பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளான கோபிகா மற்றும் தருணிக்கா ஆகியோர் சுமார் ஒரு வருடம் பெர்த் நகரில் சமூக தடுப்பில் வாழ்ந்து வந்த நிலையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள லேபர் அரசு அவர்கள் Biloela திரும்ப அனுமதி வழங்கியதை அடுத்து கடந்த புதன்கிழமை பெர்த் நகரிலிருந்து பிரிஸ்பன் வழியாக நேற்று மதியம் மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela வந்தடைந்தனர்.
சுமார் 6,000 பேர் வரை வசித்து வரும் சிறிய நகரான Biloelaவில் வசிக்கும் மக்கள் பிரியா நடேஸ் குடும்பத்தை வரவேற்க மகிழ்ச்சி ஆரவாரத்துடன் விமான நிலையத்தில் நேற்று மதியம் கூடினர். "இங்கு பலரைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு பேரை நாங்கள் இங்கு இதற்கு முன் பார்த்ததில்லை" - என விமான நிலையத்தில் பணியாற்றும் ஒருவர் SBS Tamilயிடம் கூறினார். Biloela நகரை பிரதிநித்துவம் செய்யும் காக்கடூ பொம்மையுடன் கோபிகா மற்றும் தருணிக்கா இருவருடன் பிரியா நடேசலிங்கம் மிகவும் மகிழ்ச்சியுடன் விமானத்திலிருந்து இறங்கினர். இக்குடும்பத்தின் விடுதலைக்காக தொடர்ச்சியாகப் போராடிய Home to Bilo அங்கத்தவர்கள் அவர்களை கட்டி அணைத்து முத்தமிட்டு ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

Supporters of the Murugappan family hold welcome signs ahead of their arrival at the Thangool Aerodrome on June 10, 2022 Source: Dan Peled/Getty Images
நான் ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பிக்க போகிறேன் இதனை சாத்தியப்படுத்திய சமூக மக்களுக்கு நன்றி
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, குடிவரவு தடுப்புமுகாமிற்கு கொண்டுசெல்லப்பட்ட பிரியா-நடேஸ் குடும்பம் தொடர்ச்சியாக சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவந்தது.
லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிரியா-நடேஸ் குடும்பம் Biloela-இல் வாழ அனுமதிக்கப்படுவர் என வாக்குறுதியளித்ததற்கிணங்க, இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இக்குடும்பத்தின் விடுதலைக்காக தொடர்ச்சியாகப் போராடிய Home to Bilo அங்கத்தவர்கள் கோரியிருந்த பின்னணியில், லேபர் அரசு அண்மையில் இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. இதற்கேற்ப பிரியா-நடேஸ் குடும்பத்தினருக்கு bridging விசாவும் வழங்கப்பட்டுள்ளது.
பிரியா நடேஸ் குடும்பத்தினருக்கு நிரந்திர வீசா வழங்க வேண்டும் எனவும் Home to Bilo அங்கத்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

Source: SBS Tamil
இவர்களின் பாதுகாப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட பிறகு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த bridging விசாவும் காலாவதியாகிய நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குடிவரவு அதிகாரிகள் இக்குடும்பத்தை Biloela நகரிலிருந்து பலவந்தமாக அழைத்து சென்று நாடுகடத்த முயன்ற வேளையில் சட்ட நடவடிக்கை காரணமாக இறுதி நேரத்தில் அவர்களின் பயணம் தடுக்கப்பட்டதிலிருந்து ஆரம்பித்த இவர்களின் வாழ்க்கைச் சிக்கல் தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு Biloela மக்களின் ஆதரவு மற்றும் அவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

Priya and Nades Nadesalingam and their daughters Kopika and Tharnicaa are seen arriving at Thangool Airport in Biloela Source: AAP Image/Darren England
பிரியா நடேஸ் குடும்பம் Biloela திரும்ப வேண்டும் என பல ஆண்டுகளாக முன்னின்று போராடி வந்த Angela Federick அவர்களின் தலைமையில் நேற்று பிரியா நடேஸ் குடும்பத்தினரின் ஊடகச்சந்திப்பு நடைபெற்றது.
நாட்டின் முன்னணி ஊடகங்கள் அங்கு ஒன்று கூடி இருந்த நிலையில், பிரியா அந்த ஊர் மக்களுக்கும் அரசுக்கும் நன்றி கூறினார் அதனை தொடர்ந்து நடேசலிங்கம் சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு Biloela திரும்ப உதவிய Biloela சமூக மக்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன் என கூறினார் .
பின்னர் ஊடகவியலாளர்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்த நிலையில் கோபிகா மற்றும் தருணிக்கா இருவரிடமும் கேள்விகள் கேட்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
குடிவரவு தடுப்பு காவல் மிகவும் கொடுமையானது எங்களின் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது

Source: SBS Tamil
இன்று பிரியா நடேஸ் குடும்பத்தினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளும் விழாவும் நாளை ஞாயிற்றுக்கிழமை தருணிக்காவின் ஐந்தாவது பிறந்தநாள் விழாவும் நடைபெற உள்ளன. தடுப்பு காவலிலிருந்து வெளியே தருணிக்கா கொண்டாடும் முதலாவது பிறந்த நாள் என்பதினால் அவரின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதே வேளையில் ஆட்கடத்தல்காரர்கள் மூலம் சட்டவிரோதமாக படகுகளில் வரும் எவரையும் தாம் நாட்டில் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்றும், அப்படியான படகுகள் தொடர்ந்து முன்புபோன்றே திருப்பி அனுப்பப்படும் என்றும் புதிதாக பதவியேற்ற லேபர்கட்சி அரசு கூறிவருகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது