National Aboriginal and Torres Strait Islander Children's Day - தேசிய பூர்வீக குடி மற்றும் Torres Strait தீவு குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் நான்காம் நாள் கொண்டாடப்படுகிறது.
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்கள், ஆரம்ப கல்விக் கூடங்களிற்குச் செல்பவர்கள் மற்றும் பொது மக்களும் இணைந்து இந்த குழந்தைகள் தினத்தை கொண்டாட அழைக்கப்படுகிறார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்படும் இந்த நாள், பூர்வீக குடி மற்றும் Torres Strait தீவுக் குழந்தைகளைக் கொண்டாடும் மிகப்பெரிய தேசிய நாள் ஆகும்.
பூர்வீக குடி மற்றும் Torres Strait தீவு மக்கள், குடும்பங்களாகத் தங்கள் குழந்தைகளின் பலத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டாடும் நேரம் மட்டுமல்லாமல், இந்நாட்டின் அனைத்து மக்களும் பூர்வீக குடி மற்றும் Torres Strait தீவுக் குழந்தைகள் மற்றும் அவர்களது கலாச்சாரத்திற்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் ஒரு நாள் இந்தக் குழந்தைகள் தினம் ஆகும்.
ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும், குடும்பம், சமூகம் மற்றும் கலாச்சாரம் வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் பகிர்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து இந்த குழந்தைகள் தினம் கொண்டாடப்படும். கடந்த வருடம் ஆரம்பக் கல்வியின் முக்கியத்துவத்தையும், நம் குழந்தைகளுக்கான பராமரிப்பையும் மனதில் வைத்து குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது: We Play, We Learn, We Belong – விளையாடுவோம் கற்றுக் கொள்வோம், எமது இருப்பை நிலை நிறுத்துவோம் என்ற கருப்பொருளில்,
- நாங்கள் எங்கள் மண்ணில் விளையாடுகிறோம்,
- எமது முன்னோர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறோம்,
- எங்கள் சமூகங்களில் நாமும் ஒரு அங்கம் வகிக்கிறோம்
- என்ற மூன்று உப தலைப்புகளில் கொண்டாடப்பட்டது.
இந்த வருட தலைப்பு, நாளைய தலைவர்கள் நாம்... எங்கள் கருத்துகளைக் கேளுங்கள் என்று பொருள்பட, “We are the Elders of tomorrow, hear our voice.”
Secretariat of the National Aboriginal and Islander Child Care அல்லது சுருக்கமாக SNAICC என்ற அமைப்பு இந்த குழந்தைகள் தினத்தை 1988ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.
‘First Aboriginal Child Survival Seminar’ என்ற தலைப்பில் மெல்பேர்ண் நகரில் 1979 ஆம் ஆண்டு நடந்த கருத்தரங்கத்தைத் தொடர்ந்து, சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக 1981 ஆம் ஆண்டில் SNAICC முறையாக நிறுவப்பட்டது.
- கலாச்சார ரீதியாக வலுவான குடும்பங்களையும் சமூகங்களையும் உருவாக்குவது,
- வலுவான உறுப்பினர்கள் மூலம் சேவைகள் வழங்குவது,
- கலாச்சார ரீதியாக வலுவான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குவது,
- பரந்து பட்ட மக்களிடையே விழிப்புணர்வையும் கலாச்சாரப் புரிதலையும் உருவாக்குவது,
- குழந்தைகளுக்கான வலுவான மற்றும் பயனுள்ள தேசிய உச்ச அமைப்பாக செயல்படுவது
– என்ற ஐந்து கொள்கைத் திட்டங்களுடன் SNAICC அமைப்பு செயல் படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதும் 500ற்கும் மேற்பட்ட குழந்தைகள் தின நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பணியிடங்களில், பாடசாலை மற்றும் மழலையர் பராமரிப்பு இடங்களில் பூர்வீக குடி மற்றும் Torres Strait தீவு மக்களின் அமைப்புகளுடனும் உள்ளூர் மக்களுடனும் இணைந்து குழந்தைகள் தின நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
காலை தேநீர், BBQ, கலாச்சார நடனம், கலை மற்றும் கைவினை அமர்வுகள், கலாச்சாரப் பரிமாற்றங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கதைசொல்லல், போட்டிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவையும் ஒழுங்கமைக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் COVID-19 தொற்றின் காரணமாக, இந்த வருடம் குழந்தைகள் தினத்தை நேரில் கொண்டாட முடியாமல் போய் விட்டது என்பதை SNAICC புரிந்து கொள்கிறது.