பூமராங்: மலைக்க வைக்கும் சில தகவல்கள்

sbs

Source: boomerang

ஆஸ்திரேலியாவின் தொன்ம அடையாளங்களுள் மிக முக்கியமானது பூமராங். இன்று உலகமுழுவதும் பல நாடுகளில் விளையாட்டுப் பொருளாய் பயன்படுத்தப்படும் பூமராங்கின் பிறப்பிடம் ஆஸ்திரேலியா என்பது நமக்கு பெருமை. ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்தொன்மைக்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக இருக்கும் பூமராங் பற்றி நாம் இதுவரை அறிந்திராத பல தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.


இன்று உலகமுழுவதும் பல நாடுகளில் விளையாட்டுப் பொருளாய்ப் பயன்படுத்தப்படும் பூமராங்கின் பிறப்பிடம் ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்தொன்மைக்கு ஒரு  சிறப்பான எடுத்துக்காட்டுகள் பூமராங்குகள். பண்டைக்காலத்தில் ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்கள் வேட்டையாடப் பயன்படுத்திய மரக்கருவிதான் பூமராங் (boomerang). உலகின் மிகப் பழைமையானதும் சுமார் ஐம்பதாயிரம் வருட வரலாறு கொண்டதுமான கிம்பர்லி பகுதியில் காணப்படும் பூர்வகுடி மக்களின் பாறை ஓவியங்களில் பூமராங் கொண்டு நடத்தப்பட்ட கங்காரு வேட்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பதிலிருந்தே அவற்றின் தொன்மையை நம்மால் அறிந்துகொள்ள முடியும். இன்றைக்கு சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பூர்வகுடி மக்கள் பயன்படுத்திய பூமராங்குகள் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலத்தடி படிமங்களிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.  

ஆதிகாலத்தில் விலங்குகளின் எலும்பால் தயாரிக்கப்பட்ட பூமராங்குகள், பிறகு மரத்தால் தயாரிக்கப்பட்டன. கருப்பு வாட்டில் மரம் மற்றும் குறிப்பிட்ட சில யூகலிப்டஸ் மரங்களின் நல்ல வைரம்பாய்ந்த மரங்களின் உறுதியான வேர்ப்பகுதிகள், பருத்த கிளைகள் அல்லது அடிமரத்தண்டுகள் போன்றவற்றிலிருந்துதான் பூர்வகுடிகளின் பாரம்பரிய பூமராங்குகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இன்று, பிளைவுட், பிளாஸ்டிக் போன்ற பொருட்களாலும் பூமராங்குகள் தயாரிக்கப்படுகின்றன. பூமராங்குகள் பல வடிவங்களில் பல அளவுகளில் காணப்படுகின்றன. பூமராங் என்றாலே எறிந்தவரிடம் திரும்பிவந்துவிடும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால் எல்லா பூமராங்குகளும் எறிந்தவரிடம் திரும்புவதில்லை.

ஆஸ்திரேலியப் பூர்வகுடியினர் பூமராங்கைக்கொண்டு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடினர். கங்காருவை வேட்டையாட அதன் கால்களைக் குறிவைத்தும், ஈமு போன்ற பெரிய பறவைகளை அவற்றின் கழுத்தைக் குறிவைத்தும் பூமராங்குகள் எறியப்பட்டன. பூமராங் எறியும் வேகத்தைப்பொறுத்து அதிகபட்சமாக நொடிக்கு பத்து சுற்றுகள் கூட சுற்றக்கூடும். வேட்டையாடுவதற்கு மட்டுமல்லாது, போர் ஆயுதமாகவும், இசைக்கருவியாகவும் விளையாட்டு எறிவளையாகவும் பயன்படுத்தியுள்ளனர். உரசித் தீ உண்டாக்கும் கோல்களாகவும் பூமராங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பத்து செ.மீ.க்கும் குறைவான அளவுடைய சின்னஞ்சிறிய பூமராங் முதல் 180 செ.மீ. அளவிலான பெரிய பூமராங்குகள் வரை அவர்களால் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. 

பூமராங்குகளில் மூன்று வகை உண்டு. கங்காரு போன்ற விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டது ஒரு வகை. இலக்கைத் தாக்குவது மட்டுமே அதன் வேலை. வாழைப்பழ வடிவத்தில் மிக லேசான வளைவுடனும் மழுங்கிய முனைகளுடனும் இருக்கும் அது எறிந்தவரிடம் திரும்பிவருவதில்லை. இரண்டாவது சற்று அதிகமாக வளைந்து ஆங்கில எழுத்து ‘V’ வடிவத்தில் மழுங்கிய முனைகளுடன் இருக்கும். பூமராங் என்றதுமே நம் நினைவுக்கு சட்டென்று வருவது இதுதான். இதன் பிரத்தியேக வடிவம் மற்றும் எடை காரணமாக எறிந்தவரிடமே திரும்பிவரக்கூடியது. இது பறவைகளைத் தாக்கப் பயன்பட்டது. மூன்றாவது கூட்டல் வடிவத்தில் இருக்கும். இதன் முனைகள் மிகவும் கூராக இருக்கும். இது எதிரிகளைத் தாக்கப் பயன்பட்டது. பூர்வகுடியினர் பயன்படுத்திய பூமராங்குகளில் பூர்வகுடியினரின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. இன்று தயாரிக்கப்படும் நாகரிக மற்றும் அலங்கார பூமராங்குகளிலும் பூர்வகுடி ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டு அசலைப்போன்ற மாயையை உருவாக்கி விற்பனையில் சாதனை படைக்கின்றன.

அசலானாலும் நகலானாலும் பூமராங் என்ற பெயருக்கும் வடிவத்துக்குமான ஈர்ப்பும் மோகமும் இன்றும் மக்கள் மனத்தை விட்டு அகலவில்லை. தற்போது உலக அளவில் பூமராங் எறியும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஆஸ்திரேலிய ராணுவ அடையாள முத்திரையிலும் பூமராங் இடம்பெற்றுள்ளது. காரணம் என்ன தெரியுமா? போருக்குச் செல்லும் வீர்ர்கள் பூமராங் போல புறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவந்துவிட வேண்டுமென்னும் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளம் அது.

ஆஸ்திரேலியா தவிர, ஐரோப்பா, எகிப்து, வட அமெரிக்காவிலும்.. ஏன் தமிழ்நாட்டிலும் கூட பூமராங்குகள் பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்திருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. உலகின் மிகப் பழமையான பூமராங் போலந்தின் ஒலாஸோவா குகையில் கண்டுபிடிக்கப்பட்டது. முற்காலத்தில் வாழ்ந்திருந்த யானை போன்ற மாபெரும் விலங்கான மம்மூத்தின் தந்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட அதன் வயது சுமார் 30,000 ஆண்டுகள் என்றும் இரண்டு அடி நீளமும் ஒரு கிலோ எடையும் கொண்ட அது ரெயின்டீர் எனப்படும் மான்களை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டது என்றும் அறியப்படுகிறது. 

தமிழ்நாட்டில் யானைத்தந்தத்தால் தயாரிக்கப்பட்ட பூமராங்குகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன என்னும் தகவல் நமக்கு வியப்பளிக்கிறது அல்லவா? பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த அவை இன்று அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பூமராங்குகளுக்கு தமிழில் வளரி என்று பெயர். வளரியின் வேறுசில பெயர்கள் வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் போன்றவை. வளரிகள் பெரும்பாலும் அடிமரத் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்டன. சிறப்பாக சில உலோகத்திலும் யானைத்தந்தங்களிலும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

வளரி எறியும் முறைகளும் பூமராங் எறிமுறைகளைப் போலவேதான். அவை இலக்கைக் குறிவைத்து நேரடியாக வீசப்படுவதில்லை. சுழற்றிதான் எறியப்படுகின்றன. அப்படி சுழற்றி எறியப்படும்போது செங்குத்தாகவோ, கிடையாகவோ சுழன்றபடி செல்லும். சில பூமராங்குகள் சுழலாமலும் செல்லும். பண்டைய காலத்தில் வளரிகள் போர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எதிரியின் கழுத்தை இலக்குவைத்தால் வளரி சுழன்றுசெல்லும் வேகத்தில் உயிரையும் பறிக்கும் வல்லமை உடையது என்றபோதும் பெரும்பாலும் கால்களை இலக்குவைத்தே எறியப்பட்டன. தற்காப்பு ஆயுதங்களுள் ஒன்றாகவும் வளரிகள் இருந்திருக்கின்றன. இந்த வளரிகளின் முன்னோடி ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் பயன்படுத்திய பூமராங்குகளே என்று அறியப்படுகிறது.

உலகின் பல பகுதிகளிலும் பண்டைக்காலத்தில் பூமராங் பயன்பாடு இருந்தாலும் இலக்கை நுட்பமாகக் குறிபார்த்து எய்யக்கூடிய வில், அம்பு, ஈட்டி, வேல் போன்ற கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பூமராங் பயன்பாடு குறைந்துபோனது. ஆஸ்திரேலியப் பழங்குடியினரிடத்தில் மட்டுமே பூமராங் பயன்பாடு தொடர்ந்து பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. பூமராங் என்றதும் ஆஸ்திரேலியா நம் நினைவுக்கு வருவதற்கு இதுவே முக்கியக் காரணம்.

ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் பயன்படுத்திய வேறு சில வேட்டை ஆயுதங்கள் வேட்டைத்தடி, எறி ஈட்டி, குத்தீட்டி போன்றவை. தற்காப்புக்காக கேடயங்களும் பயன்படுத்தியிருக்கின்றனர். எறி ஈட்டிகள் தொலைவிலுள்ள விலங்குகளை வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. டாஸ்மேனியப் பூர்வகுடிகள் பயன்படுத்திய எறி ஈட்டிகள் மெல்லியதாகவும் சுமார் 6 மீ. அளவில் நீளமாகவும் இருந்திருக்கின்றன. அளவில் பருத்தும், நீளம் குறைந்தும் காணப்பட்ட குத்தீட்டிகள் கடற்பசுக்கள் எனப்படும் சீல்களைக் கொல்வதற்கு ஏதுவாகப் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. சமவெளியிலும் கடலோரப் பகுதியிலும் வசித்தவர்கள் அதிகமாக எறி ஈட்டியையும், மழைக்காடுகளில் வசித்தவர்கள் குத்தீட்டிகளையும் பயன்படுத்தியிருக்கின்றனர். மழைக்காடுகளில் அடர்ந்த செடிகொடிகளுக்கிடையில் புகுந்து செல்லும்போது நீளமான ஆயுதம் ஏந்திச் செல்வது எளிதல்ல என்பதால் குறைந்த நீளமுள்ள ஆயுதங்களையே பயன்படுத்தினார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியப் பூர்வகுடி இனங்களிலேயே வில்லும் அம்பும் பயன்படுத்தியவர்கள் என்ற பெருமை டாரஸ் நீரிணைப்பு தீவு வாசிகளையே சேரும்.

வேட்டைத்தடியை தாரூக் பூர்வகுடியினர் waddy என்கின்றனர். தென்னிந்திய மொழிகளுள் ஒன்றான மலையாளத்திலும் தடியை வடி எனக் குறிப்பிடுவது ஆச்சர்யத்தக்க ஒற்றுமை. இதை Nulla nulla என்றும் சொல்வதுண்டு. இதன் முனை கூம்பு மாதிரியோ, உருண்டை வடிவிலோ, பறவையின் தலை போன்ற வடிவத்திலோ அல்லது ஹாக்கி மட்டை போன்று முனையில் வளைந்து தட்டையான வடிவத்திலோ.. பயன்பாட்டின் தன்மையைப் பொறுத்து தயாரிக்கப்படும்.

வேட்டையாடுவதும் மீன்பிடிப்பதும் ஆண்களின் வேலை எனில் பெண்களின் வேலை சேகரிப்பது. ஈமு, கங்காரு போன்ற பெரிய உயிரினங்களை ஆண்கள் வேட்டையாட, காய்கள், பழங்கள், கிழங்குகள், மூலிகைகள், பருப்புகள், முட்டைகள், தேன் போன்றவற்றையும் கோவான்னா, பாம்பு போன்ற தரைவாழ் சிற்றுயிர்களையும் பெண்கள் கொணர்வார்கள்.

ஆயுதங்கள் அல்லாது பூர்வகுடியினர் செய்வினை போன்ற காரியங்களையும் எதிரிகளைப் பயங்கொள்ளவும் பழிவாங்கவும் பயன்படுத்தியிருக்கின்றனர். இறந்த ஒருவனின் எலும்பை எடுத்து எதிரியை நோக்கி சுட்டினால் சுட்டப்பட்டவன் விரைவிலேயே நோயுற்று சாவான் என்னும் நம்பிக்கை அவர்களிடத்தில் இருந்திருக்கிறது. காலங்காலமாய் மானுட வரலாற்றில் துணிச்சலும் பயமும் ஒன்றோடொன்று பிணைந்தே பயணிப்பது வியப்பளிக்கிறது அல்லவா?

 


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand