ஆஸ்திரேலிய பாடசாலைகளில் சீன மொழியை கற்கும் மாணவர்களின் தொகை மிகப்பெரியளவில் சரிவடைந்துவருவதாக ஆஸ்திரேலிய - சீன நட்புறவு மையம் தரவுகள் மூலம் உறுதி செய்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆஸ்திரேலிய பாடசாலைகளில் கல்வி கற்கும் சீனாவை பூர்வீகமாகக்கொண்ட மாணவர்களும் சரி, சீன பூர்வீகத்தை கொண்டவர்கள் அல்லாதவர்களும் சரி சீன மொழியில் அதிகம் நாட்டம் காட்டுவதாக தெரியவில்லை என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய பாடசாலையில் சீனாவை பூர்வீகமாக கொண்ட சுமார் 12 லட்சம் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். சீனாவுடன் ஆஸ்திரேலியா மிகப்பெரிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. இப்படியானதொரு நிலையில், சீனாவுடன் இறுக்கமான உறவுகளை பேணுவதற்கு அந்த நாட்டின் மொழியை கற்பதும் அந்த நாட்டினை அறிவதும் அத்தியாவசியமானது. ஆனால், அந்த நாட்டின் மொழியை கற்பதில் மாணவர்கள் காண்பிக்கும் நாட்டம் அதனை வெளிப்படுத்துவதாக தெரியவில்லை என ஆஸ்திரேலிய - சீன நட்புறவு மையத்தின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான Bob Carr தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்களில் 4129 மணவர்கள் தற்போது சீன மொழியை கற்கிறார்கள் என்றும் இவர்களில் 380 மாணவர்கள் மாத்திரமே சீனாவை பூர்வீகமாக கொண்டிராதவர்கள் என்றும் Bob Carr தெரிவித்துள்ளார். சீன மொழியை பாடசாலை மட்டத்திலிருந்து கற்பதற்கு மேற்கொள்ளவேண்டிய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆஸ்திரேலிய கல்வித்திட்டத்தினர் கவனம் செலுத்தவேண்டிய காலகட்டம் இது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.