54 வயதிற்குட்பட்டவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் முன் தட்டம்மைக்கான தடுப்பூசி எப்போது போட்டார்கள் என்பதை மீள் பார்க்க வேண்டும் என்றும் NSW சுகாதாரத் துறை எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்காசிய நாடொன்றிலிருந்து, சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் ஆகஸ்ட் 17 அதிகாலை வந்திறங்கிய ஒருவருக்கு தட்டம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டதன் பின்னர் NSW சுகாதாரத் துறை இந்த எச்சரிக்கையை நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது.
முக்கியமாக, ஆகஸ்ட் 16 ஆம் தேதி இரவு 11.55 மணிக்குத் தரையிறங்கிய Etihad Airways EY 451 விமானத்தில் பயணித்தவர்கள், மற்றும் அந்த நேரத்தில் சிட்னி விமான நிலையத்தின் சுங்க மற்றும் பொதிகள் வந்திறங்கும் பகுதிகளில் நின்றவர்களை அவதானமாக இருக்குமாறும் இந்த எச்சரிக்கை கோருகிறது.
“அம்மை நோயின் அறிகுறி கொண்ட எவரும், குடும்ப மருத்துவரை அணுக முன்னர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரித்து விட்டு செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள். குடும்ப மருத்துவரைக் காண சென்றிருக்கும் மற்றைய நோயாளிகளிடம் இந்த தொற்று பரவாமலிருக்க இது ஒரு முன் நடவடிக்கை” என்று தொற்று நோய்கள் இயக்குனர் விக்கி ஷெப்பர்ட் (Vicky Sheppeard) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், தென் அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் இருந்து இரண்டு பேர் இந்த நோயுடன் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்கள். ஆகஸ்ட் 15 முதல் 19 வரை சிட்னி நகரிற்கும் ஹேசல்ப்ரூக் (Hazelbrook) ற்குமிடையில் இவர்கள் பயணித்துள்ளார்கள் என்றும் இதே போன்ற எச்சரிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
1965 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன், தடுப்பூசி எப்போது போட்டார்கள் என்பதை மீள் பார்க்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை இந்த மூன்று பேரும் எடுத்துரைக்கிறார்கள் என்று டாக்டர் ஷெப்பர்ட் கூறினார்.
“இந்த வருடம் உலகின் பல நாடுகளில் தட்டம்மை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளன, பல நாடுகளில் பெரியளவில் தொடர்ச்சியான அதிகரிப்பை சந்தித்து வருகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.
“தொற்றுநோய் பரவக்கூடிய வழக்கமான இடங்களுக்கு செல்பவர்கள் மட்டுமல்ல, தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அனைவரும் இதனால் பாதிக்கப்படலாம் என்பதை நாம் அறிய வேண்டும்.”
MMR எனப்படும் (measles-mumps-rubella) தட்டம்மை-கூகைக்கட்டு-ரூபெல்லா அல்லது ஜேர்மன் அம்மை தடுப்பூசியை தம் வாழ்நாளில் இரண்டு முறை எடுத்தவர்களில் 99 சதவீதத்தினர் வாழ்நாள் முழுவதும் இந்த நோய்களிலிருந்து பாதுகாப்புடன் வாழ்கிறார்கள்.
1965 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த ஒருவர், இரண்டு முறை இந்தத் தடுப்பூசியை போட்டிருக்கவில்லை என்றால், NSW, ACT, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் இலவசமாகப் ஒட்டுக் கொள்ளலாம்.
1998 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்த அனைவருக்கும் மற்றும் புகலிடம் தேடி வந்தவர்களுக்கும் நாடு முழுவதும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
தடுப்பூசி எப்போது போட்டார்கள் என்பதை உறுதி செய்ய முடியாதவர்கள் இன்னொரு முறை தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானது என்று டாக்டர் ஷெப்பர்ட் உறுதியளித்தார்.
அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தங்களுக்கு என்ன தடுப்பூசிகள் தேவைப்படலாம் என்பதைப் புறப்படுவதற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கப் படுகிறார்கள்.