புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ள தரவுகளில், ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை பெருந்தொற்று ஏற்பட்டதால் மரணித்தவர்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து, ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை 920 பேர் தொற்றினால் இறந்துள்ளார்கள். இவர்களில் 397 பேர் இந்நாட்டில் பிறந்தவர்கள்.
மக்கள் தொகையின் விகிதாசார அடிப்படையில், இங்கு பிறந்தவர்கள் ஒரு லட்சம் பேரில் இரண்டு பேர் Covid-19 தொற்றினால் மரணித்துள்ளார்கள். ஆனால், வெளிநாடுகளில் பிறந்த ஒரு லட்சம் பேரில் இறந்தவர்கள் எண்ணிக்கை நான்கை விட சற்று அதிகம்.
வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பிறந்தவர்களின் வயது-தரப்படுத்தப்பட்ட இறப்பு விகிதம் 6.0 ஆகவும், தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்தவர்கள் 8.4 ஆகவும் உள்ளனர்.
பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் இருந்து குடியேறியவர்கள் COVID-19 தொற்றினால் இறந்தவர்கள் மிகக் குறைவு (ஒரு இலட்சம் பேரில் 1.8).

ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் விநியோகிக்கப்பட்ட அரசின் சுகாதார அறிவிப்புகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தன என்றும், காலாவதியான தடுப்பூசி ஆலோசனைகள் வெளியிடப்பட்டிருந்தன என்பதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சியான Labor கட்சி, பெருந்தொற்று பரவ ஆரம்பித்த வேளை Scott Morrison தலைமையிலான அரசு பன் மொழி, பல்கலாச்சார சமூகங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கவில்லை என்று குற்றம் சாடியுள்ளது.
தொற்றினால் இறந்தவர்களின் சமூக-பொருளாதார பின்னணி ஒரு பாரிய காரணியாக அமைந்திருந்தன என்பதை புள்ளி விவரத்துறை வெளியிட்டுள்ள தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
Covid-19 தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை, பணக்காரர்களை விட (83) பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய (311) மக்கள் மூன்று மடங்கு அதிகமாகும்.

ஒட்டுமொத்தமாக, ஆண்களை விட (446) பெண்கள் அதிகமாக (474) இறந்துள்ளார்கள், அத்துடன் இறந்தவர்களின் சராசரி வயது 86.9 ஆண்டுகள் (ஆண்களுக்கு 85.2 ஆண்டுகள், பெண்களுக்கு 88.4 ஆண்டுகள்) ஆகும்.
தொற்றினால் இறந்தவர்களில் 73 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே உடல் நலம் குன்றியவர்கள் என்பதை அவர்களின் இறப்புச் சான்றிதழ்கள் சுட்டிக் காட்டுகின்றன.
தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இதுவரை (வியாழக்கிழமை வரை), 1,696 பேர் Covid-19 தொற்றினால் இறந்துள்ளார்கள்.
தொற்றினால் விக்டோரியாவில் மேலும் 25 பேர் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை நள்ளிரவு வரையிலான 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்கள். தொற்று அதிகமாகிய அண்மைய நாட்களில், ஒரு மாநிலத்தில் ஒரு நாளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையின் உச்சம் இதுவாகும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
