பணியிடங்களிலும் மருத்துவ நிலையங்களிலும் தமது வருடாந்த காய்ச்சல் தடுப்பூசி (flu vaccine) பெற ஆஸ்திரேலியர்கள் அணி அணியாகத் திரள்கிறார்கள். குளிர்காலம் ஆரம்பிக்கு முன்னர், தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்பது அவர்கள் நோக்கம்.
முதல் முறையாக நீங்கள் காய்ச்சல் தடுப்பூசி போடச்சென்றிருந்தால், கோழி முட்டைக்கு நீங்கள் அலர்ஜி (ஒவ்வாமை) உடையவரா என்ற கேள்வி உங்களை யோசிக்க செய்திருக்கலாம்.
காய்ச்சல் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் கோழி முட்டை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
காய்ச்சல் தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு, கருக்கட்டப்பட்ட கோழி முட்டைகளில் தான் வைரஸ் வளர்க்கப்படுகிறது.
இந்த காய்ச்சல் தடுப்பூசிகள் குறித்து, நீங்கள் தெரியாத மூன்று விஷயங்கள்:
- காய்ச்சல் தடுப்பூசிகளில் உயிருள்ள வைரஸ் எதுவும் இல்லை, எனவே தடுப்பூசியிலிருந்து உங்களுக்கு காய்ச்சல் வராது.
- ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசியின் அமைப்பு மாறுகிறது.
- கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பத்தின் அனைத்து கட்டங்களிலும், காய்ச்சல் தடுப்பூசி பாதுகாப்பானது.
70 ஆண்டுகளுக்கும் மேலாக, காய்ச்சல் (இன்ஃப்ளூயன்ஸா) தடுப்பூசியின் தயாரிப்பில், கோழி முட்டை ஒரு அடிப்படை உற்பத்திப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வைரஸ்கள் வளர்வதற்கு, உயிரணுக்கள் தேவை. அவை தாமாக இனப்பெருக்கம் செய்ய முடியாது. வைரஸ்கள் ஒரு உயிரணுவை (cell) முதலில் பாதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட உயிரணு புதிய வைரஸ்களை உருகவாக்க கோழி முட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனென்றால், ஒரு பாக்டீரியா அல்லது ஒரு பூஞ்சை போன்று, அவை தானாக வளர முடியாது. இப்படி வளர்க்கப்பட்ட வைரஸ்கள் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு, வேதியியல் முறையில் தனிமைப்படுத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு பின்னர் சோதிக்கப்படும்.
ஒரு காய்ச்சல் தடுப்பூசியிலிருந்து காய்ச்சல் வருவதற்கு சாத்தியமே இல்லை.
காய்ச்சல் தடுப்பூசியில், எந்த ஒரு வைரஸ்ஸும் முழு வைரஸ் ஆக இல்லாத காரணத்தால், காய்ச்சல் தடுப்பூசியிலிருந்து எந்தவொரு காய்ச்சலும் வருவதற்குச் சாத்தியமில்லை. வைரஸ்ஸின் துணைப் பிரிவுகள் மட்டுமே தடுப்பூசியில் சேர்க்கப்பட்டிருக்கும்.
எமது உடலின் நோயெதிர்ப்பு முறை, தடுப்பூசிக்கு எதிர்வினையாற்றுவதற்கு 10 முதல் 14 நாட்கள் வரை தேவை. அவை நோயெதிர்ப்பு கலன்களை (antibodies) உருவாக்கிய பின்னர் காய்ச்சல் வராமல் தடுக்கும் சக்தியைப் பெற்றுவிடும்.
ஆனால், நீங்கள் தடுப்பூசி எடுப்பதற்கு முன்னதாக காய்ச்சல் வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டிருந்தால், தடுப்பூசி எடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னரும் உங்களுக்குக் காய்ச்சல் வரக்கூடும்.
தடுப்பூசி வேலை செய்ய ஆரம்பிப்பதற்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை என்பதால் தான் அப்படி நடக்கிறது.
எனக்கு முட்டை ஒவ்வாமை (அலர்ஜி) என்றால் என்ன?
பாதுகாப்பிற்காகத் தான், உங்களுக்கு முட்டை ஒவ்வாமை உள்ளதா என்று இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைத் தர முன்னர், பெரும்பாலான சுகாதார வல்லுனர்கள் கேட்பார்கள். தடுப்பூசியிலுள்ள முட்டைப் புரதத்தின் அளவு மிகக் குறைவு தான்.
இருந்தாலும் தடுப்பூசி முட்டையில் வளர்க்கப்பட்டதனால் சிறிதளாவு முட்டைப் புரதம் அதிலிருக்க சாத்தியம் உள்ளது. அதனால் தான் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது.
கோழி முட்டை ஒவ்வாதவர்கள் இதற்காகப் ப்யம் கொள்ள வேண்டியதில்லை. அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஆனால், அது குறித்து மருத்துவ ஆலோசகருடன் கலந்துரையாடி ஒவ்வாமையால் ஏதாவது ஆபத்து வருமா என்பதை அறிந்து அதற்கான மாற்று வழிகளை முன்னரே தீர்மானித்துக் கொள்ளலாம்.
ஆறு மாதக் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் தடுப்பூசியிட வேண்டுமென ஆஸ்திரேலிய அரசாங்கம் பரிந்துரை செய்கிறது.
பின்வரும் குழுக்களில் உள்ளவர்கள் இந்த வருடம் (2017 ல்) இலவச தடுப்பூசி பெறலாம்:
- 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்;
- 6 மாதங்கள் முதல் ஐந்து வயதுவரையான பூர்வீக மற்றும் டோர்ரஸ் ஸ்ட்ரெயிட் மக்கள்;
- 15 வயதிற்கு மேற்பட்ட பூர்வீக மற்றும் டோர்ரஸ் ஸ்ட்ரெயிட் மக்கள்;
- கர்ப்பிணிப் பெண்கள்;
- கடுமையான ஆஸ்துமா, நுரையீரல் அல்லது இதய நோய், குறைந்த நோய் எதிர்ப்பு அல்லது நீரிழிவு போன்ற நோய் உடையவர்கள்