Settlement Guide: Migrant youth’s job search struggle
AAP Source: AAP
புதிதாக வேலை செய்ய ஆரம்பிப்பதென்பது பலருக்கும் மகிழ்ச்சியான, உற்சாகமான தருணம். ஆனால் வேலை தேடுவதென்பது சவாலான ஒன்று. அதிலும் குறிப்பாக பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட இளைஞர்களுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை தேடுவதென்பது எப்போதும் சவாலானதாகவே இருக்கின்றது. ஆஸ்திரேலியாவில் 15 முதல் 24 வயது வரையான இளைஞர்களில் வேலையற்றவர்களின் வீதம் 12.2 ஆக இருக்கிறதென 2015ம் ஆண்டுக்கான Brotherhood of St Laurence அறிக்கை சொல்கிறது. இதேவேளை நாட்டின் மொத்த இளைஞர்களில் 25 வீதமானவர்கள் அகதி அல்லது புலம்பெயர் பின்னணி கொண்டவர்கள். இவர்களுக்கு பலதரப்பட்ட வேலைகளை திறம்படச் செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தாலும் அதைச் செய்ய முடியாமலிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வேலைகளுக்கு எப்படி விண்ணப்பிப்பதென்பது பற்றிய அடிப்படை அறிவு இவர்களிடம் போதாமலிருப்பதே இதற்கு முக்கிய காரணமென Multicultural Youth Advocacy Network Australia(MYAN) அமைப்பின் தேசிய இணைப்பாளர் Nadine Liddy சொல்கிறார். புலம்பெயர் மற்றும் அகதிப் பின்னணி கொண்ட இளைஞர்கள் சந்திக்கும் இன்னுமொரு முக்கிய சிக்கல் மட்டுப்படுத்தப்பட்ட ஆங்கில அறிவாகும். அத்துடன் வெளியிடங்களில் எதிர்கொள்ளும் இன மற்றும் மொழிப்பாகுபாடும் இவர்களுக்கு முன்னாலிருக்கும் பாரிய சவால்களாகும். இதுதவிர போதிய முன் அனுபவம் இல்லாமையும் தொழில்சார் கல்வித்தகமை இல்லாமையும் இளைஞர்களுக்கு முன்னால் இருக்கும் அடுத்த முக்கிய பிரச்சினை. இதன்காரணமாக விவசாயம் சம்பந்தமான வேலைகள், பழத்தோட்டங்கள் மற்றும் உணவு விடுதி வேலைகளில் இளைஞர்கள் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவையெல்லாவற்றையும் விட கல்வி கற்றுக்கொண்டு வேலையும் பார்க்க வேண்டுமென்பது அடுத்த சாவால். இப்படி பல காரணிகள் ஆஸ்திரேலியாவில் இளைஞர்கள் வேலை தேடுவதில் சிக்கலை ஏற்படுத்துகின்றன. அப்படியென்றால் வேலை தேடுவதில் சிக்கல்களை எதிர்நோக்கும் இளைஞர்கள் எங்கே உதவி பெறலாம்? இதற்கு பல வழிகள் இருக்கின்றன. விக்டோரிய அரச இணையத்தளமான Youth Central website இல் வேலைகள் பற்றியும் அதற்கு எப்படி விண்ணப்பிப்பது, Resume-சுயவிபரக் கோவையை எப்படித் தயார் செய்வது போன்ற பல ஆலோசனைகள் இருக்கின்றன. அதேபோன்று நியூ சவுத் வேல்ஸ் அரசின் Family and Community Services website என்ற இணையத்தளத்தையும் பார்வையிடுங்கள். அத்துடன் ஆஸ்திரேலிய அரசின் வழிகாட்டல்கள் மற்றும் தகவல்களுக்கு myfuture website என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். இதுதவிர பல இடங்களில் Volunteer -தொண்டராக இணைந்து கொள்வதற்கு அல்லது Internship - உள்ளகப்பயிற்சி போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். இதனூடாக வேலை தேடும் இளைஞர்கள் பல விடயங்களைக் கற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதுடன் வேலை தேடும்போது பயனுள்ளதாகவும் அமையும்.
Share