பல்கலைக்கழக பரீட்சைகள் மற்றும் கட்டுரை ஆக்கம் போன்றவற்றில் மாணவர்கள் ஏமாற்றுவேலைகள்செய்வதற்கு துணைபோகும் தரப்பினரை தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடுமையாக தண்டிக்கப்போவதாக லிபரல் கட்சி அறிவித்துள்ளது.
இரண்டு லட்சத்து 10 ஆயிரம் டொலர் வரையான தண்டப்பணம் அல்லது இரண்டு வருடங்கள் வரையான சிறைத்தண்டனையை சட்டமாக அறிமுகப்படுத்தப்போவதாக கல்வி அமைச்சர் Dan Tehan தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது கற்றல் நடவடிக்கையின்போது இணைய வழி தகவல்கள் - கட்டுரைகள் ஆகியவற்றை பிரதிபண்ணி, அல்லது வேறொருவரைக்கொண்டு தமது assignment-களை எழுதி, அவற்றை தமது பரீட்சையில் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகவும், அண்மையில் பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மாணவர்கள் இவ்வாறு ஏமாற்றுவேலைகளில் ஈடுபடுவதாக விரிவுரையாளர்கள் தரப்பில் 70 வீதமானவர்கள் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒருநிலையில், நாட்டின் கல்வித்தரம் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதுடன் நேர்மையாக கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு, இணைய வழியாகவும் ஏனைய மார்க்கங்களிலும் மாணவர்களுக்கு ஏமாற்று வழிகளை காட்டிக்கொடுக்கும் பிரதான பங்காளிகளை தண்டிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது. சிலவேளைகளில், வெளிநாட்டு இணையங்கள் வழியாகவும் இவ்வாறான குற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவை குறித்து தகுந்த நடவடிக்கையை எடுப்பதற்கும் அரசு சரியான பாதைகளை பின்பற்றவுள்ளது-என்று கல்வி அமைச்சர் Dan Tehan தெரிவித்துள்ளார்.