எழுத்தறித்தவன் இறைவன் என்றால்.... நாமும் இறைவனாகலாம்!

Indigenous Literacy Day

Indigenous Literacy Day Source: SBS Tamil

Indigenous Literacy Day – பூர்வீக குடி மக்கள் எழுத்தறிவு நாள், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் முதல் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இது குறித்த நிகழ்ச்சியைப் படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.


அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் 1966ஆம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 8ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறிய வைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான UNESCOவின் முன்னெடுப்பில் நடந்து வருகிறது.

வயது வந்தவர்களில் சுமார் 773 மில்லியன் பேர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இந்த உலகில் வாழ்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, மற்றும் எண் கணக்கும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.  சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, 15 முதல் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்களில் கால் பகுதியினர் இப்படி எழுத்தறிவில்லாமல் இருந்ததாக UNESCO தரவுகள் சொல்கின்றன.  தற்போது இந்த எண்ணிக்கை 8% மட்டுமே என்பதிலிருந்து, UNESCO எடுத்துள்ள முன்னெடுப்பு பயன் தந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.  இந்தத் தரவுகள் எல்லாமே உலகளாவிய எண்ணிக்கைகள்.  நம் நாட்டில் நிலமை எப்படியிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

15 வயதிற்கும் 74 வயதிற்குமிடைப்பட்ட ஆஸ்திரேலியர்களில் சுமார் 96.3 சதவீதமானவர்கள் Level 1 எனப்படும் அடிப்படை எழுத்தறிவு பெற்றவர்கள் என்று ஆஸ்திரேலிய புள்ளிவிபரத்துறையின் தரவுகள் சொல்கின்றன.  அதாவது இந்த வயதுகளுக்கு இடைப்பட்டவர்களில் சுமார் 620,000 பேர் எழுத்தறிவு இல்லாமல் இருக்கிறார்கள்.  அவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பூர்வீக பின்னணி கொண்டவர்கள் என்பது வருந்தத்தக்க உண்மை.

எழுத்தறிவு எமக்கு பல வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பது நாம் அறிந்த விடயம்.  ஆனால், இந் நாட்டிலுள்ள பூர்வீக குடி மக்களின் நிலமை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதை அவதானித்த சிலரின் முனைப்பான செயற்பாடு, நிலமையைத் தற்போது சற்று சீர் தூக்கி உள்ளது எனலாம்.  அது என்ன கவலைக்குரிய நிலை?  இதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சிறு தரவு மட்டுமே போதுமானது என நினைக்கிறேன்.  உங்கள் வீட்டில் எத்தனை புத்தகங்கள், சஞ்சிகைகள் இருக்கின்றன என்று ஒரு மனக்கணக்கை எடுங்கள்.  அத்துடன், ebooks எனப்படும் எண்ம நூல்களையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்.  எத்தனை நூல்கள்?  பலரது பதில்கள் நூறு அல்லது அதற்கும் அதிகமான ஒரு இலக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.  ஆனால்,  சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் பூர்வீக பின்னணி கொண்டவர்களில் 92 சத வீதத்திற்கும் அதிகமானவர்கள் வீட்டில் ஐந்து நூல்கள் இருந்தாலே ஆச்சரியமான விடயமாக இருந்திருக்கிறது.  முக்கிய நகரங்களில் வாழ்பவர்களில் பூர்வீக பின்னணி இல்லாதவர்களில் 95% மாணவர்கள் e5 என்ற தரத்திற்கும் மேலான எழுத்தறிவைக் கொண்டிருந்த நிலையில், Northern Territory பிராந்தியத்தில் உள்ள தொலைதூர சமூகங்களில் வாழும் குழந்தைகளில் 30 சதவீதமான குழந்தைகளே e5 என்ற குறைந்தபட்ச வாசிப்புத் தரத்தை எய்திருந்தார்கள்.  இந்தக் குழந்தைகள் பல பூர்வீக மக்கள் பேசும் மொழிகளைப் பேசுகிறார்கள்.  அவர்கள் மொழியில் புத்தகங்கள் இல்லை என்றே சொல்லலாம்.  பெரும்பாலும் அவர்கள் ஆங்கிலத்தில் புத்தகங்களை வாசிக்க வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால் அவர்கள் அவற்றைத் தேடிச் செல்வதும் இல்லை.  எழுத்தறிவில் இருக்கும் இந்த இடைவெளியைக் குறைக்க பூர்வீக குடி மக்களுக்கான எழுத்தறிவு அறக்கட்டளை - Indigenous Literacy Foundation என்ற அமைப்பை Suzy Wilson என்பவர் நிறுவினார். 

நாட்டிலுள்ள பிரசுரத் துறையின் ஆதரவோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த அறக்கட்டளை, பூர்வீக குடிமக்களின் மொழிகளிலும் ஆங்கில மொழியிலும் கலாச்சார ரீதியாக அவர்களுக்குப் பொருத்தமான புத்தகங்களைப் பதிப்பித்து விநியோகிக்கிறார்கள்.  இதுவரை 350,000 ற்கும் மேற்பட்ட புத்தகங்களை 270 ற்கும் அதிகமான தொலை தூரங்களில் வாழும் சமூகங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்கள்.

இந்த அறக்கட்டளையின் முன்னெடுப்பில், எழுத்தறிவை பூர்வீக குடி மக்களிடையே அதிகரிப்பதற்கும், அது குறித்த விழிப்புணர்வை மற்றைய ஆஸ்திரேலியர்களிடையே ஏற்படுத்தவும் செப்டம்பர் மாதத்தின் முதல் புதன்கிழமையை Indigenous Literacy Day – பூர்வீக குடி மக்கள் எழுத்தறிவு நாள் என்று கொண்டாடுகிறார்கள்.  இதற்காக நாடு முழுவதிலும் விழிப்புணர்வு மற்றும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால், மாற்றம் ஏதாவது நிகழ்ந்துள்ளதா என்ற கேள்வி உங்கள் மனதில் எழக்கூடும்.  நாட்டிலுள்ள மாணவர்களிடையே எழுத்தறிவு மற்றும் கணித அறிவை பரீட்சிக்கும் NAPLAN என்ற பரீட்சைகள் ஆரம்பித்த 2008 ஆம் ஆண்டின் முடிவுகளை விட, கடந்த வருடம் பூர்வீக பின்னணி கொண்ட மாணவர்களில் பாரிய முன்னேற்றம் காணப்படுகிறது.  அவர்களது பெறுபேறுகள் இரட்டிப்பாக உயர்ந்துள்ளன.

இருப்பினும், ஒட்டுமொத்தமாக, பூர்வீக பின்னணி கொண்ட மாணவர்கள், மற்றைய மாணவர்களை விட பல பகுதிகளில் மோசமாக உள்ளனர்.

சரியான திசையில் ஒரு படி தான் இது என்கிறார் The Australian Curriculum, Assessment and Reporting Authority என்ற ஆணையத்தின் தலைவர் David de Carvalho.  ஆரம்பப் பள்ளி மட்டத்தில் தான் மிகப்பெரிய முன்னேற்றம் தெரிகிறது என்கிறார் அவர்.

மேல் நிலைப் பள்ளியில் ஏற்பட்டுள்ள தேக்கம் ஒரு பிரச்சினை என்று சுட்டிக்காட்டிய David de Carvalho, இது குறித்து மேலும் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார்.

அதற்கு, தேசிய குறைந்த பட்ச தரம் - national minimum standard உயர்த்தப் பட வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.  அவர்களில் ஒருவர் Grattan Institute என்ற நிறுவனத்தின் கல்வித் திட்ட இயக்குநர் Dr Peter Goss.

பூர்வீக சிறுவர்களிடையே எழுத்தறிவை அதிகரிக்க நாமும் பங்களிக்கலாம் என்கிறார் Indigenous Literacy Foundation என்ற அமைப்பை நிறுவிய Suzy Wilson.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand