ஆஸ்திரேலிய புதர்க்கோழி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Australian brush-turkey

Source: Geetha Mathivanan

ஆஸ்திரேலியாவில் வாழும் பலருக்கும் ஆஸ்திரேலிய புதர்க்கோழி பற்றி தெரிந்திருக்கும். Australian brush turkey, bush turkey, scrub turkey என்றெல்லாம் குறிப்பிடப்படும் புதர்க்கோழி வான்கோழிகளைப் போல இருந்தாலும் இவை வான்கோழியினத்தைச் சார்ந்தவையல்ல. கோழி என்று குறிப்பிடுவதால் கோழியினத்தைச் சார்ந்தவையும் அல்ல. அப்படிஎன்றால் இந்த பறவை எது? ஆஸ்திரேலிய புதர்க்கோழி குறித்த அரிய தகவல்களைத் தொகுத்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியாக்கிப் படைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.


பறவைகள் கூடு கட்டி முட்டையிடுவது இயல்பு. ஆனால் மேடு கட்டி முட்டையிடும் பறவை பற்றித் தெரியுமா உங்களுக்கு? மேடு என்றால் சாதாரண மேடு அல்ல. சுமார் நான்கு மீட்டர் விட்டம், ஒரு மீட்டர் உயரத்துக்கு மரக்குச்சிகள், மக்கிய இலைதழைகள், மண், குப்பை இவற்றை கால்களாலேயே சீய்த்துக் கொண்டு வந்து ஒரு இடத்தில் குவித்து உருவாக்கப்படும் மேடு. சில சமயம் இரண்டு மீட்டர் உயரத்துடன் ஆறு மீட்டர் அகலத்துடன் ஒரு சிறிய காரையே உள்ளே வைத்து மூடியது போல இருக்கும். இரண்டரை கிலோ கூட இருக்காத பறவை உருவாக்கும் மேட்டின் எடை டன் கணக்கில் இருக்கும் என்றால் அதன் பின்னாலிருக்கும் உழைப்பும் கால்களின் வலிமையும் மலைக்கவைக்கிறது அல்லவா?

பெரும்பாலான ஆஸ்திரேலியவாசிகளுக்கு இப்பறவை பரிச்சயமானதாக இருக்கும். Australian brush turkey, bush turkey, scrub turkey என்றெல்லாம் குறிப்பிடப்படும் புதர்க்கோழிதான் அது. வான்கோழிகளைப் போல இவற்றுக்கும் தாடை இருப்பதால் turkey என்று குறிப்பிடப்பட்டாலும் இவை வான்கோழியினத்தைச் சார்ந்தவையல்ல. கோழி என்று குறிப்பிடுவதால் கோழியினத்தைச் சார்ந்தவையும் அல்ல. இவை பிரத்தியேகமான Megapodiidae என்னும்  குடும்பத்தைச் சார்ந்தவை. அதென்ன மெகாபோடிடே? வலிமையான கால்களைக் கொண்டவை என்று அர்த்தம். ஆஸ்திரேலியாவின் மெகாபோடிடே குடும்பத்துப் பறவைகளுள் பெரியது இந்த ஆஸ்திரேலியப் புதர்க்கோழிதான்.

ஆஸ்திரேலியப் புதர்க்கோழிகள் கூடுகட்டுவது மட்டுமல்ல.. முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும் விதமும் வியப்பைத் தரும். ஆண் புதர்க்கோழியின் வாழ்க்கை இலட்சியமே அதன் இணைப்பறவைகள் முட்டையிடவிருக்கும் குப்பை மேட்டை உருவாக்குவதும் புதுப்பிப்பதும் காவலிருப்பதும்தான் என்பது போல் காலையிலிருந்து மாலை வரை அதற்காக உழைப்பதிலும் அதை சீரமைப்பதிலுமே தன் நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறது.

முட்டையிடுவது மட்டும்தான் பெண்புதர்க்கோழியின் வேலை. முட்டையிடத் தேவையான சத்துள்ள இரை தேடி நாள்முழுவதும் தின்றுகொண்டிருப்பதுதான் அதன் முழுநேரப்பணி. ஒரு ஈட்டுக்கு பெண்பறவை இடும் முட்டைகளின் மொத்த எடை அதன் உடல் எடையைப் போன்று மூன்று பங்கு என்றால் எந்த அளவுக்கு இரைதேடியுண்ண வேண்டியிருக்கும்.

ஆண்பறவைக்கு அது உருவாக்கும் குப்பைமேடுதான் கோட்டை. அதைப் பாதுகாப்பதில் ஒரு காவல் வீரனைப் போல வெகு மூர்க்கம் காட்டும். கூட்டை உருவாக்கும்போது யார் அருகில் வந்தாலும் ஆக்ரோஷத்தோடு கொத்தித் துரத்தும். அது வேறொரு ஆண் புதர்க்கோழியாக இருந்தாலும் சரி, முட்டையிட வரும் பெண் புதர்க்கோழியாக இருந்தாலும் சரி. பெண் கோழிகள் முட்டையிடத்தானே கூடு கட்டுகிறது. பிறகெதற்கு அவற்றை விரட்டவேண்டும்? காரணம் இருக்கிறது.

புதர்க்கோழியின் முட்டைகள் மற்றப் பறவை முட்டைகளைப் போல சிறகுவெப்பத்தால் அடைகாக்கப்படுவதில்லை. மாறாக, சூட்டடுப்பு போல செயல்படும் குப்பைமேட்டின் வெப்பத்தால் அடைகாக்கப்படுகின்றன. மண் மூடிய மக்கிய இலைதழைகள் நொதிக்க ஆரம்பிப்பதால் உள்ளே வெப்பம் உண்டாகும். அவ்வாறு உண்டாகும் வெப்பம் 33 முதல் 38 டிகிரி சென்டிகிரேட் வரை இருக்கவேண்டும். அதுதான் முட்டைகள் பொரிய சரியான வெப்பநிலை. சரியான வெப்பநிலையை நம்மால் வெப்பமானிகளைக் கொண்டு அறிந்துகொள்ள முடியும். ஆனால் புதர்க்கோழியால் எப்படி அறிய முடிகிறது? அதுவும் இயற்கையின் இன்னொரு விந்தை.

ஆண் புதர்க்கோழியின் அலகுதான் வெப்பமானி. முட்டைகள் பொரிவதற்கு ஏற்ற வெப்பநிலையை மிகச்சரியாக கண்டறிந்து அதன் பிறகுதான் பெண் புதர்க்கோழிகளை முட்டையிட அனுமதிக்கும். அதுவும் சும்மா இல்லை, ஆண் புதர்க்கோழி தானே குழிகளை உருவாக்கித்தரும். பெரும்பாலும் ஒரு மீட்டர் ஆழத்தில் சரியான இடைவெளிகளில் குழிகளை உருவாக்கித் தரும். பெண் புதர்க்கோழிகள் அதில் முட்டையிட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட வேண்டும். பெண் புதர்க்கோழி போனபின் ஆண் புதர்க்கோழி அந்த முட்டையின் மேல் குப்பைகளையும் மண்ணையும் போட்டு மூடி பத்திரப்படுத்திவைக்கும்.

அத்துடன் முடிந்துவிடுவதில்லை கடமை. அவ்வப்போது தன் அலகை மேட்டுக்குள் ஆங்காங்கே நுழைத்து வெப்பத்தை ஆராய்ந்தபடி இருக்கும். வெப்பம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் மேட்டின் சில இடங்களில் பள்ளம் பறித்து உள்ளிருக்கும் வெப்பம் வெளியேற வகை செய்யும். வெப்பம் குறைவாக இருப்பதாக உணர்ந்தால் முட்டையிருக்கும் பகுதிகளில் சூரிய ஒளி அதிகம் படுமாறு பார்த்துக்கொள்ளும். வெப்பம் வெளியேறிவிடாமல் மேலும் மேலும் மண்ணையும் குப்பையையும் கொண்டுவந்து சேர்த்து மூடிப்பாதுகாக்கும்.

பருவநிலை சாதகமாக இல்லாத காலத்திலும் முட்டைகளுக்கு போதிய வெப்பம் கிடைக்காது என்று தோன்றும் நிலையிலும் ஆண்பறவை எடுக்கும் முடிவு விசித்திரம். அப்போது முட்டையிட வரும் பெண்பறவையை தயவு தாட்சண்யம் இல்லாமல் விரட்டித் துரத்திவிடும்.

குப்பை மேட்டின் வெப்பநிலை பேணுவது அல்லாமல் முட்டைகளைத் திருட வரும் பாம்பு, கோவான்னா போன்றவற்றிடமிருந்தும் முட்டைகளைப் பாதுகாக்கவேண்டியது ஆண்பறவையின் தலையாய பொறுப்பு.

புதர்க்கோழியின் முட்டைகள் அடைகாக்கப்படும் விதம் ஒரு விசித்திரம் என்றால் அதிலிருந்து வெளிவரும் குஞ்சுகளின் வாழ்க்கை இன்னொரு விசித்திரம். மாய்ந்து மாய்ந்து கூட்டைக் காக்கும் தந்தை, குஞ்சுகள் பொரிந்து வந்த பிறகு துளியும் கண்டுகொள்ளாது என்பது வியப்பாக உள்ளதல்லவா?

சுமார் ஒருமீட்டர் ஆழத்தில் குப்பைமேட்டுக்குள் இடப்பட்ட முட்டை பொரிந்து தலைகீழான நிலையில் வெளிவரும் கோழிக்குஞ்சு தன் சின்னஞ்சிறு கால்களால் மண்ணைக் கிளறிக்கொண்டு வெளியே வருவதே ஒரு பெரிய சாதனை. கிட்டத்தட்ட நாற்பது மணிநேரம் போராடித்தான் உள்ளேயிருந்து வெளியே வந்து மூச்சு விடுகிறது. அந்த சாதனை போதாதென்று வெளிவந்த நொடியே காட்டுக்குள் ஓடிப்போய், யார் உதவியும் இன்றி, தன் வாழ்க்கையைத் தானே பார்த்துக்கொள்கிறது என்பது எவ்வளவு ஆச்சர்யம்.

தான் உண்ணக்கூடிய இரை இதுவென்று அறிந்து, தானே அவற்றைத்தேடி உண்டு, எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் உபாயங்கள் உணர்ந்து தற்காத்து, ஒரே நாளில் தானாகவே பறக்கவும் கற்றுக்கொண்டு இரவு நேரத்தில் மரக்கிளைகளில் தஞ்சம் புகுந்து என்று, பிறந்த நொடியிலிருந்தே தன்னிச்சையாய் எவர் தயவுமின்றி வாழ்வதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்!  பச்சிளம் சிசுவுக்குதான் வாழ்க்கை எவ்வளவு பாரம்! இன்னுமொரு விசித்திரம் என்னவென்றால் நூற்றில் பத்து முட்டைகள்தாம் நாய் நரிகளுக்கும், பாம்பு, உடும்புகளுக்கும் இரையாகாமல் தப்பித்து பொரிகின்றன. அப்படியே தப்பித்துப் பொரிந்தாலும் முதல் வாரத்திலேயே பல குஞ்சுகள் ஆபத்தில் சிக்கி மடிந்துவிடுகின்றன. தக்கன மட்டுமே பிழைக்கின்றன. இத்தனை சாகசங்களுக்கு உரிய இப்பறவையை ஆஸியின் அதிசயங்களுள் ஒன்றெனக் குறிப்பிடுதல் சரிதானே?

ஆஸ்திரேலிய புதர்க்கோழியின் இறைச்சியும் முட்டைகளும் ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களுடைய அந்நாளைய விருப்ப உணவாம். அப்போதெல்லாம் அழியாத புதர்க்கோழியினம், ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் வேட்டை விளையாட்டுகளுக்காகக் கொல்லப்பட, 1930 களில் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பைத் தொட்டது. அரசு விழித்துக்கொண்ட பின், 1970 இல் அவற்றை வேட்டையாடுவதைத் தடைசெய்யும் சட்டங்கள் இயற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகின்றன. தற்போது இவற்றின் எண்ணிக்கை பெருகிவருவது மகிழ்வளிக்கும் செய்தி.

புதர்க்கோழிகள் ஏன் மேடமைத்து முட்டையிடுகின்றன தெரியுமா? பூர்வகுடிக் கதையொன்று காரணம் சொல்கிறது. முற்காலத்தில் புதர்க்கோழியும் மற்ற தரைவாழ் பறவைகளைப்போலவே நிலத்தில் கூடமைத்து முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரித்து வாழ்ந்து வந்ததாம். அப்போதும் முட்டைகளை அடைகாப்பது ஆண்பறவையின் பொறுப்புதானாம். ஒரு நாள் ஒரு ஆமை நீரிலிருந்து நிலத்துக்கு வந்து மண்ணில் குழி தோண்டி முட்டைகளை இட்டு மூடிவிட்டு தான் பாட்டுக்கு எந்தக் கவலையுமின்றி தண்ணீருக்குள் போனதைப் பார்த்ததாம் ஆண் புதர்க்கோழி. அடடா, இந்த யோசனை நமக்கு வராமல் போய்விட்டதே. நாமும் இதுபோலவே பெண்பறவைகளை மண்ணுக்குள் முட்டையிடச்செய்து மூடிவைத்துவிட்டால் பிறகு கவலையில்லாமல் ஜாலியாக இருக்கலாம், அடைகாக்கும் வேலை கிடையாது என்று எண்ணியதாம். மழை பெய்து வெள்ளம் வந்தால் ஒருவேளை மண்ணுக்குள் இருக்கும் முட்டைகளுக்கு பாதிப்பு வரக்கூடும் என்று அஞ்சிய அது,  மண்ணாலும் இலைதழைகளாலும் ஒரு மேட்டை உருவாக்கி அதற்குள் பெண்பறவைகளை முட்டையிடச் சொன்னதாம். அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே தொடர்ந்துகொண்டிருக்கிறதாம். ஆனால் என்ன, முட்டைகளை அப்படியே விட்டுவிட்டு தன்போக்கில் போக மனமில்லாமல் அந்த இடத்தையே சுற்றிச்சுற்றி வந்து காவல் காத்துக்கொண்டிருக்கிறது ஆண் புதர்க்கோழி, பொறுப்புமிக்க தந்தையாக, முன்னிலும் கூடுதல் சிரத்தையோடு.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand