“இந்த மண் எங்களின் சொந்த மண்” – எடீ மாபோ

Mabo Day - June 03

Mabo Day - June 03 Source: SBS Tamil

பூர்வீக மக்களின் நில உரிமையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய Eddie Mabo தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் ஜூன் 3, 1992. Terra Nullius, அதாவது இந்த மண்ணில் யாரும் குடியிருக்கவில்லை, என்று பிரித்தானியர்கள் பிரகடனப்படுத்தி, குடியேறி, பூர்வீக மக்களுக்கு நில உரிமை இல்லை என்று சட்டம் இயற்றி சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த சிந்தனைக்கு சவால் விட்ட Edward Koiki Mabo குறித்த நிகழ்ச்சியைப் படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.


பூர்வீக மக்களின் நில உரிமையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர், Torres Straight தீவுகளில் பிறந்த Eddie Mabo.  அவரது முன்னெடுப்பில் நடந்த உச்ச  நீதி மன்ற வழக்கின் இறுதித் தீர்ப்பு 1992ஆம் ஆண்டு, ஜூன் மூன்றாம் நாள் வழங்கப்பட்டது.  இதனை ஒரு விடுமுறை நாளாக அரசு அறிவிக்க வேண்டும் என்ற குரல் 2002ஆம் ஆண்டில் ஆரம்பமானது.  பூர்வீக குடி மக்களுக்கான ATSIC  என அழைக்கப்படும் Aboriginal and Torres Strait Islander Commission ஆணையம் ஜூன் மூன்றாம் நாளை, Mabo Day மாபோ தினம் என்று அறிவித்தது.  நாட்டின் சரித்திரத்தையே மாற்றிய அந்த வழக்கின் தீர்ப்பை நாட்டிலுள்ள அனைவரும் கொண்டாட வேண்டும் என்றும், அந்த மாற்றத்தைக் கொண்டு வந்தவர் ஒரு சாதாரண மனிதன் தான் என்றும் கூறுகிறார் Eddie Maboவின் மகள் Gail Mabo.

Eddie Mabo ஒரு சாதாரண மனிதனாகத் தான் பிறந்தார்.  ஒரு சாதாரண மனிதனாகத் தான் வளர்ந்தார்.  1936ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் நாள், தற்போது Murray Island என்று அழைக்கப்படும் Mer தீவில் பிறந்தார்.  Torres Strait தீவுகளில் ஒன்றான இந்தத் தீவில் அவர் பிறந்தது Sambo குடும்பத்தில்.  பிறக்கும் போது அவர் பெயர், Eddie Koiki Sambo.  சிறு வயதிலேயே மாமா முறை கொண்டவர் இவரைத் தத்தெடுத்ததால், தன் பெயரை Eddie Koiki Mabo என்று மாற்றிக் கொண்டார்.  இவரது இளமை வாழ்க்கை சாதாரணமானதாகவே அமைந்திருந்தது.  கல்வி அறிவு பெறுவதிலும் வாழ்விலும் பிரித்தானிய சமூகத்தினரிடம் மற்றைய பூர்வ குடி மக்கள் போல, இரண்டாம் நிலையில் தான் இருந்தார்.  தனது இளவயது காதலி Boneta வைக் கைப்பிடித்து வாழ்நாள் முழுவதும் அவருடனே வாழ்ந்து 10 குழந்தைகளுக்குத் தகப்பன் ஆனார்.

ஆரம்ப நாட்களில் முத்துக் குளிப்பவராகவும், கரும்புத் தோட்ட தொழிலாளியாகவும், ரயில் பாதை கட்டுமானப் பணியாளராகவும் வேலை பார்த்த Eddy Mabo, Queensland மாநிலத்தின் Townsville என்ற இடத்தில் உள்ள James Cook பல்கலைக்கழகத்தில் தோட்ட வேலைகள் செய்வதற்காக வேலைக்கமர்த்தப்பட்டார்.  அங்கு கடமையாற்றிய இரண்டு பேராசிரியர்களின் நட்பு கிடைத்த பின்னர் தான் அவரது வாழ்க்கையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது.  பேராசிரியர் Henry Reynolds மற்றும் சரித்திர ஆசிரியர் Noel Loos என்ற இருவர் Eddy Maboவுடன் நட்புடன் பழக ஆரம்பித்த பின்னர் தான் நில உரிமை குறித்த அதிர்ச்சி தரும் உண்மை அவருக்குத் தெரிய வந்தது.  15 சந்ததியினர் உரிமை கொண்டிருந்த தனது பூர்வீக மண்ணின் மேல் அவருக்கு சட்ட உரிமை எதுவும் இல்லை என்ற உண்மை தெரியவந்தது.  இதனை சரித்திர ஆசிரியர் Noel Loos இவ்வாறு நினைவு கூருகிறார்.

Eddy Maboவைப் பொறுத்த வரை, தான் பிறந்த மண், தனது சந்ததியினர் தொடர்ச்சியாக வாழ்ந்த மண், அவருடைய சொந்த மண் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  அதையே நம்பி அவர் வாழ்ந்து வந்திருக்கிறார்.

அந்த நம்பிக்கையில் உண்மை இல்லை என்று தெரிந்த போது தான், Eddy Mabo, நில உரிமை குறித்த தனது போராட்டத்தை ஆரம்பித்தார் என்பதை நினைவு கூர்ந்தார் பேராசிரியர் Henry Reynolds.

Eddy Maboவின் குழப்பத்தை நாம் பூரணமாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் சற்று பின்னோக்கி சரித்திரத்தில் நடந்தவற்றைக் கூர்ந்து பார்க்க வேண்டும்.  பிரித்தானியர்கள் இந்த நாட்டில் காலடி வைத்த போது, Terra Nullius – “இந்த மண்ணில் யாரும் குடியிருக்கவில்லை” என்று பிரித்தானியர்கள் பிரகடனப்படுத்தி பெருமளவில் இந்த மண்ணில் குடியேறி, இங்கு வாழ்ந்த பூர்வீக மக்களுக்கு நில உரிமை இல்லை என்று சட்டம் இயற்றினார்கள்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த சிந்தனைக்கு, சட்டப்படி சவால் வந்தது.

நிலத்தில் உரிமை கொண்டாட சட்டப்படி உறுதிப் பத்திரம் எதுவும் தனது கைகளில் இல்லாவிட்டாலும் சந்ததி சந்ததியாகத் தான் வாழ்ந்த மண் தனக்கே உரித்தானது என்று Eddy Mabo வழக்குத் தொடர்ந்தார்.  “இல்லை, அந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது” என்று குயின்ஸ்லாந்து மாநில அரசு வாதிட்டது.  பேர்த் நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் Greg McIntyre வழக்கை முன்னெடுக்க ஒப்புக்கொண்டார்.  Barrister Ron Castan மற்றும் Barrister Bryan Keon-Cohen ஆகியோர் இந்த வழக்கில் இணைந்து வாதாடினார்கள்.

இதில் ஆறு விடயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இவர்கள் வாதிட்டார்கள்.  இறையாண்மை, நில பயன்பாடு, சொத்துரிமை, பரம்பரை பரம்பரையாக அங்கு வாழ்ந்தமை, இழப்பீடு, மற்றும் இதனால் ஏற்படக்கூடிய அரசியல் தாக்கங்கள் என்ற ஆறு விடயங்களில் இந்த வழக்கு வாதாடப்பட்டது.

இந்த வழக்கு ஆரம்பிக்க முன், ஐந்து ஆண்டுகள் அதற்கான ஆவணங்களைத் தேடி அட்டவணைப் படுத்தினார் Eddy Mabo.  ஆரம்பக் கல்வி மட்டுமே கற்றிருந்த Eddy Mabo தனது கல்வித் தராதரத்தை சற்று மேம்படுத்திக் கொண்டார்.  தனது சமூகத்தின் மேம்பாட்டிற்காக, பூர்வீக மக்களுக்கான பாடசாலைகளை நிறுவ உதவி புரிந்தது மட்டுமல்லாமல் அவற்றில் ஒரு ஆசிரியராகவும் கடமையாற்றினார்.  இவரது வழக்கை முன்னெடுக்க Reverend Dave Passi, Sam Passi, James Rice, Celuia Mapo Salee மற்றும் Barbara Hocking ஆகியோர் இணைந்து கொண்டார்கள்.  அவருக்கு உதவ வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியை பெற்றிருந்தாலும் வன்முறை வழிகளை முற்றாகத் தவிர்த்து சட்ட வழிகளில் மட்டுமே தனது போராட்டத்தை முன்னெடுத்தார் Eddy Mabo.  அவரது திடமான போக்கு பற்றி அவரது மகளும் பூர்வீக மக்களுக்காக தற்போது குரல் கொடுத்து வருபவருமான Gail Mabo இவ்வாறு சொல்கிறார்.

1982ஆம் ஆண்டு மே 20ஆம் நாள் இந்த வழக்கிற்கான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகின.  அதனை முறியடிக்க நினைத்த குயின்ஸ்லாந்து மாநில நாடாளுமன்றம் 1985 ஆம் ஆண்டில் நில உரிமை குறித்த ஒரு சட்டம் நிறைவேற்றியது.  Murray தீவில் வாழும் பூர்வீக மக்களுக்கு அந்த மண்ணில் நில உரிமை எதுவும் இல்லை என்று Queensland Coast Islands Declaratory Act சொல்கிறது.  இந்த சட்டம் ஆஸ்திரேலிய அரசியலமைப்பிற்கு முரணானது என்று இன்னொரு வழக்கையும் Eddy Mabo குழுவினர் தொடுத்து விட்டனர்.

இந்த வழக்கை குயின்ஸ்லாந்து மாநில உச்ச நீதிமன்றம் ஆராய வேண்டும் என்று நீதிபதி Sir Harry Gibbs 1986 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் நாள் அனுப்பி வைத்தார்.  1975 நிறைவேற்றப்பட்ட நாட்டின் இனப்பாகுபாடு சட்டத்துடன் முரண்பட்டதால், 1985 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட நில உரிமை குறித்த ஒரு சட்டம் செல்லாது என்று, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி Moynihan தீர்ப்பளித்தார்.  1990ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பூர்வீக நிலத்தில் உரிமை இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க, உரிமையுள்ள ஒருவர், நில உரிமை கேட்க முடியுமா என்று ஆராய வேண்டும் என்ற நோக்கில் வழக்கை தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் ஒத்துக் கொண்டது.

Eddy Mabo மற்றும் Mer தீவு மக்களால் முன் வைக்கப்பட்ட வழக்கு, அவர்களது பூர்வீகம், பழக்க வழக்கம், உள்ளூர் சட்டங்கள் மற்றும் அந்த மண்ணின் பாரம்பரிய உரிமையுடனான அமைப்புக்கு அடிப்படையானது என்பதையும், நிலம் தொடர்பான அவர்களின் பாரம்பரிய உரிமைகள் மற்றும் கடமைகளையும் உறுதிப்படுத்துவதை வெற்றிகரமாக நிரூபித்தது.

1992 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வழங்கப்பட்ட உச்ச நீதி மன்ற தீர்ப்பை வழங்கிய ஏழு நீதிபதிகளில் ஆறு பேர் பூர்வீக மக்களின் நில உரிமை குறித்த கோரிக்கையை உறுதிசெய்தார்கள்.  பிரித்தானியக் குடியேற்றம் ஏற்பட்டபோது இந்த கண்டத்தின் நிலங்கள் “யாருக்கும் சொந்தமில்லாத நிலங்கள்” - terra nullius என்பது தவறான எண்ணம் என்றும், Mer தீவு மக்களுக்கு அந்த மண்ணின் மீது ‘உரிமை உண்டு’ என்றும் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, ஆஸ்திரேலியா என்ற ஒரு நாடு உருவான பின்னர் ஒரு நீதிபதி வழங்கிய மிக முக்கிய தீர்ப்பு இது என்று அப்போதைய பிரதமர் Paul Keating தனது பதிலில் குறிப்பிட்டார்.

Eddy Mabo வழக்குத் தொடர்ந்து சுமார் 18 வருடங்களின் பின்னர் தான், பூர்வீக குடி மக்களுக்கு அவர்களது பூர்வீக நிலத்தில் சட்ட உரிமை இருக்கிறது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.  ஆனால், இந்த தீர்ப்பு வெளியாகுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த Eddy Mabo இறந்து விட்டார்.  பூர்வீக பின்னணி கொண்டிராத மக்கள் ஏற்கனவே சொந்தம் கொண்டாடும் நிலங்களின் உரிமையில் பாதிப்பில்லாமல், அரசுக்கு சொந்தமான நிலங்கள் தேசிய பூங்காக்கள் மற்றும் சில குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் மேல் மட்டும் பூர்வீக மக்கள் தங்கள் உரிமையை நிரூபித்தால் அந்த நிலங்களை உரிமை கொள்ளலாம் என்று இந்த சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பதால் இந்த தீர்ப்பை இருப்பவர்களும் இருக்கிறார்கள்.  ஆனால், இந்தத் தீர்ப்பை சரியான கோணத்தில் தான் பார்க்க வேண்டும் என்று Eddy Maboவை வழிகாட்டிய பேராசிரியர் Henry Reynolds சொல்கிறார்.

Eddy Mabo இறந்துவிட்டாலும் 1992ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் வழங்கும் Human Rights and Equal Opportunity Award என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  James Cook பல்கலைக்கழகம் தனது நூலகத்திற்கு அவரின் பெயரை சூட்டி இருக்கிறது.  ஜூன் மாதம் மூன்றாம் நாள் Mabo தினம் என்று ஆஸ்திரேலிய பூராகவும் கொண்டாடப்படுகிறது.  அவரது வெற்றி அவருடன் முடியாது என்று கூறும் அவரது மகள் Gail Mabo, உரிமைகளுக்கான குரல் தொடர்ந்து ஒலிப்பதன் ஒரு அடையாளம் Mabo என்கிறார்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand