ஆஸ்திரேலிய நாடும் கொடிகளும் உருவான கதை

Australian flags

Source: Geetha

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித இனம் தழைத்து பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தங்களுக்கென தனித்த மொழி, ஆன்மீகம், கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்க்கை முறைகளைக் கொண்டு வாழ்ந்துகொண்டிருந்தது. ஆஸ்திரேலிய தினம் நெருங்கும் இவ்வேளையில் ஆஸ்திரேலிய நாடும் அதன் கொடிகளும் உருவான வரலாற்றை தனக்கே உரித்தான சுவையாக கதை சொல்லும் பாணியில் “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.


நம்ம ஆஸ்திரேலியா.. இந்த உணர்வை நம்முள் விதைக்கும் பல விஷயங்கள் நம்மிடையே உள்ளன. அவற்றைப் பார்ப்பதற்கு முன் முதலில் ஆஸ்திரேலியா உருவான வரலாற்றைப் பார்ப்போம்.

கிட்டத்தட்ட அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித இனம் தழைத்து பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தங்களுக்கென தனித்த மொழி, ஆன்மீகம், கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்க்கை முறைகளைக் கொண்டு வாழ்ந்துகொண்டிருந்த மாபெரும் நிலப்பரப்புதான் இன்றைய ஆஸ்திரேலியா. பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஜார்ஜ் மன்னர்களின் காலனியாதிக்கப் பேராசையால் உள்நாட்டில் உருவான பொருளாதாரச்சரிவு பல படிக்காத ஏழைகளை திருடர்களாகவும் போராளிகளாகவும் மாற்றியது. அரசால் கைது செய்யப்பட்ட அவர்களுக்கு இங்கிலாந்து சிறைகளில் போதுமான இடமில்லாக் காரணத்தால் நாடுகடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கு இங்கிலாந்து அரசு தேர்ந்தெடுத்த தீவுக்கண்டம்தான் ஐரோப்பிய கடல்வழி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மாபெரும் நிலப்பரப்பான ஆஸ்திரேலியா.

ஜனவரி 26,1788 இல்  இங்கிலாந்திலிருந்து கேப்டன் ஆர்தர் ஃபிலிப் தலைமையிலான முதல் கப்பல் தொகுதி பதினொரு கப்பல்களில் கிட்டத்தட்ட 1500 பேருடன் சிட்னி துறைமுகத்தில் வந்திறங்கியது. அவர்களில் பாதிப்பேர் , ஆண்களும் பெண்களுமான தண்டனைக் கைதிகள். கைதிகள் நிலச்சுவான்தாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலையாட்களாக நியமிக்கப்பட்டனர். பண்ணைகளிலும் விவசாய நிலங்களிலும் வேலைசெய்யப் பணிக்கப்பட்டனர். பெண் கைதிகள் வசதி படைத்தவர்களுடைய வீட்டு வேலைக்காரிகளாகவும், தாதிக்களாகவும், மனைவிகளாகவும், ஆசை நாயகிகளாகவும் ஆக்கப்பட்டனர். 

1850-களில் ஆஸ்திரேலிய மண்ணில் தோண்டுமிடமெல்லாம் தங்கம் அதுவும் கட்டி கட்டியாக கிடைக்கிறது என்று செய்தி பரவியவுடன்  வந்திறங்கிய பலதரப்பட்ட மக்களாலும் கலவையான கலாச்சாரம், மொழி, பழக்கவழக்கம் கொண்ட பன்முக கலாச்சார சமுதாயமாய் ஆஸ்திரேலியா உருவாகத் தொடங்கியது. தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கிறது. 

சரி, ஆஸ்திரேலியா என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இங்கிலாந்துக்காரர்களுக்கு தெற்கில் இருப்பதால் இப்பெருநிலப்பரப்புக்கு Terra Australis என்று பெயரிடப்பட்டது. லத்தீனில் இதற்கு தென்பகுதி நிலப்பரப்பு என்று அர்த்தம்.

இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கல் இடப்பட்ட ஜனவரி 26-ஆம் நாளைத்தான் ஆஸ்திரேலிய தினமாக கொண்டாடுகிறோம். First landing day என்றும் foundation day என்றும் ஆரம்பத்தில் ஏடுகளில் குறிக்கப்பட்டது.ஆஸ்திரேலியாவின் எல்லா மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் பொதுவிடுமுறைதினமான அந்நாளில் விழாக்கள், ஊர்வலங்கள், இசை நிகழ்ச்சிகள், போட்டிகள், விருந்துகள், விருதுகள் என அமர்க்களப்படும்.

ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டம் என்பது ஐரோப்பியக் குடியேறிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்கள் மண், மரபு, உயிர், வாழ்க்கைமுறை, குழந்தைகள், தலைமுறை என பலவற்றையும் இழந்துவிட்டிருந்த  ஆஸ்திரேலிய மண்ணின் பூர்வகுடிகளுக்கு அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் கூட இந்நாளை துக்க நாள், ஆக்கிரமிப்பு நாள் என்றெல்லாம் குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்தும் துக்கம் அனுசரித்தும் வந்தனர். ஆனால் காலப்போக்கில் நிலை மாறியது. இந்நாட்களில் ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டங்களில் பூர்வகுடிக் குழுக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல.. பன்னாட்டுப் பின்னணியைச் சார்ந்த அனைத்து மக்களும் தங்கள் கலாச்சார, இன, மொழி, நிற பேதமற்று ஆஸ்திரேலியர் என்ற உணர்வால் ஒன்றிணையும் திருநாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

வீடுகளில், கடைகளில், பெரு வளாகங்களில், வாகனங்களில், உடைகளில், தொப்பிகளில், குளிர்கண்ணாடிகளில், கைகளில், ஏன்.. முகங்களில் என எங்கெங்கும் கொடிவண்ணம் இழைத்து தங்கள் தேசப்பற்றை ஒவ்வொரு ஆஸ்திரேலியரும் வெளிப்படுத்தி மகிழ்வர். பொது இடங்களில் கூடி மகிழ்ந்து கொண்டாடுவர்.

ஆஸ்திரேலியக் கொடி என்பது என்ன? Union Jack எனப்படும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் கொடியையும் commonwealth நட்சத்திரத்தையும் southern cross எனப்படும் தென்சிலுவைநட்சத்திரக் கூட்டத்தையும் கொண்டது. இங்கிலாந்தின் saint George’s cross, ஸ்காட்லாந்தின் saint Andrew’s cross மற்றும் அயர்லாந்தின் Saint Patrick’s cross ஆகிய  மூன்று சிலுவைகளின் சங்கமம்தான் Union Jack. எழுமுனைகளைக் கொண்ட காமன்வெல்த் நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் ஏழு மாகாணங்களைக் குறிக்கிறது. தென்கோளப் பகுதியின் வானியல் திசைகாட்டியான தென்சிலுவைக்கூட்டத்தின் ஐந்து பெரும் விண்மீன்களான alpha crucis, beta crucis, gamma crucis, delta crucis, epsilon crucis ஆகியவை இடம்பெற்றுள்ளன.

1995 முதல் ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடிக்கு இணையாக அங்கீகரிக்கப்பட்ட மற்ற இரண்டு கொடிகளுள் ஒன்று பூர்வகுடிக் கொடி. இக்கொடியை உருவாக்கியவரும் இதன் காப்புரிமையாளருமான Harold Thomas மத்திய ஆஸ்திரேலியாவின் லுரிட்ஜா பூர்வகுடியைச் சேர்ந்தவர். 

இக்கொடி உருவாக்கப்பட்டு 48 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் கூட இதன் காப்புரிமை குறித்த சர்ச்சைகள் எழுந்தவண்ணமே உள்ளன. இக்கொடியை உருவாக்கிய Harold Thomas அனுமதி பெறாமலேயே பல வணிகநோக்கு நிறுவனங்கள் இக்கொடியைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதாகவும் அதன் மகிமை அறியாமல் மிகச் சாதாரணமாக வீடியோ விளையாட்டுகள் போன்றவற்றில் சித்தரிக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. புனிதமாகவும் பெருமையாகவும் மதிக்கப்படும் இம்மண்ணின் அடையாளமான கொடியை தவறாகப் பயன்படுத்துவது பூர்வகுடி மக்களை அவமதிக்கும் செயலென்று ஹெரோல்டு தாமஸ் ஆதங்கிக்கிறார்.

மேல்பாதியில் கருப்பும் கீழ்பாதியில் சிவப்பும் நடுவில் மஞ்சள் வட்டமும் கொண்ட இக்கொடி ஆரம்பகாலத்தில் நில உரிமைப் போராட்டத்துக்காகதான் உருவாக்கப்பட்டது. பின்னர் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களுக்கான அடையாளமாகிப்போனது. தற்போது முழுமையான சட்ட மற்றும் அரசியல் அந்தஸ்துள்ளதாக ஏற்கப்பட்டுள்ளது. கொடியின் கீழ்பாதி சிவப்பு ஆஸ்திரேலியாவின் செம்புழுதி மண்ணின் நிறத்தையும் மேல்பாதி கருப்பு இம்மண்ணில் வாழும் பூர்வகுடி மக்களின் நிறத்தையும் நடுவிலுள்ள மஞ்சள் வட்டம் உயிர்வாழ்வுக்கு ஆதாரமான சூரியனையும் குறிக்கிறது. 

ஆஸ்திரேலியாவின் அங்கீகாரம் பெற்ற மற்றொரு கொடி Torres Strait தீவுவாசிகளின் கொடி. இக்கொடியின் மேலும் கீழுமுள்ள பச்சை வண்ணம் தீவுகளின் பசுமையான நிலப்பகுதியையும், நடுவிலுள்ள நீலவண்ணம் சூழ்ந்திருக்கும் கடல் வண்ணத்தையும், கருப்புப் பட்டைகள் மக்களின் நிறத்தையும், நடுவிலுள்ள வெள்ளை நட்சத்திரம் அமைதியையும், அதன் ஐந்து முனைகள் ஐந்து தீவுக் குழுமத்தையும், நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள வெள்ளைத் தலையலங்கார அணி மக்களின் பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் குறிக்கிறது. இதை உருவாக்கியவர் பெர்னார்ட் நமோக். குவீன்ஸ்லாந்தின் வடக்கே தனித்த கலாச்சார பண்பாட்டு, மொழி, மதம், வாழ்க்கைமுறை என்னும் அடையாளங்களோடு வாழ்ந்துவரும் இத்தீவுவாசிகள் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பையும் பாப்புவா நியூகினி தீவையும் ஒருகாலத்தில் நிலவழி இணைந்திருந்தவர்களே. 12,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்நிலப்பரப்போடு இணைந்திருந்த அவர்களையும் இம்மண்ணின் மைந்தர்களென அங்கீகரிக்கும் பொருட்டு அவர்களுக்கான கொடியும் ஆஸ்திரேலியாவின் அங்கீகரிக்கப்பட்ட கொடிகளுள் ஒன்றாக உள்ளது. 

ஒன்றுபட்ட ஆஸ்திரேலியர் எனும் உணர்வோடு இம்மண்ணின் அனைத்து மக்களையும் அவர்தம் நம்பிக்கைகளையும் மதிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஏனெனில் இது நம்ம ஆஸ்திரேலியா.. இல்லையா? 


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand