இந்தியாவின் நாசிக் நகரில் வாழும் முகம்மது திலாவார், சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க உதவும் நோக்குடன் Nature Forever Society என்ற அமைப்பை ஆரம்பித்தார். அவரது முயற்சிகளைப் பாராட்டி, 2008ம் ஆண்டிற்கான "சுற்றுச்சூழலின் காவலர்கள்" ("Heroes of the Environment") என்ற பட்டத்தை Time பத்திரிகை அவருக்கு வழங்கியிருந்தது.
Nature Forever Societyயில் நடந்த ஒரு கலந்துரையாடலின் போது, சிட்டுக்குருவி மற்றும் பிற பொதுவான பறவைகள் பாதுகாக்கப்படுவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த சிட்டுக்குருவிக்கு என்று ஒரு நாள் ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற சிந்தனை உதித்தது.
உலகின் வெவ்வேறு இடங்களில் முதல் உலக குருவி தினம் 2010 இல் கொண்டாடப்பட்டது. கலைப் போட்டிகள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் போன்ற நிகழ்ச்சிகளும் ஊடகங்களில் இத் தொடர்பான நிகழ்ச்சிகளும் இந்த நாளில் நடத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.
உலக சிட்டுக்குருவி தினம் ஒரு பரந்த பார்வையைக் கொண்டிருக்கிறது. இது, சிட்டுக்குருவி மற்றும் பிற பொதுவான பறவைகள் பாதுகாக்கப்படவேண்டும் சிந்தனை கொண்டவர்களை ஒருங்கிணைக்கவும் மேலும் ஆலோசனைகள் மற்றும் சிறந்த அறிவியல் கருத்துகளைப் பரிமாறவும் வழிவகுக்கும். இந்தியாவில் சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவம் குறித்து இப்போது பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இளைஞர்கள் அவற்றைப் பாதுகாக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். பழைய காலத்தில் நமது முன்னோர்கள் ஓட்டு வீடுகளில் வாழ்ந்தனர். ஓட்டு வீடுகளின் அமைப்பு கூடு கட்டி வாழத் தெரியாத சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் இருந்தது. பொந்துகளில் கொஞ்சம் வைக்கோல் இருந்தால் போதும்; அதில் வசிக்க ஆரம்பிக்கும் பறவை இனம் சிட்டுக்குருவி. நகரத்தின் நவீனக் கட்டிடங்கள் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இல்லை. ஆனால், மண்ணுக்கு எப்படி புழு தேவையோ... காட்டுக்கு எப்படி புலி தேவையோ... அப்படி மனிதனுக்கும் சிட்டுக்குருவி தேவை.
உலகம் முழுக்க 52 ஆயிரம் இடங்களில் சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கான வாழ்விடங்கள், உணவிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.