ஆஸ்திரேலியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் டேவிட் ஃகிரிஃபின் (David Griffin), வட பிராந்தியத்தில் 15,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உருவாக்கும் ஒரு பண்ணையை உருவாக்கத் திட்டமிட்டிருப்பது உலகளாவிய வகையில் முதலீட்டாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. உருவாக்கப்படும் மின்சாரம் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்பது இதன் இன்னொரு சிறப்பு.
"உலகில் மிகப்பெரிய சூரிய ஒளி பயன்படுத்தும் பண்ணை இதுவாகும்," என்று Sun Cable தலைமை நிர்வாகி தெரிவித்தார். தூய்மையாக மின்சாரத்தை உருவாக்கி அதனை ஏற்றுமதி செய்யும் முதல் முயற்சி இதுவாகும்.
Infigen Energy என்ற நிறுவனத்தில் முன்னர் கடமையாற்றிய டேவிட் ஃகிரிஃபின், சுமார் 20 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவில், சூரிய மற்றும் காற்றாலை மின்சாரப் பண்ணைகளை உருவாக்கி வருகிறார்.

David Griffin (R) is behind the Sun Cable project (not pictured) Source: AAP/Sun Cable
பாலைவனப் பகுதியில் உருவாக்கப்படும் மின்சாரம், டார்வின் நகருக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து, கடலுக்கடியில் புதைக்கப்படும் 3,800 கிலோமீட்டர் நீளமான மின்கம்பிகளால், மின்சாரம் சிங்கப்பூருக்கு அனுப்பப்படும்.
“இது மிகவும் சிக்கலானதொரு பிரச்சினை. கடலுக்கடியிலுள்ள மின்கம்பிகளால் பல ஆபத்துகள் உள்ளன, அதனால்தான் முழு வடிவமைப்பு திட்டமிடப்பட்டு செயல்முறைக்கு வர நீண்ட காலம் எடுக்கும்,”என்று அவர் கூறினார்.
"மிக நீண்ட மின்கம்பிகளைக் கொண்ட திட்டம் இதுவாகும். ஆனால் இந்தக் கம்பிகள் கடலுக்கடியில் தாட்டப்படும் ஆழத்தை விட அதிகமான ஆழத்தில் கடலுக்கடியில் மின்கம்பிகள் ஏற்கனவே தாழ்த்தப்பட்டுள்ளன."

Construction work at a Solar Power Station supplied by 5B Solar Source: SBS
15 கிலோமீட்டர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த சூரிய பண்ணையில் 10 ஃகிகாவாட் (gigawatt) ஆலை மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து உருவாக்கும்.
வடபிராந்திய அரசு, மிக முக்கிய திட்டங்களில் ஒன்று என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ள இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுரம்பிகிறது. இந்தத் திட்டம் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஒப்புதல்கள் நிலுவையில் உள்ளன.
“ஆசியாவின் காடுகள் அழிக்கப்படுவதை யாரும் விரும்பவில்லை,” என்று டேவிட் ஃகிரிஃபின் கூறினார்.

The Sun Cable project aims to supply one fifth of Singapore's energy needs by the late 2020s. Source: AAP/ullstein bild
"காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுக்கு வழிவகுக்காத வகையில், உலகளாவிய பொருளாதாரத்தின் மின்மயமாக்கலைக் காண, நாம் ஏராளமான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பரந்த தூரங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி செய்தால் தான் இவை இரண்டும் சாத்தியமாகும்.”
சூரிய ஒளி அதிகமாகக் கிடைக்கும் ஆஸ்திரேலியாவின் வட பிராந்தியம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உருவாக்கும் மையமாக மாற முடியும் என அதன் தலைவர்கள் நம்புகிறார்கள்.
“ஆஸ்திரேலியாவில், எங்களிடம் இந்த வளம் அதிகம் இருக்கிறது, கிடைக்கக்கூடிய மிக மலிவான ஆற்றல் வடிவம் இதுவாகும்” என்று டேவிட் ஃகிரிஃபின் கூறினார்.
எதிர்கால செல்வம்
Sun Cable திட்டம், பல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் ஒன்றாகும் என்றும், இது ஆஸ்திரேலியாவிம் எதிர்கால செல்வத்திற்கு உறுதியளிக்கிறது என்றும், ஆஸ்திரேலிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமான CSIROவின் நிர்வாக மேலாளர் டேவிட் ஃபர்ட் (David Burt) கூறினார்.
“ஆஸ்திரேலியாவின் பாரிய நிலப்பரப்பு, எமக்குக் கிடைத்த பெரும் கொடை எனலாம். சூரிய அல்லது காற்றாலை ஆற்றலை உருவாக்கி உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திறன் எங்களிடமுள்ளது.”
ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தில், பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா மிகவும் சிறந்த நிலையில் உள்ளது என்று அவர் கூறினார்.

David Burt from the CSIRO says Australia is uniquely suited to export renewable energy. Source: CSIRO
“Sun Cable திட்டம், சிங்கப்பூரின் எதிர்கால எரிசக்தி தேவைகளில் 20 சதவீதம் வரை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, எனவே ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதி வருவாயில் பில்லியன் கணக்கான டொலர்களாக இப்படியான மின்சார ஏற்றுமதி இருக்கும்.”
“எங்கள் இணைய சேவைகளுக்காக, ஏற்கனவே கடலுக்கடியில் மாபெரும் வடங்கள் (fibre optic cables உள்ளன. இவற்றால் மனிதனுக்கோ சுற்றுச்சூழலுக்கோ பாதுகாப்பு அபாயம் அவ்வளவாக இல்லை, ஆனால் அந்த மின் கம்பிகள் சேதமடையக்கூடும் என்பதே மிகப் பெரும் ஆபத்து.”
“எப்படியென்றால், அது ஒரு இடத்தில் செயலிழந்தாலும் முற்றாக செயலிழந்து விடும். எனவே ஒரு சூறாவளி அல்லது பேரழிவு ஏற்பட்டால் அல்லது எந்த வகையிலும் ஒரு தவறு ஏற்பட்டு, மின் கம்பி சேதமடைந்தால், எரிசக்தி ஏற்றுமதி செய்வதற்கான திறன் நிறுத்தப் படலாம்.”
அபாயங்களை மதிப்பீடு செய்தல்
ஏற்கனவே, டாஸ்மேனியா மற்றும் விக்டோரியா மானிலங்களுக்கிடையிலுள்ள கடற்பரப்பான ஃபாஸ் நீரிணையில் (Bass Strait) கடலுக்கடியில் மின்கம்பிகள் தாட்டப்பட்டுள்ளன. இதன் மூலம், தேவைக்கதிகமாக ஒரு மானிலம் மின்சாரம் உற்பத்தி செய்தால், மற்ற மானிலத்திற்கு அனுப்பி வழி உள்ளது.
இதே நேரம், 2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புயலைத் தொடர்ந்து 850,000 நுகர்வோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து, தெற்கு ஆஸ்திரேலியாவில் காற்றாலைப் பண்ணை மூலம் மின்சாரம் உருவாக்குபவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
Sun Cable திட்டத்திற்குத் தேவையான சூரிய தகடுகளை ஆஸ்திரேலிய சூரிய தொழில்நுட்ப நிறுவனமான 5B வழங்கும். இந்த சூரிய தகடுகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும்.

Chris McGrath, founder of 5B, stands in front of panels fabricated at his workshop. His company now supplies panels to 20 solar plants in Australia. Source: SBS
Chris McGrath மற்றும் Eden Tehan ஆகியோரால் 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 5B தொழில்நுட்ப நிறுவனம் மிக வேகமாக வளர்ந்துள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் 20 வெவ்வேறு ஆலைகளுக்கு 5B இப்போது சூரிய தகடுகளை வழங்குகிறது.
“80 முதல் 200 சூரியத் தகடுகளைக் கொண்டு, பாரிய சூரியத்தகடுகள் தயாரிக்கப்பட்டு, ‘முன் தயாரிக்கப்பட்ட தொகுதியாக’ இணைக்கின்றன,” என்று Chris McGrath கூறினார்.
“இந்த திட்டத்திற்கு, எங்கள் முன் தயாரிக்கப்பட்ட தொகுதிகளில் 80,000 தொகுதிகள் தேவை. எனவே இது தனித்துவமான, மிகப் பெரிய திட்டம்” என்று அவர் மேலும் கூறினார்.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான வேலைகள் நடக்க வேண்டும். அதற்கு 300 பேர் புதிதாக வேலைக்கமர்த்தப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Workers install solar panels at a plant in the Nothern Territory. (AAP Image/Lucy Hughes Jones) Source: AAP
பிராந்திய எரிசக்தி சந்தை, போட்டியை சந்திக்கத் தயாராக இருக்கிறது.
சிங்கப்பூரின் மின்சார உற்பத்திக்கு, மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை பெரிதும் நம்பியுள்ளது.
“ஆசியாவில் மின்சாரத்தின் விலை பொதுவாக மிகவும் உயர்ந்தது,” என்று அவர் கூறினார்.
“எங்களிடம் குறைந்த விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எங்களிடம் வளம் உள்ளது, ஆனால் இன்று வரை, மிக நீண்ட தூரத்திற்கு மின்சாரத்தைக் கடத்தும் திறன் எங்களிடம் இல்லை.”
இந்தத் திட்டம் மூலம் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை மின்சாரம் உருவாக்கப்படாது என்றாலும், ஆசியாவிலுள்ள வாய்ப்புகளைப் பயன் படுத்திக்கொள்ளும் பல ஆஸ்திரேலிய திட்டங்கள் Sun Cable திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் தொடங்கி விடும் என்று திரு டேவிட் ஃகிரிஃபின் கூறினார்.
“கண்டம் விட்டு கண்டம் செல்லும் மின்சாரம் என்ற பொருளில் இது ஒரு புதிய திட்டம்”
சுத்தமாக உருவாக்கப்பட்ட மின்சக்தியை சேமித்து பிராந்திய பிரதேசங்களுக்கு அனுப்பும் வழிகளை CSIRO ஆராய்ச்சி செய்து வருகிறது. இருந்தாலும் அந்த ஆராய்ச்சி மிக மெதுவாவே நகர்கிறது.
“மரபு வழி மூலம் மின்சாரத்தை ஏற்றுமதி செய்வது விரைவில் மாறப் போவதில்லை. ஆஸ்திரேலிய பொருளாதாரத்தை ஆதரிப்பதற்குத் தேவையான அளவில், நாம் கண்டுபிடிக்கும் புதிய வடிவங்கள் பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக மாறும் வரை, மாறப் போவதில்லை” என்று டேவிட் ஃபர்ட் கூறினார்.