எக்கிட்னாக்கள் பூமியின் தொன்மையான உயிரினவகையைச் சார்ந்தவை. சுமார் 110 மில்லியன் (11 கோடி) வருடங்களுக்கு முன்பு டைனோசார் காலத்தில் வாழ்ந்த பிளாட்டிபஸ் போன்ற ஒரு உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றுப் பிரிந்ததுதான் இன்றைய எக்கிட்னா என்று மூலக்கூறு கடிகாரமும் புதையெலும்புப் படிமங்களும் தெரிவிக்கின்றன. நினைத்தாலே மலைப்பாக உள்ளதல்லவா? தொன்மை மட்டுமல்ல… புதுமையும் கொண்டது எக்கிட்னா. Sony the hedgehog என்னும் கணினி விளையாட்டுகளிலும் சித்திரப் படக்கதைகளிலும் knuckles என்னும் எக்கிட்னா இடம்பெற்று இளைய தலைமுறையைக் கவர்ந்துவருவதே சான்று.
பிளாட்டிபஸ்ஸைப் போலவே முட்டையிட்டுக் குட்டிக்குப் பால் கொடுத்தாலும், எக்கிட்னாக்கள் மார்சுபியல் இனத்தைச் சேர்ந்தவை. எக்கிட்னாவுக்கு நிரந்தரமான வயிற்றுப்பை கிடையாது. முட்டையிடும் சமயத்தில் தசைமடிப்புகளை விரித்தும் சுருக்கியும் தற்காலிகமாய் பை போன்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டுவிடும். பிளாட்டிபஸ்களைப் போலவே இவற்றின் அலகிலும் மின் உணர்விழைகள் இருந்தாலும் எண்ணிக்கை அளவில் மாறுபடும். பிளாட்டிபஸ்ஸின் அலகில் 40,000 எண்ணிக்கை மின் உணர்விழைகள் என்றால் நீள அலகு எக்கிட்னாவுக்கு இருப்பவை 2,000 தான். மின் உணர்விழைகள்தான் உணவு இருக்குமிடத்தை நுகர்திறனாலும் தொடுதிறனாலும் துல்லியமாய் அறிந்துகொள்ள உதவுகின்றன.
குழாய் போன்று மிகக்குறுகிய வாயும் பற்களற்ற தாடையும் கொண்ட எக்கிட்னா, காய்ந்த மரத்துவாரங்கள், எறும்புப்புற்று, கறையான் புற்று போன்றவற்றுள் கிட்டத்தட்ட 18 செ.மீ நீளமான, பசையுள்ள நாக்கை நுழைத்துத் துழாவும். நாக்கில் ஒட்டிக்கொள்ளும் எறும்பு, கறையான், புழு, பூச்சி போன்றவற்றைத் தின்னும். எக்கிட்னா நாக்கை வெளியில் நீட்டி உள்ளிழுக்கும் வேகம் எவ்வளவு தெரியுமா? ஒரு நிமிடத்துக்கு நூறுமுறையாம். நம்புவதற்கு கடினமாக உள்ளதல்லவா?
எக்கிட்னாவின் இனப்பெருக்கக் காலத்தில் மிகவும் வேடிக்கையான காட்சியொன்றைக் காணலாம். ஒரு பெண் எக்கிட்னாவைக் கவர, தொடர்வண்டி போல வரிசையாகப் பத்துப்பன்னிரண்டு ஆண் எக்கிட்னாக்கள் அது போகுமிடமெல்லாம் பின்தொடரும் காட்சிதான் அது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராது தன் ஆளுமையையும் உடல் வலிமையையும் நிரூபித்து வெற்றி காணும் ஆண் எக்கிட்னா, பெண் எக்கிட்னாவுடன் இணையும். இரண்டு வாரங்களுக்குப் பிறகு பெண் எக்கிட்னா சுண்டைக்காய் அளவில் மெல்லிய தோல்முட்டை ஒன்றை இட்டு தன் வயிற்றுப் பைக்குள் பத்திரப்படுத்திக்கொள்ளும். பத்துநாட்களுக்குப் பிறகு முட்டையைக் கிழித்துக்கொண்டு சுமார் ஒரு செ.மீ. அளவே உள்ள குட்டி எக்கிட்னா வெளிவரும். முட்டைக்குள்ளிருக்கும் குட்டி எக்கிட்னாவுக்கு முட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியேற உதவுவதற்கென்றே ஒரு பல் வளரும். எக்கிட்னாவின் வாழ்க்கையில் அதற்கு வளரும் ஒரே ஒரு பல் அதுதான். அதுவும் முட்டையிலிருந்து வெளிவந்த மறுநாளே விழுந்துவிடும்.
குட்டி பிறக்கும்போது முட்களோ, ரோமங்களோ அற்று வழுவழுப்பான உடலோடு பிறக்கும். எக்கிட்னாவுக்கும் பிளாட்டிபஸ்ஸைப் போன்று பாலூட்டும் முலைகள் கிடையாது. அதன் உடலில் உள்ள சுரப்பி மூலம் வயிற்றுப்பைக்குள் உள்ள இரு திட்டுகளில் கசியும் பாலை, குட்டி நக்கிக் குடிக்கும். இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு குட்டி தாயின் வயிற்றுப் பையைவிட்டு கட்டாயம் வெளியில் வந்தேயாகவேண்டும். ஏனெனில் அந்தசமயத்தில் குட்டியின் உடலில் முட்கள் வளர ஆரம்பித்துவிடும். அப்போது தாய் தன் குட்டியை வளைக்குள் விட்டுவிட்டு இரைதேடிப்போகும். நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை வந்து பாலூட்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் தாய் தன் குட்டிக்கு கடைசி முறையாகப் பால் கொடுத்துவிட்டு வளையிலேயே விட்டுவிட்டு திரும்பிப்பாராமல் சென்றுவிடும். அதன்பின் மீண்டும் அந்தக் குட்டியைத் தேடி வராது.. தாயைக் காணாத குட்டி அதன்பிறகு தன் வாழ்க்கையைத் தானே பார்த்துக்கொள்ளும்.
எக்கிட்னாவின் முள் என்பதே அதன் ரோமம்தான். முட்கள் ஒவ்வொன்றும் 5 செமீ நீளம் வரை வளரக்கூடியவை. எக்கிட்னாக்களுக்கு முட்கள் பாதுகாப்பு என்றாலும் முட்களையும் தின்னும் டாஸ்மேனியன் டெவில்களும் கழுகுகளும் எதிரிகளாகும். பூர்வகுடி மக்களின் விருப்ப உணவாக இருந்த எக்கிட்னாக்கள் இப்போது சட்டத்தின் தயவால் பாதுக்காக்கப்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களின் பல ஓவியங்களில் எக்கிட்னா இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் ஐந்து சென்ட் நாணயத்தில் எக்கிட்னா உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் அடையாளச்சின்னங்களாக சிட் (syd) என்னும் பிளாட்டிபஸ், ஓலி (Ollie) என்னும் குக்கபராவுடன் மில்லீ (millie) என்னும் எக்கிட்னாவும் இடம்பெற்றமை சிறப்பு.
எக்கிட்னா சட்டப்படி பாதுகாக்கப்படும் வனவிலங்கு என்பதால் அதை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பது குற்றம். ஆனால் நம் தோட்டத்தில் அவை சுதந்திரமாக உலவுவதை ரசிக்கலாம். வரவேற்கலாம். செல்லம் கொஞ்சலாம்.
எக்கிட்னா என்றால் கிரேக்கமொழியில் பெண்பாம்பு என்று பொருள். கிரேக்கப் புராணக்கதையில் வரும் பாதி பெண்ணுடலும் பாதி பாம்புடலும் கொண்ட எக்கிட்னா என்னும் அரக்கி, அரக்கர்குல அன்னை என்று அறியப்பட்டவளாம். சாதுவான, கூச்ச சுபாவமுள்ள உயிரினமான எக்கிட்னாவுக்கு ஏன் அந்த அரக்கியின் பெயர் இடப்பட்டது என்பது வியப்பளிக்கும் கேள்வியே.
எக்கிட்னாவுக்கு பழங்காலத்தில் முட்கள் கிடையாது என்பது பூர்வகுடி மக்களது நம்பிக்கை. அவற்றுக்கு முட்கள் உருவான அதிசயத்தை பழங்கதையொன்று பகிர்கிறது. அந்தக்கதை என்னவென்று அறிந்துகொள்வோமா? ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிக்கிபில்லா (biggie-billa) என்பவனைப் பற்றியது அக்கதை.
பிக்கிபில்லா வயதானவன். பழங்குடியினத்தைச் சேர்ந்தவன். அவனுடைய நண்பர்கள் ஒவ்வொருவராக இறந்துவிட, அவன் இளைய தலைமுறையினருடன் வாழ்ந்துவந்தான். இளைஞர்கள் மிகுந்த உடல் வலிமையுடன் இருப்பதால் வெயில் நேரங்களிலும் சோர்வடையாமல், வெகுதூரம் வேட்டையாடிச் சென்று தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்குமான உணவைத் தேடிக்கொண்டனர். பிக்கிபில்லாவுக்கு வயதாகிவிட்டதால் அவனால் அவர்களுக்கு ஈடுகொடுத்து வேட்டையாட இயலவில்லை. அதனால் வேட்டைக்குப் போவதைத் தவிர்த்தான். வேட்டைக்குச் செல்லாத நிலையில் அவனுக்கு யாரும் உணவு கொடுக்க முன்வரவில்லை. ஆனாலும் அவன் திடகாத்திரமாக இருந்தான். வயதாக வயதாக அவன் உடல் வலிமை கூடிக்கொண்டே வந்தது. இதைப் பார்த்த மற்றவர்கள் அவன்மேல் ஐயங்கொண்டனர். அவன் தேகபலத்தின் ரகசியத்தை அறிய ரகசியமாய் அவன் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் ஆரம்பித்தனர். வருடக்கணக்காக ஏதோ ஒரு ரகசியத்தை அவன் தங்களிடமிருந்து மறைத்துவைத்திருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.
ஒருநாள் அவன் வெளியே செல்லும்போது சிலர் அவனறியாமல் பின்தொடர்ந்தனர். ஒரு பெரிய பாறையின் மறைவில் அவன் ஒளிந்துகொண்டான். அந்த வழியே வந்த இளம்பெண்ணொருத்தியை அம்மால் குறிவைத்துக் கொன்றான். பிறகு அவ்வுடலைத் தின்னத் தொடங்கினான். பார்த்தவர்கள் அதிர்ச்சியுற்றனர். தங்கள் பழங்குடியினத்திலிருந்து இதுவரை காணாமற்போனவர்கள் எப்படிக் காணாமற்போனார்கள் என்ற உண்மை அப்போதுதான் அவர்களுக்கு விளங்கியது. பிக்கிபில்லாவைக் கொல்ல முடிவெடுத்தனர். அவன் பலசாலி என்பதால் அவனை எதிர்கொள்ள தகுந்த சமயத்துக்குக் காத்திருந்தனர்.
ஒரு அமாவாசை இரவில் அவன் நெருப்பை விட்டு வெகுதூரத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். இளைஞர்கள் சத்தமின்றி அவனைச் சூழ்ந்து தங்கள் அம்புகளை அவன் உடலில் பாய்ச்சினர். பிக்கிபில்லா கதறக் கதற அவர்கள் தங்கள் கழிகளால் அவனுடலின் ஒவ்வொரு எலும்பையும் அடித்து நொறுக்கினர். இறுதியில் அந்த நரமாமிசத்தின்னி மூச்சுபேச்சற்று வீழ்ந்தான். இளைஞர்கள் நெருப்பைச் சுற்றி நடனமாடி ஆரவாரித்து பிக்கிபில்லாவின் மரணத்தைக் கொண்டாடினர். ஆனால் உண்மையில் பிக்கிபில்லா இறந்திருக்கவில்லை. அவன் பெரும் பிரயத்தனத்துடன் அம்புகள் தாங்கிய தன்னுடலை இழுத்துக்கொண்டு வந்து முர்காமுகை என்னும் சிலந்தி அமைத்திருந்த தரைவளைக்குள் விழுந்தான். காயம் ஆறும்வரை அங்கேயே இருந்தான். என்னதான் காயங்கள் ஆறினாலும் அவனால் அவன் உடலில் துளைத்த அம்புகளை எடுக்கவும்முடியவில்லை, அடிபட்ட எலும்புகளைக் கொண்டு ஒழுங்காக நடக்கவும் முடியவில்லை. முதுகில் அம்புகளுடனும், பின்னால் வளைந்த கால்களுடனும் ஆடி ஆடி நடந்துவந்தவனுக்கு உணவுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவன் மண்ணைத்தோண்டி எறும்புகளையும் புழு பூச்சிகளையும் தின்றான். இப்படியாக பிக்கிபில்லா ஒரு எக்கிட்னாவானாம். அவனால் மற்ற விலங்குகளைப் போல உணவு உண்ணமுடியாமைக்கும், எதிரிகளுக்குப் பயந்து, தரைக்கடியில் வளையில் தனித்து வாழ்வதற்கும் இதுதான் காரணமாம்.