ஆஸ்திரேலிய விளையாட்டு அணிகள் தெரியும். செல்லப்பெயர்கள் தெரியுமா?

Sports

Source: Geetha

ஆஸ்திரேலியா விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு. விளையாட்டு என்பது மக்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக கலந்துவிட்ட ஒன்று. இந்த பின்னணியில் ஆஸ்திரேலிய விளையாட்டு அணிகளுக்கு இடப்பட்டிருக்கும் செல்லப்பெயர்களைக் கேட்டால் நாம் மலைத்துப்போவோம். “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி நம்மை மலைப்புக்கு ஆட்படுத்துகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.


2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான பெண்கள் கால்பந்தாட்டப்போட்டித் தொடரை நடத்தும் உரிமையை 22 வாக்குகள் பெற்று ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் தெரிவான செய்தி கடந்த ஜூன் மாதம் 25 ஆம் நாள் அறிவிக்கப்பட்டபோது மெட்டில்டாஸ் மெட்டில்டாஸ் என நாடே கொண்டாடியது நினைவிருக்கிறதா? ஆம் ஆஸ்திரேலியாவின் தேசிய பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு Matildas என்று பெயர். 1995 வரையிலும் இவ்வணி Female socceroos என்றே அழைக்கப்பட்டது. சரி. அதென்ன பெயர் Matildas?

மெட்டில்டா என்றால் அதன் மூலமொழியான ஜெர்மனில் போர்வலிமை மிக்க என்று பொருள். ஆனால் ஆஸ்திரேலியாவிலோ அதன் பொருளே வேறு. நாடோடியின் முதுகுச்சுமை, கிட்டத்தட்ட நாடோடியின் மூட்டைமுடிச்சு என்று சொல்லலாம். அதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு ஆஸ்திரேலியாவின் பிரபல புதர்க்காட்டுப் பாடலான waltzing matilda வைப் பற்றி முதலில் தெரிந்திருக்கவேண்டும். ஆரம்பகால ஆஸ்திரேலியாவின் அங்கீகரிக்கப்படாத தேசிய கீதமாக ஒலித்துக்கொண்டிருந்த பாடல் இதுவே.
ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பின் ஆளரவமற்ற பரந்த புதர்க்காடுகளில் முதுகுச்சுமையுடன் கால்நடையாய் நடந்து கடக்கும் நாடோடியைக் குறித்த பாடல் இது.

நாடோடி போகும் வழியில் புதர்க்காட்டில் ஆங்காங்கே கூடாரம் அடித்து தங்குகிறான். தேவைப்படும்போது சுள்ளிகளைப் பொறுக்கி தீ மூட்டி தன்னோடு எடுத்துச்செல்லும் பில்லி எனப்படும் தகரக்குவளையில் தேநீர் தயாரித்து அருந்துகிறான். பசிக்கும் வேளையில் அந்தப்பக்கம் மேய்ந்துகொண்டிருந்த செம்மறியைப் பிடித்து சமைத்து உண்கிறான். ஆட்டின் உரிமையாளர் ஆட்டைத் திருடியதற்காக காவலர்களுடன் அவனைப் பிடிக்க வரும்போது, என்னை ஒருபோதும் உங்களால் உயிரோடு பிடிக்க முடியாது என்று சொல்லிக்கொண்டே பக்கத்திலிருந்த பில்லபாங் என்னும் நீர்நிலையில் குதித்து உயிரை விடுகிறான். பிறகு ஆவியாக அதே இடத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறான்.

வாழ்வாதாரத்தைத் தேடி ஊர் ஊராய் அலையும், தனிமனிதனாய் புதர்க்காடுகளைக் கடக்கும் நாடோடிகளின் அவல வாழ்க்கையை சித்தரிக்கும் இப்பாடலை எழுதியவர் ஆஸ்திரேலியாவின் பிரபல கவிஞர் பேன்ஜோ பேட்டர்சன்.

இப்போது மற்ற விளையாட்டு அணிகளுக்கு இடப்பட்டுள்ள செல்லப்பெயர்கள் பற்றி பார்ப்போம். ஆஸ்திரேலியாவின் தனித்துவத்தை அடையாளப்படுத்தும் விதமாகவே பல விளையாட்டு அணிகளுக்கு செல்லப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியர்களின் உணர்வோடு ஒன்றியவை விளையாட்டுகள் என்று முன்பே சொன்னேன் அல்லவா. அதிலும் AFL, Aussie rules, footy என்ற செல்லப்பெயர்களால் சுட்டப்படும் Football- உம் Rugby-யும் உயிரோடும் உணர்வோடும் கலந்தவை எனலாம். பந்தைக் கையால் பிடித்தும் காலால் உதைத்தும் கையிலெடுத்தபடியே ஓடியும் விளையாடும் பந்தாட்டம் Football என்றும் காலால் மட்டுமே உதைத்து விளையாடப்படும் பொதுவான கால்பந்தாட்டம் soccer என்றும் ஆஸ்திரேலியாவில் குறிப்பிடப்படுவது வேடிக்கையான விஷயம்.

Soccer விளையாட்டின் ஆண்கள் அணியின் பெயர் சாக்கரூஸ். soccer, Kangaroos இரண்டையும் இணைத்தால் வருவது. ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் அணி Olympic, Kangaroos இரண்டையும் சேர்த்து Olyroos எனப்படுகிறது. 20 வயதுக்குக் குறைந்த ஆண்கள் அணி Young socceroos என்றும் பெண்கள் அணி young Matildas என்றும் செல்லமாய் குறிப்பிடப்படுகின்றன. பதினேழு வயதுக்குக் குறைந்த சிறார் அணியின் செல்லப்பெயர் என்ன தெரியுமா? கங்காருக்குட்டிகளின் செல்லப்பெயரான Joeys தான். Futsal என்பது உள்ளரங்கில் அணிக்கு ஐந்துபேர் மட்டுமே விளையாடக்கூடிய சிறிய அளவிலான கால்பந்து விளையாட்டு. அதற்கான ஆஸ்திரேலிய அணியின் பெயர் Futsalroos.

ரக்பி லீகின் ஆண்கள் அணிக்கு kangaroos என்றும் பெண்கள் அணிக்கு jillaroos என்றும் பெயர். Jillaroo Jackaroo இவையெல்லாம் ஆஸ்திரேலிய ஆங்கில வார்த்தைகள். ஆரம்பகால குடியேற்றத்தின்போது பண்ணையிலும் ரோமக்கத்தரிப்பு நிலையங்களிலும் வேலை கற்றுக்கொள்ள வரும் இளவயது ஆண்களை Jackaroo என்றும் இளம்பெண்களை Jillaroo என்றும் அப்போது குறிப்பிட்டனராம். அந்நாளையப் பயன்பாட்டின் நிமித்தம் உருவாக்கப்பட்ட இவ்வார்த்தைகள் இன்றும் புழக்கத்திலிருப்பது ஆச்சர்யமே. ஐஸ் ஹாக்கி விளையாட்டின் ஆண்கள் அணிக்கு Mighty Roos என்றும் பெண்கள் அணிக்கு Mighty Jills என்றும் பெயர். மாற்றுத்திறனாளிகள் ஹாக்கி அணியின் செல்லப்பெயர் Iceroos.

Kangaroo-க்களுக்கு அடுத்த இடம் வல்லரூக்களுக்கும் வல்லபிக்களுக்கும் உண்டு. அளவில் சற்றே சிறியவையான அவையும் சிறப்பிக்கப்படுகின்றன, ஆஸ்திரேலியாவின் ரக்பி யூனியன் அணிகளுக்கிடப்பட்ட செல்லப்பெயர்களின் மூலம். ஆண்கள் அணி wallabies என்றும் பெண்கள் அணி wallaroos என்றும் 21 வயதுக்குட்பட்ட பிரிவினர் junior wallabies என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் தேசிய பெண்கள் ஹாக்கி அணிக்கு Hockeyroos என்றும் தேசிய ஆண்கள் ஹாக்கி அணிக்கு kookaburras என்றும் பெயர்.

ஆஸ்திரேலியாவின் கூடைப்பந்தாட்ட அணி அதாவது Basket ball டீம்க்கு என்னென்ன பெயர்கள் என்று பார்க்கலாமா? ஆண்கள் அணிக்கு Boomers என்று பெயர். Boomer என்பதும் Roo போலவே ஆண் கங்காருவைக் குறிக்கும் சொற்களுள் ஒன்று. 21 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணிக்கு crocs என்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணிக்கு Emus என்றும் பெயர். இப்பெயர்கள் ஆஸ்திரேலியாவின் தனித்துவத்தை அடையாளப்படுத்துவதோடு அணியின் வல்லமையையும் உணர்த்துகிறது அல்லவா? மாற்றுத்திறனாளர் ஆண்கள் அணிக்கு Boomerangs என்று பெயர்.

கூடைப்பந்தாட்டத்தின் பெண்கள் அணி Opals என்றும் 21 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி Sapphires என்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி Gems என்றும் மாற்றுத்திறனாளர் பெண்கள் அணி pearls என்றும் குறிப்பிடப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் கனிம வளத்தை சுட்டுவதோடு அணிகள் ஒவ்வொன்றும் நவரத்தினங்களென மின்னி ஒளிரும் தன்மையையும் இப்பெயர்கள் குறிக்கின்றன அல்லவா?

ஆஸ்திரேலியாவின் Net ball விளையாட்டின் ஆண்கள் அணிக்கு Diamonds என்பது பொதுவான பெயர். Frisbee விளையாட்டின் ஆண்கள் அணிகளுக்கு வயது வாரியாக Dingoes, Wombats, Goannas, Thunder என்ற செல்லப்பெயர்களும் பெண்கள் அணிகளுக்கு Firetails, Taipans, stingrays, Southern Terra என்ற செல்லப்பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன. Handball விளையாட்டின் ஆண்கள் அணிக்கு crocodiles என்றும் பெண்கள் அணிக்கு Redbacks என்றும் பெயர். வாட்டர்போலோ விளையாட்டில் ஆண்கள் அணி sharks என்றும் பெண்கள் அணி stingers என்றும் குறிப்பிடப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் அச்சந்தரும் உயிரினங்களின் பெயர்களைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல?

சரி, கடைசியாக கிரிக்கெட்டுக்கு வருவோம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் செல்லப்பெயர் என்ன தெரியுமா? Baggy greens. விளையாட்டின்போது கிரிக்கெட் சீருடையுடன் அணியப்படும் பச்சை நிற துணித்தொப்பிகள் பாரம்பரியப் பெருமையுடனும் பெருமிதத்துடனும் பல காலமாய் அணியப்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலிய தனித்துவங்களைத் தாங்கிய சிறப்பு முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும் இத்தொப்பியைப் பெறுவதை தங்கள் வாழ்நாள் லட்சியமாகவும் பெற்றபின் இறுதிவரை அதைப் பொக்கிஷமாய்ப் பாதுகாப்பதைப் பெருமையாகவும் எண்ணுவதால் தொப்பியின் பெயரே அணியின் செல்லப்பெயராகிவிட்டது. அணியில் புதிதாக இடம்பெறுபவர்களுக்கு இத்தொப்பியை முன்னாள் வீரர்களின் கைகளால் விருது போல வழங்குவதே ஒரு சம்பிரதாய விழா போல நடைபெற ஆரம்பித்தது. Baggy greens தொப்பிகள் கிரிக்கெட் அணியினரால் மட்டுமல்ல, ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களாலும் மிகுந்த மதிப்புடனும் உயரிய மரியாதையுடனும் பார்க்கப்படுகின்றன.

1930-40-களில் ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர், The Don என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட Sir Donald Bradman கடைசியாக 1948-ல் அணிந்திருந்த Baggy greens தொப்பி அவரது மறைவுக்குப் பிறகு 425,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு விலை போனது. அவ்வளவு ஏன்? ஆறுமாதங்களுக்கு முன்பு ஜனவரி 2020-ல் ஷேன் வார்னேயின் துணித் தொப்பி ஏலம் விடப்பட்டபோது commonwealth வங்கி அதை சுமார் ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களுக்கு வாங்கியது. ஏலத்தொகை முழுவதும் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரணப்பணிக்காக செலவிடப்படவிருப்பதாக ஷேன் வார்னால் அறிவிக்கப்பட்டது. சில வருடங்களுக்குப் பிறகு இன்னும் அதிக விலைக்குப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். இவ்வளவு மதிப்புள்ள தொப்பியின் பெயரால் அணியை baggy greens என்று சுட்டுவது மிகவும் பொருத்தம்தானே.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand