ஆஸ்திரேலியாவின் தவிர்க்கமுடியாத வரலாற்று அடையாளங்களுள் முக்கியமான பெயர் நெட் கெல்லி (Ned Kelly). Bushranger என்ற அடைமொழியோடு, போற்றவும் தூற்றவுமான இருவேறு மனோவியல்புகளை மக்களின் மத்தியில் விதைத்த ஒரு விநோத ஆளுமை. நெட் கெல்லி மறைந்து நூறாண்டுகளுக்கு மேல் ஆன பிறகும் கூட நெட் கெல்லி குறித்த சர்ச்சைகள் ஓயவில்லை. ஒரு சாரார் அவனை வீரப்போராளியாகக் கொண்டாடிக்கொண்டிருக்க, மற்றொரு சாரார் கொலைப்பாதகன் என்று பதைபதைத்திருக்க.. இடையில் ஒரு சாரார் இரண்டுவகையிலும் நெட் கெல்லியை அடையாளப்படுத்த இயலாமல் அனுதாபத்துக்கு உரியவனாகப் பார்க்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் அன்றைய காலனியாதிக்கத்தின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக, நசுக்கப்பட்டவர்களின் ஆதரவைத் திரட்டிக்கொண்டு, காவல்துறைக்குப் பெரும் சவாலாய் திருட்டு, கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு, காடுகளில் மறைந்துவாழ்ந்து, தந்திரமாய் சுற்றிவளைக்கப்பட்டு, 26 வயதில் கைதாகி, தூக்கில் தொங்கவிடப்பட்ட நெட் கெல்லியை ஆஸ்திரேலியாவின் கட்டபொம்மன் என்கிறார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், ஆஸ்திரேலியாவின் மம்பட்டியான் என்கிறார் எழுத்தாளர் சத்யானந்தன்.
தன்னுடைய 14 வயது முதல் 26 வயது வரை சுமார் பத்தாண்டுக்கும் மேலாக ஆதிக்கவர்க்கத்துக்கு எதிராகப் போராடி அவர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய நெட் கெல்லியை தங்கள் கதாநாயகனாகவே பார்த்தது அன்றைய அடித்தட்டு வர்க்கம். காவல்துறையினருடனான துப்பாக்கிச் சண்டையின்போது நெட் கெல்லி பயன்படுத்திய இரும்புக்கவசமும் இரும்பு முகமூடியும் கடந்த காலத்தை நினைவுபடுத்தியபடி இன்றும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. As game as Ned Kelly என்பது இப்போதும் மூத்த தலைமுறையினரிடம் புழங்கப்படும் உவமைக் குசும்பு.
நெட் கெல்லியின் வாழ்க்கைக்கதை நெட் கெல்லியின் தந்தை எட்வர்ட் கெல்லியிடமிருந்து துவங்குகிறது. அயர்லாந்தில் பிறந்த அவர் தனது 21-ஆம் வயதில் இரண்டு பன்றிகளைத் திருடிய குற்றத்துக்காக ஏழு வருடங்கள் டாஸ்மேனியா தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். தண்டனைக்காலம் முடிந்தபிறகு நியூ சௌத் வேல்ஸ் சென்ற அவர் அயர்லாந்திலிருந்து குடியேறியாக வந்த எல்லன் என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு எட்டுப் பிள்ளைகளுக்குத் தகப்பனானார். குடும்பத்தின் வறிய சூழல் அவரை குதிரைத் திருட்டுக்குத் தள்ளியது. அடிக்கடி சிறைக்குச் சென்றார். குடிக்கு அடிமையாகி உடல் நலிந்து இறந்தார். அவர் இறந்தபோது மூத்த பிள்ளை நெட் கெல்லிக்கு வயது 11.
தந்தையின் மறைவுக்குப் பின் மொத்தக் குடும்பத்தையும் காப்பாற்றும் பொறுப்பு சின்னஞ்சிறு நெட் கெல்லியின் பிஞ்சுக் கரங்களுக்கு வந்துசேர்ந்தது. நெட் கெல்லியின் பள்ளிப் படிப்பு நிறுத்தப்பட்டது. மரம் வெட்டுவது, கால்நடைகளை ஓட்டிச்செல்வது, குதிரை பழக்குவது, வேலி அடைப்பது என்று சிறுவன் நெட் கெல்லி பார்க்காத வேலையில்லை. அனுபவிக்காத துயரமில்லை. செய்த வேலைக்குத் தக்க கூலி தராது இழுத்தடிக்கும் முதலாளிகளுக்கு எதிராகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் சின்னச்சின்ன கால்நடைத் திருட்டுகள் ஆரம்பமாயின.
பதினான்கு வயதானபோது ஒரு சீன வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்றதாகவும் தர மறுத்ததால் அவரை அடித்ததாகவும் நெட் கெல்லி மீது முதல் வழக்குப் பதிவானது. வேலையை வாங்கிக்கொண்டு சொன்ன கூலியைத் தராததால் எதிர்த்ததாக நெட் கெல்லியின் தரப்பில் சொல்லப்பட்டது. வழக்கு விசாரணையின் பின் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டான் சிறுவன் நெட் கெல்லி. அதன்பிறகு தொடர்ச்சியாக கால்நடைத் திருட்டு வழக்குகளில் நெட் கெல்லி சிக்குவதும் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்படுவதும் வழக்கமாயிற்று. 17 வயதில் குதிரைத் திருட்டுக்காக நெட் கெல்லிக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை கிடைத்தது.
அந்நாளைய பிரபல குற்றவாளியும், பல சமூகவிரோத காரியங்களில் ஈடுபட்டு பல முறை சிறைத்தண்டனை அனுபவித்தவனும், இறுதியாக சிறையிலிருந்து தப்பி காடுகளில் மறைந்து வாழ்ந்தவனுமான காடுறை கொள்ளையன் ஹாரி பவர் என்பவனின் அறிமுகமும் பயிற்சியும் சிறுவன் நெட் கெல்லியின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது. அதிகார வர்க்கத்துக்கும், அரசுக்கும், ஏழைகளின் உழைப்பை உறிஞ்சும் முதலாளிகளுக்கும் எதிராக கெல்லி நடத்திய போராட்டத்தில் கெல்லியின் சகோதரர்களும், உறவினர்களும் கூட்டாளிகளாய் இணைந்தனர். கெல்லியின் குழு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பெரிய அளவில் அரசுக்கும் காவல்துறைக்கும் எதிரான போராட்டத்தில் இறங்கியது.
எந்த வழக்கிலும் காவல்துறையிடம் பிடிபடாமல் போக்குக்காட்டிய நெட் கெல்லியின் தலைக்கு விலை வைக்கப்பட்டது. 500 பிரிட்டிஷ் பவுண்டுகளில் ஆரம்பித்த அது 8,000 பிரிட்டிஷ் பவுண்டுகளில் வந்து நின்றது. நெட் கெல்லி தன் தலையைத் தக்கவைக்க புதிய கவசமொன்றைத் தயாரித்தான். சுமார் 40 கிலோ எடையுடன், தலை, முகம், மார்பு, தோள்கள், முதுகு என உடலின் முக்கிய அவயங்களை மூடிய, கண்களுக்கு மட்டும் துளைகளிடப்பட்ட, கால் அங்குலப் பருமன் கொண்ட கனமான இரும்புக்கவசத்தை அணிந்தபடி எதிரிகளை எதிர்கொண்டான். நெட் கெல்லியைத் துளைக்க வந்த தோட்டாக்கள் இரும்புக்கவசத்தில் மோதித் திரும்பின. அரசு அதிகாரிகளின் ஆத்திரம் அதிகமானது. கவசத்தால் பாதுகாக்கப்படாத கால்களில் சுட்டு அவனைப் பிடித்தனர்.
நெட் கெல்லியின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்த ஃபிட்ஸ்பேட்ரிக் (FITZPATRICK) சம்பவம் இன்றுவரை மர்மம் நீடிக்கும் ஒரு சம்பவமாகும். நெட் கெல்லியைக் கைதுசெய்ய குடிபோதையோடு அவனது வீடு தேடிவந்த காவல் அதிகாரி ஃபிட்ஸ்பேட்ரிக், தன்னை நெட் கெல்லி கொல்லவந்ததாய் மணிக்கட்டு காயத்தோடு புகாரளித்ததன் பேரில் நெட் கெல்லியின் சகோதரர்களும் உறவினர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த சமயம், நெட் கெல்லி வீட்டில் இல்லை என்றும் ஃபிட்ஸ்பேட்ரிக் தானே தன் மணிக்கட்டில் அறுத்துக் கொண்டதாகவும் அதற்கு முதலுதவி செய்ததே நெட் கெல்லியின் தாயார் என்றும் கெல்லியின் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் எடுபடவில்லை. கொலைமுயற்சிக்கு உடந்தையென நெட் கெல்லியின் தாய் எல்லன் கைது செய்யப்பட்டு மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆறுமாதக் கைக்குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு துணிதுவைக்கும் பணி தரப்பட்டது. தாயை விடுவிக்க நெட் கெல்லி எடுத்த முயற்சிகள் பலனற்றுப்போயின.
நவம்பர் 3, 1880 அன்று நெட் கெல்லியின் மீதான குற்றம் வழக்குமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு அடுத்த எட்டாவது நாள் நவம்பர் 11, 1880 அன்று தூக்குக்கான நாள் குறிக்கப்பட்டது. தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டதுமே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்திரளான மக்கள் ஊர்வலங்கள் நடத்தினர். 32,000-க்கும் மேற்பட்ட கையெழுத்து தாங்கிய கருணைமனு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. எதுவும் பயனின்றிப் போனது. தூக்கு நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் குடும்பத்தாரின் நினைவுக்காக கெல்லியின் புகைப்படம் எடுக்கப்பட்டது. மகனுடன் பேச தாய்க்கு சிறுபொழுது அவகாசம் அளிக்கப்பட்டது. ‘சாகும்போதும் கெல்லியாகவே சாவாய், மகனே’ என்று வாழ்த்தினார் தாய். மறுநாள் மகன் தூக்கிலிடப்பட்டபோது, அதே சிறையில் இன்னொரு பக்கம் அத்தாய் அழுக்குத் துணிகளைத் துவைத்துக்கொண்டிருந்தார்.
‘Such is Life” என்ற கடைசி வாசகத்தோடு நெட் கெல்லி தூக்கை எதிர்கொண்டதாக அறியப்படுகிறது. நெட் கெல்லியைத் தூக்கிலிட்ட கையோடு அவரது நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள் மீதான தேடுதல் வேட்டை நடத்தியதன் பேரில், ஒரு வழியாக கெல்லி குழுமம் (Kelly gang) ஒழிக்கப்பட்டது.
தூக்கிலிடப்பட்டதோடு நெட் கெல்லியின் கதை முடிந்துவிடவில்லை. நூறாண்டுகளுக்கு மேலாக சர்ச்சையைக் கிளப்பியபடியே இருந்ததும் அவரது சாதனை எனலாம். 1929-ல் நடைபெற்ற மெல்பேன் சிறைச்சாலை சீரமைப்புப் பணியின் போது சிறைக்கல்லறையிலிருந்த உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன. நெட் கெல்லியை ஆராதித்த மக்கள் அங்கு கிடைத்த எலும்புகளையும் மண்டையோடுகளையும் அவருடையதாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் திருடிச் சென்றனர். மிகுந்த தேடுதல் வேட்டைக்குப் பின் நெட் கெல்லியின் மண்டையோடு மீட்கப்பட்டது. 1934-ல் மறுபடியும் காணாமற்போனது. 1952-ல் மீட்கப்பட்டது. 1972-ல் மீண்டும் திருட்டுபோனது.
ஒருவழியாக 2012-ல் கெல்லியின் குடும்பத்தாரிடம் மிச்ச எலும்புகள் ஒப்படைக்கப்பட்டு இறுதிமரியாதை செய்ய அனுமதியும் வழங்கப்பட்டது. நெட் கெல்லி இறந்து சரியாக 133 வருடங்களுக்குப் பிறகு 2013-ல் முறையாக அவரது உடலின் மிச்சமீதங்கள் அடக்கம் செய்யப்பட்டன.
நெட் கெல்லியின் வாழ்க்கை வரலாறு, எண்ணற்ற எழுத்தாளர்களையும், ஓவியர்களையும், இசைக்கலைஞர்களையும் ஏன்… திரைப்படத் தயாரிப்பாளர்களையும் கவர்ந்திழுத்துள்ளது. நெட் கெல்லி பற்றிய திரைப்படங்கள் நிறைய வெளிவந்துள்ளன. The true story of Kelly gang என்பது நெட் கெல்லியைப் பற்றி சமீபத்தில் வெளியான திரைப்படம்.
The story of the Kelly gang என்ற பெயரில் நெட் கெல்லியின் வாழ்க்கை பற்றி ஆஸ்திரேலியாவில் முதலில் தயாரிக்கப்பட்ட சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடியதும் 4000 அடி ஃபிலிம் நீளம் கொண்டதுமான மௌனத் திரைப்படம்தான் உலகின் முதல் முழுநீள திரைப்படம் என்று யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட சிறப்பு பெற்ற படம். ஆனால் காலப்போக்கில் திரைப்படத்தின் மூலப்பிரதியில் பெரும்பான்மை சிதைந்து அழிந்துவிட்ட நிலையில் தற்போது மூன்றில் ஒரு பங்குதான் காப்பாற்றப்பட்டுள்ளது.