Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

நம்ம தமிழ்: மாலை மாற்று அணி அறிமுகம்

Source: SBS

தமிழ் மொழியின் அருமை, பெருமை, சிறப்பு என்று பலவித அம்சங்களை நாம் அறிந்திருப்போம். அப்படியான தமிழ் மொழிக்கு அணி இலக்கணம் சேர்க்கும் மாலை மாற்று அணி குறித்து விளக்குகிறார் யசோதா பத்மநாதன் அவர்கள். பாகம் 4. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

மாலைமாற்றுத் தமிழ்!
சிலேடை கேட்டிருக்கிறோம்; எதுகை மோனை அறிந்திருக்கிறோம், சொற்சித்து விளையாட்டுக்களை தமிழில் ஆங்காங்கே கண்டிருக்கிறோம். விடுகதைகளோடும் தமிழ் விளையாடி இருக்கிறது. சித்திரக்கவி என்பது பற்றியும் சிலர் அறிந்திருக்கக் கூடும். அது என்ன மாலை மாற்று?

‘மாலை மாற்று’ என்பது தமிழில் இருக்கிற ஒரு வித சிறப்பான கவிதை வடிவம். ஒரு செய்யுளின் சொல்லை இடமிருந்து வலமாகவோ வலமிருந்து இடமாகவோ படித்தாலும்; சொற்களோ, பொருளோ மாறாமல் அமையும் பா மாலைமாற்று எனப்படும்.

கோமூத்திரியே , கூட சதுர்த்தம்,
மாலை மாற்றே , எழுத்து வருத்தனம்,
நாக பந்தம் , வினா உத்தரமே,
காதை கரப்பே கரந்துரைச் செய்யுள்,
சக்கரம் , சுழி குளம் , சருப்பதோ பத்திரம்,
அக்கரச் சுதகமும் , அவற்றின்பால.
- என்று தண்டியலங்காரம் கூறும் ’மடக்கு’ என்ற சொல்லணிக்குள் வரும் கூறுகளில் ஒன்று ’மாலைமாற்று’ ஆகும்.

மாலை மாற்று என்றால் என்ன?
உதாரணமாக, தேரு வருதே மோரு வருமோ? மோரு வருமோ தேரு வருதே!
மாலா,போலாமா? மாமா ,மாறுமா,மாமா ? போன்றவற்றைச் சொல்லலாம்.
ஒரு மாலையில் முத்துக்களைக் கோர்த்த பின்னர் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் அந்த மாலை ஒரே மாதிரியாக இருப்பது போல பாடலைப் புனைந்த பின்னால் எங்கிருந்து பார்த்தாலும் அதாவது முதல் எழுத்திலிருந்து வலப்புறமாகவோ, கடைசி எழுத்தில் தொடங்கி இடப்புறமாகவோ படித்தாலோ ஒரேமாதிரி இருக்கும்.

12ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக அறியப்படும் ‘தண்டி அலங்காரம்’ என்ற அணி இலக்கண நூல் அதற்கு இப்படியாக 3 உதாரணங்கள் தந்து விளக்குகின்றது.
1.“நீ வாத மாதவா, தாமோக ராகமோ,தாவாத மாதவா நீ”
என்பது ஒன்று. அதாவது நீங்காத பெரும் தவம் உடையோனே! வலிய மயக்க வேட்கையோ நீங்காது, (ஆதலால்) அழகிய பெண்ணினுடைய ஆசையினை நீக்கி அருள்வாயாக! அதாவது அவள் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக! என்பது அதன் பொருள்.
2.அடுத்தது, “வாயாயா நீகாவா யாதாமா தாமாதா யாவாகா நீயாயா வா” அதாவது, எமக்கு வாயாதன யாவை? நீ எம்மைக் காத்து அருள் புரிவாய்! (அவ்வாறு) இல்லாவிட்டால் என்னவாகும்? இம்மாது பெரும் வருத்தம் உறுவள். (நீ விரும்பினால்) எது தான் முடியாதன? அதனால் நான் கூறியவற்றை நன்கு ஆராய்ந்து நீ வருக என்பது அதன் பொருள்.
3. இறுதியாக அமைவது,
“பூவாளை நாறுநீ பூமேக லோகமே பூ நீறு நாளைவா பூ”
அதாவது, இயல்பாய் பூப்பு இல்லாதவளை மணந்து புலால் நாற்றம் வீசும் நீ, பூவையும் பொன்னையும் மழையாகச் சொரியும் மேகமோ! பூவும் திருநீறும் தரித்து நாளைய தினம் வருவாயாக, இவள் இப்பொழுது பூப்பினளாய் இருக்கின்றாள். என்று பரத்தையர் சேரி சென்று மீண்ட தலைவனுக்கு தோழி வாயிலாக மறுத்து உரைத்ததாக அமைகிறது இந்தச் செய்யுள்.
இவ்வாறாக பரிதிமால் கலைஞர் தண்டியலங்கார உதாரணங்களுக்கு விளக்கம் தருகிறார்.

உதாரணமாக துவளுவது, தாளாதா, மேளதாளமே, தேருவருதே, மாவடுபோடுவமா, தோடு ஆடுதோ, மேக ராகமே, என சில சொற்கள் பின்புறம் இருந்து பார்த்தாலும் முன்புறம் இருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியான பொருள் வருகிறதே! அது மாதிரி. இத்தகைய சொற்களை வைத்துக் கொண்டு ஒரு பாடலையே பொருளும் விளங்க பாடி முடிப்பது மாலை மாற்று ஆகும்.

இதனை ஆங்கிலத்தில் Palindrome என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் Civic, Radar, Level, Madam, Malayalam, Pop, Noon, Refer போன்ற சொற்கள் ஆங்கில மாலைமாற்றுச் சொற்களுக்கு உதாரணங்களாகும். இது ஆங்கில மொழியில் பென்ஜோன்ஸன் என்பவரால் 17ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. எனினும் மிகப்பழைய மாலைமாற்றுச் சொல் கி.மு 79இல் இலத்தீன் சொல்லான Sator Arepo Tenet Opera Rotas என்பதாகும் என நம்பப் படுகிறது.

வடமொழியில் கிபி 18ம் நூற்றாண்டில் கர்நாடகா மாநிலத்தில் வாழ்ந்த வேங்கடாத்வரி என்ற மகாகவி ஒருவர் 'ராகவ யாதவீயம்' என்ற ஒரு காவியத்தையே மாலைமாற்று வழியில் இயற்றி இருக்கிறாராம். அதில் சிறப்பென்னவென்றால் அதனை இடமிருந்து வலமாகப் படிக்கும் போது அது இராமபிரானின் வரலாற்றைக் கூறும் இராமாயணமாகவும்; அதனை வலமிருந்து இடப்புறமாகப் படித்தால் அது கண்ணபிரானின் கதையைக் கூறும் பாகவதமாகவும் விளங்குகிறதாம்.

16 ஆண்டுகள் மாத்திரமே வாழ்ந்தவர் என்று நம்பப்படும் திராவிட சிசு என்று செளந்தர்யலகரி அழைக்கும்; நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் என்று சுந்தரரால் அழைக்கப்பட்ட சந்தத்தின் தந்தை என்றும் மதிக்கப்படும் கி.பி. 637இல் வாழ்ந்த திருஞான சம்பந்தர், ஒன்றல்ல; 11 திருப்பதிகங்களை மாலை மாற்றுப் பதிகமாகப் பாடி இருக்கிறார் என்பது சமயத்துக்கப்பால் வியந்து இன்புறத்தக்க அவரது தமிழ் புலமையாகும்.

அவர் பாடிய மாலைமாற்றுப் பாடலின் பொருள்:
நாங்கள் கடவுள்களா? இல்லை. நீமட்டும்தான் கடவுள், ஆமாம்! பெரிய யாழை ஏந்தியவனே, எல்லோராலும் விரும்பப்படுகிறவனே, நாங்கள் பார்க்கும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே, காமனை / மன்மதனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே, சீர்காழியில் எழுந்தருளும் இறைவனே, பெரிய மாயைகளை/ திருவிளையாடல்களைச் செய்பவனே, எங்களைப் பிற மாயைகளில் இருந்து காப்பாற்று!

பொதுவாக இவற்றில் நிறுத்தற்குறியீடுகள் மற்றும் குறில் நெடில் எழுத்துவேறுபாடுகள் அதிக கண்டிப்போடு பார்க்கப் படுவதில்லையாயினும் இப் பாடல்கள் படித்துப் பொருள் அறிவது சற்றே சிரமம்தான்.

இருந்தபோதும், பின்நாளில் காஞ்சிபுராணம் மற்றும் திருநாகைக் காரோணப் புராணம் போன்ற தமிழ் இலக்கியங்களிலும் மாலைமாற்றுப் பதிகங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவை எல்லாம் தமிழோடு கவிஞர்கள் விளையாடிய விளையாட்டுக்கள்.

படிக்கவும் படித்துப் பொருள் அறியவும் சற்றே சிரமமான இந்தப் பாடலைப் கேட்கும் போது அண்மையில் ’வினோதன்’ என்ற தமிழ் திரைப்படத்தில் மதன் கார்க்கி இயற்றி டி. இமான் அவர்கள் இசையமைத்த  பாடல் உடனடியாக உங்களுக்கு நினைவு வரக் கூடும்.

 

Coming up next

# TITLE RELEASED TIME MORE
நம்ம தமிழ்: மாலை மாற்று அணி அறிமுகம் 26/04/2020 10:16 ...
மெல்பன் முடக்கநிலை: சந்தித்த சவால்களும் கிடைக்கும் வாய்ப்புகளும் 27/10/2021 11:09 ...
கோவிட் தொற்றை கண்டறியும் நம்பகமான பரிசோதனை முறை எது? 27/10/2021 12:29 ...
காலநிலை தொடர்பிலான அரசின் திட்டத்துக்கு பல Billion டாலர்கள் 27/10/2021 05:50 ...
இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதா? 27/10/2021 06:01 ...
இருசுற்று தடுப்பூசி பெற்ற ஆஸ்திரேலியர்கள் சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் 27/10/2021 07:23 ...
Moderna தடுப்பூசியை உள்நாட்டில் தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம் 26/10/2021 06:28 ...
தடுப்பூசி போட மறுப்பதற்கு உரிமை இருக்கிறதா? 26/10/2021 16:31 ...
மேற்கு ஆஸ்திரேலியா குழந்தை கடத்தல்; மில்லியன் டாலர் பரிசு அறிவிப்பு! 25/10/2021 07:34 ...
NSW மாநிலத்திற்குள் அடுத்த வாரம் முதல் எங்கும் பயணிக்கலாம் 25/10/2021 06:10 ...
View More