய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் "Jobactive" ஊடாக உங்கள் CV-சுயவிபரக் கோவை தயாரிப்பது முதல் நேர்காணல்களை முகங்கொடுப்பதற்கான உதவிகள் வரை வழங்கப்படுகின்றன.
வேலை தேடுபவர்களுக்கு மட்டுமல்லாமல் வேலை வழங்குநர்களுக்குமான உதவகளையும் "Jobactive" செய்கின்றது.
பொதுவாக சென்டர்லிங்க் கொடுப்பனவில் தங்கி வாழ்பவர்கள் அனைவரும் "Jobactive" சேவையை பெற்றுக்கொள்ளத்தகுதி பெறுவர் என்ற போதிலும் ஒவ்வொருவரது சூழ்நிலையையும் பொறுத்து Department of Human Services இறுதித் தீர்மானத்தை எடுக்கும் எனச் சொல்கிறார் இந்த வலையமைப்பின் விக்டோரியா மாநில முகாமையாளர் ஏட்றியன் ஜென்கின்ஸ்.
"Jobactive" சேவை பற்றிய மேலதிக விபரங்களுக்கு https://docs.employment.gov.au/documents/jobactive-helping-you-find-work என்ற இணைப்பிற்கோ அல்லது https://jobsearch.gov.au/ என்ற இணையத்தளத்திற்கோ செல்லுங்கள்.