சிட்னியில் பொலீஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்கு சிறுவன் ஒருவனை ஏவிவிட்டது மாத்திரமல்லாமல் அந்த சிறுவனின் சகோதரிக்கு பணம் கொடுத்து அவரை சிரியாவுக்கு சென்று பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயிற்சியெடுக்க தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 22 வயது நபர் ஒருவருக்கு NSW நீதிமன்றம் 38 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
2015 ஆம் ஆண்டு சிட்னி பரமட்டா பகுதியில் Curtis Cheng என்ற பொலீஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்த சிறுவனுக்கு உதவி புரிந்தவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Milad Atai என்ற இந்நபர் பொலீஸ் உத்தியோகத்தரின் கொலைக்கு நேரடியாக உதவிபுரியவில்லை என்றாலும் கொலைத்திட்டத்தை முற்றாக அறிந்திருந்தார் என்றும், கொலையாளி துப்பாக்கியைப்பெற்றுக்கொள்வதற்கு தனது தொலைபேசியை பயன்படுத்துவதற்கு உதவிபுரிந்திருக்கிறார் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
குறித்த நபர் என்னதான் காரணங்கள் கூறினாலும் அவரது மனதில் தீவிரவாத சிந்தனையிலிருப்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் அதன்படி அவருக்கு 38 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
இதேவேளை Curtis Cheng மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட 15 வயதுச் சிறுவன் Farhad Jabar சம்பவ இடத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியிருந்த அதேநேரம் துப்பாக்கியை பெறுவதற்கு உதவிய இருநபர்களுக்கு ஏற்கனவே பல ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.