ஆணவக்கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் விவகாரத்தின் மேல்முறையீட்டு வழக்கில், தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், முக்கிய குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை, சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவித்து சென்னை உயர் நீதி மன்றம் நேற்று முன் தினம் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன் பின்னணி என்னவென்றால், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கௌசல்யா, தன்னுடன் கல்லூரியில் படித்த இளைஞர் சங்கரை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் செய்து கொண்டவர்கள் உடுமலைப்பேட்டை குமாரமங்கலத்தில் உள்ள சங்கர் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு கௌசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாக கௌசல்யா முறைப்பட்டிருக்கிறார்.
கௌசல்யாவும் அவரது கணவர் சங்கரும் உடுமலைப்பேட்டை பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடைகளில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதியன்று பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், இருவரையும் கத்திகளால் வெட்டினார்கள்.
இந்தக் கத்தி வெட்டுகளால் படுகாயமடைந்த சங்கர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தலையில் வெட்டுக் காயமுற்ற கௌசல்யா சிகிச்சை பெற்று குணமடைந்தார். பட்டப் பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அங்குள்ள கண்காணிப்புக்கருவிகளில் காணொளியாகப் பதிவாகி விட்டது.
அதைத் தொடர்ந்து, கௌசல்யாவின் பெற்றோர் சின்னச்சாமி மற்றும் அன்னலட்சுமி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. அவர்கள் இருவருடன், தாய்மாமன் பாண்டித்துரை என்று, மூவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்களுக்கெதிரான வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, அவருடைய தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டிருந்தனர். இருந்தாலும், கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, மற்றும் ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல் ஆகிய 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒன்பதாவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் பதினோராவது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமிக்குத் தூக்குத் தண்டனையுடன் பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மூன்று இலட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதில் இரண்டு இலட்ச ரூபாயை கௌசல்யாவுக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஜெகதீசன், மணிகண்டன், மற்றும் செல்வக்குமார் ஆகியோருக்குத் தூக்கு தண்டனையுடன் முறையே ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய், ஒரு இலட்சத்து அறுபத்தையாயிரம் ரூபாய், ஒரு இலட்சத்து அறுபத்தையாயிரம் ரூபாய் அபராதங்கள் விதிக்கப்பட்டன.
ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, அவருடைய தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசு தரப்பும் மேல் முறையீடு செய்ததுடன் தூக்குத் தண்டனையை உறுதி செய்யும் படியும் அரசு தரப்பு கோரியிருந்தது.
சென்னை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், முதல் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமியின் தூக்குத் தண்டனை நிராகரிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். மற்ற ஐந்து குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர்கள் குறைந்தது 25ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தன்ராஜ் என்பவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மற்றும் மணிகண்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த ஐந்தாண்டு கால சிறை தண்டனை என்பனவும் நீக்கப்பட்டன. கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படாத காரணத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்பு சரியானது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.