“என்னை சுவாசிக்க விடுங்கள்” – இங்கும் எதிரொலிக்கும் உலகளாவிய அழைப்பு

"Justice for David Dungay Jr." campaign (Left); and "Black Live Matters" protesters in Sydney

"Justice for David Dungay Jr." campaign (Left); and "Black Live Matters" protesters in Sydney. Source: SBS Tamil

Black Lives Matter போராட்டம் உலகளாவியளவில் நடக்கையில், நமது மண்ணில் அதன் எதிரொலி மேலும் வலுப்பெற்றுள்ளது. நாடு முழுவதும் சிறை வைக்கப்படும் பூர்வ குடிமக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பிரச்சாரம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.


அளவுக்கதிகமான பூர்வீக குடிமக்கள் சிறை வைக்கப்படுகிறார்கள், அந்த சிறைகளிலேயே அவர்கள் மரணிக்கிறார்கள் என்பதை 1987 ஆம் ஆண்டு விசாரித்த Royal Commission முடிவுகளில் சொல்லப்பட்ட பரிந்துரைகள் இன்னமும் முழுமையாக செயல்வடிவம் பெறவில்லை.

இது குறித்த நம்ம ஆஸ்திரேலியா நிகழ்ச்சியைப் படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

 


 

Diabetes, நீரழிவு அல்லது சர்க்கரை வியாதி என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக் கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பு.  இந்த நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும்.  அவர்களுக்கு அடிக்கடி தலைச்சுற்று வரலாம். அதற்காக இனிப்பாக ஏதாவது சாப்பிட்டு உடனடி நிவாரணம் தேடிக் கொள்ளலாம்.  ஒப்பீட்டளவில், மற்றைய ஆஸ்திரேலியர்களைக் காட்டிலும் பூர்வ குடி மக்களில் அதிகமானவர்கள் Diabetes நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  அப்படிப் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் Kempsey என்ற இடத்தில் வாழ்ந்த Dunghutti பூர்வ குடிமகன் David Dungay Jr.

வன்முறை, கொள்ளை, மற்றும் அவரது காதலி மீது பாலியல் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டார் என்ற குற்றங்களுக்காக David Dungay Jr. 2009 ஆம் ஆண்டு முதல் ஒன்பதரை ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தவர்.

Diabetes நோயால் மட்டுமல்ல, schizophrenia என்ற எண்ணம், செயல் ஆகியவை மாறுபட்டுச் செயல்படும் மனக் கோளாறாலும் பாதிக்கப்பட்டிருந்த அவர், விடுதலையாவதற்கு இரண்டு வாரங்கள் இருக்கும் போது, குறிப்பாகச் சொல்வதென்றால், 2015ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் இருபத்தொன்பதாம் நாள் அவருடைய இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறைந்து போக, அவருக்கு தலை சுற்றுவது போல் உணர்கிறார்.  அதனை சரி செய்வதற்காக, Tim Tam என்ற இனிப்பு வகை biscuit எடுத்து சாப்பிடுகிறார்.  அதனைக் கண்ட சிறைக் காவலாளி, அதனை சாப்பிட வேண்டாம் என்று கட்டளையிடுகிறார்.  ஆனால், தனது தேவையைப் பூர்த்தி செய்வதையே கருத்தாகக் கொண்டிருந்த David Dungay Jr. தொடர்ந்து அதனை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.  தனது சொல் கேட்காத David Dungay Jr. மீது சிறைக் காவலாளிக்கு சினம் வருகிறது.  மிரட்டுகிறார்.  ஆனால் David Dungay Jr. அதைக் கேட்பதாகத் தெரியவில்லை.  வேறு காவலாளிகளும் இணைந்து கொள்கிறார்கள்.  David Dungay Jr. அந்த சிறையிலிருந்து அகற்றப்பட்டு வேறொரு அறைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.  அதற்கு ஒரு நிமிட அவகாசம் மட்டுமே வழங்கப்படுகிறது.

David Dungay Jr. சிறை வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சிறை அதிகாரிகள் போருக்குச் செல்வது போல் நுழைகிறார்கள்.  David Dungay Jr.ரை மடக்கிப்பிடித்து கையில் விலங்குகள் மாட்டி அவரை இன்னொரு அறைக்கு அழைத்து செல்கிறார்கள்.

அங்கேயிருக்கும் படுக்கையின் மேல் அவர் தள்ளி விடப்பட்டு, அவர் உடலின் மேல் சில சிறை அதிகாரிகள் ஏறி உட்கார்ந்து கொண்டு அவரை அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள்.  David Dungay Jr. மீண்டும் மீண்டும் ஒரு வார்த்தையை சொல்கிறார்.

“என்னால் மூச்சு விட முடியவில்லை,” “என்னால் மூச்சு விட முடியவில்லை” என்று David Dungay Jr. மீண்டும் மீண்டும் சொல்கிறார். 

David Dungay Jr.ரின் கதை சற்று சிக்கலானது. ஆனால், சிறையில் அவரது மரணத்திற்குப் பங்களித்த அல்லது தொடர்புடைய பல காரணிகள் - மருத்துவ சிக்கல்கள் உட்பட, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல பூர்வீக குடிமக்களின் மரணங்கள் தொடர்புடைய காரணிகளில் பல வருடங்களாக எந்த மாற்றமும் இல்லை.

அண்மையில் அமெரிக்காவில் George Floyd என்பவர் காவல்துறையின் கைகளில் இறந்ததைத் தொடர்ந்து உலகெங்கும் நடக்கும் போராட்டங்கள், தமது நிலையை எதிரொலிப்பதாக பூர்வீக குடி மக்கள் பார்க்கிறார்கள்.  David Dungay Jr. இறக்கும் முன் கூறிய “என்னால் மூச்சு விட முடியவில்லை” என்ற அதே வார்த்தைகளையே George Floyd என்பவரும் மீண்டும் மீண்டும் கூறினார் என்பதைக் கேட்பவர்களுக்கு, அது தமது நிலையைப் பிரதிபலிக்கிறது என்று நினைப்பதில் தவறில்லை தானே?

David Dungay Jr.ரின் கதை சிக்கலானது தான்.  ஆனால், சிறையில் வைக்கப்பட்ட David Dungay Jr.ரின் கதை தனித்துவமானது அல்ல.  அவரது மரணமும் தனித்துவமானது அல்ல.  லண்டன் பல்கலைக்கழகத்தின் Birbeck குற்றவியல் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்,  உலகெங்கிலுமுள்ள சிறைகளில் எத்தனை பேர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தரவை வெளியிட்டிருக்கிறார்கள்.  223 சட்ட ஆட்சி எல்லைகளின் தர வரிசையில், 93ஆம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவில் சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 20 வருடங்களில் தொடர்ந்து உயர்ந்து வந்திருக்கிறது.  அதில் பூர்வீக பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.  அமெரிக்கா, கனடா, மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அங்குள்ள பூர்வீக மக்களைக் காட்டிலும் அதிகப்படியான ஆஸ்திரேலியப் பூர்வீக மக்கள் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.  நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3% மட்டுமே பூர்வீக குடிமக்களாக இருந்த போதிலும், ஆஸ்திரேலிய சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 29%ற்கும் அதிகமானவர்கள் பூர்வீக குடி மக்கள்.

மீண்டும் David Dungay Jr. மரணத்தை உதாரணமாகப் பார்ப்போம்.  இவரது மரணம் குறித்து ஒரு விசாரணை – inquest – சுமார் மூன்று வருடங்களின் பின்னர், 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகியது, தீர்ப்பு 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்டது.  David Dungay Jr. மரணமான வேளை அவரைக் கட்டுப்படுத்திய ஐந்து காவலர்களில் எவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கத் தேவையில்லை என்றும், அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியில் சொல்லப்பட்டதையே அவர்கள் செயல்படுத்தினார்கள் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

David Dungay Jr. மரணமும் அது குறித்த விசாரணையில் வழங்கப்பட்ட தீர்ப்பும் எந்த வித மாற்றமும் இல்லாமல் பல வருடங்களாகத் தொடர்கிறது.

அளவுக்கதிகமான பூர்வீக குடிமக்கள் சிறை வைக்கப்படுகிறார்கள், அந்த சிறைகளிலேயே அவர்கள் மரணிக்கிறார்கள் என்ற குரல் 1987 ஆம் ஆண்டில் வலுப்பெற்ற போது, இது குறித்த ஒரு Royal Commission விசாரணையை நடத்த அரசு ஒப்புக் கொண்டது.  அந்த விசாரணையின் முடிவுகள் 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு அறிக்கையாக வெளியிடப்பட்டது. 

தமது விசாரணையில் உதாரணம் காட்டப்பட்ட ஒவ்வொரு மரணத்தின் சூழ்நிலைகளும் மிகவும் மாறுபட்டவை என்றும் பொதுவான அதிகார மீறல்கள் அல்லது இனவெறி போன்றவற்றைக் குறிப்பிட்டு சுட்டிக்காட்ட முடியாது என்றும் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.  சிறையில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை விகிதங்களில் பூர்வீக மக்களுக்கும் மற்றைய ஆஸ்திரேலியர்களுக்குமிடையில் பாரிய வேறுபாடு இல்லை என்றாலும் சிறை வைக்கப்படும் பூர்வீக மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களில் இறப்பு எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது என்று அந்த அறிக்கை மேலும் சொல்கிறது.

அந்த அறிக்கையில் 339 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.  சிறைவாசம் என்பது ஒரு கடைசித் தீர்வாக மட்டுமே இருக்க வேண்டும், தேவையான இடங்களில் மருத்துவ உதவி வழங்கப்படுதல், பூர்வீக குடி சமூகங்களுடன் காவல்துறை மேலும் ஒத்துழைத்தல் மற்றும் நல்லிணக்க செயல் முறையைத் தொடங்குவது ஆகியவை அவற்றில் அடங்கும்.

இந்த பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன என்று பூர்வீக மக்கள் நல விவகார அமைச்சர் 2017ஆம் ஆண்டு நடத்திய விசாரணை முடிவுகளில் 64% பரிந்துரைகள் தான் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகக் கண்டறிந்தது.

ஆனால், இன்றும், Royal Commission விசாரணை முடிந்து முப்பது வருடங்கள் முடிந்த பின்னரும் அதில் பரிந்துரைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகள் இன்னமும் செயற்படவில்லை என்று பூர்வீக மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.  அவர்களில் ஒருவர், பிரபல ஊடகவியலாளர் Stan Grant.

சிறை வைக்கப்படும் பூர்வீக பின்னணி மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க, NSW மாநில அரசு உட்பட வேறு மாநில அரசுகளும் உறுதிபூண்டுள்ளன. இதற்கான ஒரு திட்ட வரை படத்தை NSW மாநில அரசின் சட்ட அமைச்சர் பரிசீலனைக்கு 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதனைத் தான் ஏற்றுக் கொண்டிருந்தாலும் இதற்கான ஒரு எளிய தீர்வு தனக்குத் தெரியவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.  ஆனால், இந்த முன்மொழிவு நாடு முழுவதும் பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் ஆர்வலர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், இதுவரை எந்த சட்டமும் முன்மொழியப்படவில்லை.

 

 

 

 

 


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand