ஆஸ்திரேலியாவில் கல்விகற்கும் வெளிநாட்டு மாணவர்களின் உளவள தேவைகள் குறித்து சரியான கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் உளவளத்துணை அமைப்புக்களை அவர்கள் நாடுவதற்குரிய வழிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்றும் விக்டோரிய மரண விசாரணை அதிகாரி Audrey Jamieson தெரிவித்துள்ளார்.
விக்டோரியாவில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட சீன மாணவி ஒருவரது மரண விசாரணைகளின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த விசாரணைகளின்போது தெரிவிக்கப்பட்ட தகவல்களின் படி, கடந்த 2009 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட ஆறு ஆண்டு காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்பதற்காக வந்த 27 வெளிநாட்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய நாட்டில் முகங்கொடுக்கும் மொழிப்பிரச்சினையும் தனிமையுணர்வும் இவர்களை பாரியளவில் இவ்வாறான முடிவுகளுக்கு இழுத்துச்செல்கிறது என்றும் இவர்களுக்குரிய உளவளத்துணை வழிகள் ஆஸ்திரேலியாவில் உள்ளபோதும் அவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதும் இவர்களுக்கு பெரும்பிரச்சினையாக இருந்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் 22 வீதமான வெளிநாட்டு மாணவர்களே தாங்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னைய ஆறுவார காலப்பகுதியில் இவ்வாறான உளவள துணை அமைப்புக்களை சந்தித்துள்ளார்கள். இதே காலப்பகுதியில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை ஆராய்ந்தபோது அவர்களில் 57 வீதமானவர்கள் இவ்வாறான உதவியை நாடியிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.