சிட்னி ஓபரா அரங்கம் ஒரு உச்சபட்ச பிரமாண்டம் என்பதில் சந்தேகமே இல்லை. 20-ஆம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கட்டுமானங்களுள் இதுவும் ஒன்று. கட்டிட வடிவமைப்பின் சிறப்பையும் எழிலையும் எடுத்தியம்பும் இக்கட்டடம், ஒரு நகரத்தின் அடையாளம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டின், இன்னும் சொல்லப்போனால் ஒரு கண்டத்தின் அடையாளமாக விளங்குகிறது.
இப்படியெல்லாம் இந்த சிட்னி ஓபரா அரங்கத்தின் பெருமையை வர்ணிப்பது யார் தெரியுமா? வருடந்தோறும் மிகச்சிறந்த கட்டட வடிவமைப்புக் கலைஞர்களைத் தேர்தெடுத்து பரிசு வழங்கி சிறப்பிக்கும் Pritzker குழு. 2003-ஆம் ஆண்டு டென்மார்க் கட்டிட வடிவமைப்புக் கலைஞர் ஜான் உட்ஸனுக்குப் பரிசு வழங்கி கௌரவித்தபோது குறிப்பிட்ட வரிகள்தான் அவை. யார் இந்த ஜான் உட்ஸன்? டென்மார்க்காரரான அவருக்கும் சிட்னி ஓபரா அரங்கத்துக்கும் என்ன தொடர்பு?
1954-ல் சிட்னியில் கூடுதலாக மக்கள் அமர்ந்து பார்க்க வசதியாக, மூவாயிரம் பேர் அமரக்கூடிய அளவில் ஒன்றும், 1200 பேர் அமரும் வகையில் இன்னொன்றுமாக இரண்டு நிகழ்கலை அரங்குகளின் தேவை ஏற்பட்டபோது அதற்கான கட்டிட வடிவமைப்புப் போட்டி அறிவிக்கப்பட்டது. 32 நாடுகளிலிருந்து 233 விண்ணப்பங்கள் வந்துகுவிந்தன. 1957-ல் முடிவு வெளியானது. வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஜான் உட்ஸன்.
கட்டிட வடிவமைப்பிலும் நிர்மாணிப்பிலும் தீவிரப்பற்று கொண்டிருந்த அவருக்கு சிட்னி ஓபெரா அரங்கத்துக்கான வடிவமைப்புக்கான மூலம் எங்கிருந்து கிடைத்ததாம் தெரியுமா? ஒரு ஆரஞ்சுப்பழத்தின் தோலை உரித்த மாத்திரத்தில் அவர் உள்ளுக்குள் உருவான ஐடியாவாம் அது. ஆம். சிட்னி ஓபெரா அரங்கத்தின் தனித்தனியாக காட்சியளிக்கும் சிப்பி போன்ற 14 மேற்கூரைகளையும் ஒன்று சேர்த்தால் ஒரு முழுமையான கோளம் உருவாகும். அந்த அளவுக்கு நுணுக்கமான கட்டிடத் தொழில்நுட்பமும் கலைநயமும் கொண்டது இந்த அரங்கம்.
1965 இல் நியூ சௌத்வேல்ஸில் ஆட்சி மாறியதும் உட்ஸனுக்கு அரசு தரப்பிலிருந்து ஆதரவு குறைந்துபோனது. போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படாமையும் வடிவமைப்பு குறித்த கருத்து முரண்பாடுகளும், எள்ளல் விமர்சனங்களும் 1966 இல் உட்ஸனை இப்பணியிலிருந்து விலகச் செய்தன. சிட்னி அலுவலகத்தை மூடிவிட்டு இனி ஆஸ்திரேலியா பக்கமே தலைவைத்துப் படுக்கப்போவதில்லை என்ற முடிவுடன் தாயகம் திரும்பினார் உட்ஸன். அவர் கைவிட்டபோது கட்டிடத்தின் வெளிநிர்மாணவேலை கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருந்தது. அதுவரை சுமார் 30 மில்லியன் டாலர்கள் செலவாகியிருந்தது. ஆனால் உள்ளரங்குகள் மூல வரைபடத்திலிருந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு அமைக்கப்பட்ட பிறகான கணக்கெடுப்பின் படி ஒட்டு மொத்த கட்டிடத்திற்கு ஆன செலவு 103 மில்லியன் டாலர்கள்.
ஒருவழியாக 1973 ல் கட்டிடம் முழுமையாக முடிக்கப்பட்டு எலிசபெத் மகாராணியின் கையால் திறந்துவைக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு கட்டிட வடிவமைப்பாளரான ஜான் உட்ஸனுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. நிகழ்ச்சிகளில் அவர் பெயர் தவறியும் கூட உச்சரிக்கப்படவில்லை.
காலம் மாறியது. காட்சிகளும் மாறியது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு உள்ளரங்க வடிவமைப்பில் மாறுதல் தேவைப்பட்டபோது உட்ஸனைத்தான் அணுகினார்கள். அவருக்கு உரிய மரியாதையும் மதிப்பும் அளித்து அவரை அழைத்தார்கள். உட்ஸன் மறுக்கவில்லை. ஆனால் அவர் நேரடியாக களமிறங்காமல் தன் மகன் ஜேன் உட்ஸன் மூலம் சிட்னி ஓபெரா அரங்கத்தில் மீண்டும் தன் கைத்திறனைக் காட்டினார். தனது தொண்ணூறாவது வயதில் மறைந்த ஜான் உட்ஸன் தன் இறுதிக்காலம் வரை தன்னால் வடிவமைக்கப்பட்ட சிட்னி ஓபெரா அரங்கத்தைப் பார்க்க ஆஸ்திரேலிய மண்ணில் அடியெடுத்து வைக்கவே இல்லை என்பது வருத்தம் தரும் உண்மை.
ஓபரா அரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், நிகழ்த்து கலைகள் போன்றவை நடைபெறும் வண்ணம் அரங்குகள் அமைந்துள்ளன. இதன் மேற்கூரைகள் சூரிய ஒளியை மிக அழகாகப் பிரதிபலிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிட்னியில் வருடாவருடம் கொண்டாடப்படும் விவித் எனப்படும் பிரமாண்ட ஒளித்திருவிழாவின் போது இந்தக் கட்டிடம் வர்ணஜாலம் கொண்டு வசீகரிக்கும். சிட்னி ஓபெரா அரங்கத்துக்கு வருடந்தோறும் தோராயமாக 82 இலட்சம் மக்கள் வந்துபோகின்றனர். 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதன் மற்றொரு சிறப்பு.
ஓபரா அரங்கத்தோடு கூடிய மற்றொரு அடையாளம் ஹார்பர் ப்ரிட்ஜ் எனப்படும் துறைமுகப்பாலம். ஒரு சட்டத்துக்குள் இரண்டும் அடங்கிய காட்சிதான் சிட்னியின் சிறப்பு. ஆஸ்திரேலியாவின் அடையாளம் என்னும் பெருமை. ஓபரா அரங்கம் உருவாவதற்கு முந்தைய சிட்னியின் அடையாளம் அதுவே. துறைமுகப் பாலத்தின் வடிவமைப்பின் காரணமாக நியூ சௌத்வேல்ஸ் மாநிலம் coat hanger state என்று குறிப்பிடப்பட்டது.
நகரின் வணிகமையப் பகுதியையும் வடக்கு சிட்னியையும் இணைக்கும் வகையில் துறைமுகத்தை ஒட்டி ஒரு பாலம் அமைக்க, உலக அளவில் விடப்பட்ட டென்டரில் ஆறு நிறுவனங்கள் 20 பரிசீலனைகள் வந்தன. மற்றெல்லாவற்றையும் விட குறைந்த கட்டுமான செலவைக் கொண்டிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த டார்மன் லாங் நிறுவனத்தின் விண்ணப்பம் தேர்வானது. சுமார் 1600 தொழிலாளிகளையும், 52,000 டன் எடையுள்ள இரும்புப் பொருட்களையும் ஒன்பது வருட உழைப்பையும் கொண்டு பாலம் உருவாக்கப்பட்டது. பாலத்தின் மேற்புற வளைவில் மட்டுமே சுமார் 39,000 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் தெற்கிலும் வடக்கிலுமாக வேலை துவங்கப்பட்டு மத்தியில் சேர்த்திணைக்கப்பட்டு பாலம் முழுமையானது. பாலக்கட்டுமாணப் பணி இயக்குநர் லாரன்ஸ் என்னிஸ் சொன்னாராம், “ஒவ்வொரு நாளும் பணியாட்கள் பாலக் கட்டுமாணப் பணிக்குப் போகும் காட்சி, போருக்குப் போகும் படைவீர்ர்களின் அணிவகுப்புக்கு நிகரானதாகவே இருக்கும். ஏனெனில் அவர்கள் திரும்பி வருவார்களா மாட்டார்களா என்பது யாருக்கும் தெரியாது.” ஆம்.. அவ்வளவு ஆபத்தான பணியில் ஈடுபட்டிருந்தார்கள் அவர்கள். பணியின்போது 16 உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
1932-ல் ஒருவழியாக பாலம் முழுமையடைந்தது. பாலத்தைத் திறந்துவைக்க அந்நாளைய நியூசௌத்வேல்ஸ் முதல்வர் ஜேக் லாங் அழைக்கப்பட்டிருந்தார். சுமார் 7,50,000 பொதுமக்கள் துறைமுகப்பகுதியில் கூடியிருந்தனர். முதல்வர் வருவதற்கு சற்று நேரத்திற்குமுன் ராணுவ உடையுடன் குதிரையில் பயணித்து வந்த Francis De Groot என்பவன், தன்னுடைய வாளால் ரிப்பனை அறுத்து, பொதுமக்கள் சார்பில் பாலத்தைத் தான் திறந்துவைப்பதாக அறிவித்தான். திடுக்கிட்ட அதிகாரிகள் முதல்வர் வருவதற்குள் அவசர அவசரமாக ரிப்பனை முடிந்துவைத்து முறையான திறப்புவிழாவை நடத்திமுடித்தனர். தீவிர வலதுசாரியான Francis De Groot சத்தமின்றி கைது செய்யப்பட்டு ஐந்து பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டான்.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாலம் என்னும் சிறப்புடைய அதே சமயம் இரண்டரை கி.மீ நீளமே உள்ள மிகச்சிறிய நெடுஞ்சாலை என்ற சிறப்பும் இதற்குண்டு. இதில் நடைபாதை, மிதிவண்டிப்பாதை, வாகனப்பாதைகள், ரயில்பாதைகள் என அனைத்துவகை தரைப்போக்குவரத்தும் பாலத்தின் கீழாக நீர்வழிப்போக்குவரத்தும் உண்டு. தற்போதைய நிலவரப்படி ஒரு நாளைக்கு சுமார் 200 புகைவண்டிகளும், 1,60,000 வாகனங்களும் 1900 மிதிவண்டிகளும் இப்பாலத்தைக் கடப்பதாக ஆய்வுக் கணக்கெடுப்புகள் உறுதிசெய்துள்ளன.
நகரத்தின் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அதிமுக்கிய வாகனப்போக்குவரத்துக்கு மட்டுமல்லாது சிட்னியின் அடையாளமாகவும், ஒவ்வொரு புத்தாண்டையும் வரவேற்று வானவேடிக்கைக் காட்டி உலகளவில் எண்ணற்றோரை மகிழ்விக்கும் வியன்களமாகவும் இருந்து நம்மை பெருமிதமுறச் செய்கிறது இத்துறைமுகப்பாலம்.