SKIP TO MAIN CONTENT

‘13 தடவைகள் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை’-மெல்பேர்ன் மாணவி கொலை விசாரணையில் தகவல்!

Aiia Maasarwe.
Aiia Maasarwe. Source: Supplied

2 min read

Published

Updated


Skip to article content

மெல்பேர்ன் Bundoora பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்ட பலஸ்தீன மாணவி Aiia Maasarwe,  கொலையாளியால் 13 தடவைகள் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டிருக்கிறார். பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். அவரது மண்டையோட்டில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக பின்னர் இறந்திருக்கிறார் என்று நேற்று விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட மாணவி படுகொலை வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொலைக்குற்றஞ்சாட்டப்பட்ட Codey Herrmann தடுப்புக்காவலில் இருந்து நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தார். Codey Herrmann கொலைக்குற்றச்சாட்டினை முன்னதாக ஒப்புக்கொண்டதை அடுத்து சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றன.

கொலைச்சம்பவம் தொடர்பாக பொலீஸார் முன்வைத்த அறிக்கையின்படி - சம்பவம் இடம்பெற்ற அன்று - ஜனவரி 16 ஆம் திகதி Aiia Maasarwe, Bundoora பகுதியில் Tram வண்டியைவிட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருக்கும்போது தனியாக இருட்டில் நடந்து செல்வதற்கு பயத்தில் தனது சகோதரிக்கு தொலைபேசி மூலம் அழைப்பெடுத்திருக்கிறார். அந்த அழைப்பு இணைக்கப்பட்டு சில நொடிகளிலேயே அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த Codey Herrmann அவரது தலையில் நான்கு தடவைகள் இரும்பு கம்பியினால் தாக்கியுள்ளார். அப்போது "you piece of s**t" என்று Aiia Maasarwe அரபு மொழியில் திட்டியது தொலைபேசியின் மறுமுனையில் கேட்டிருக்கிறது. அந்த தாக்குதலுக்கு பின்னர், Aiia Maasarwe அருகிலிருந்த பற்றைகளுக்கு இடையில் இழுத்துச்செல்லப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன் பின்னர் Aiia Maasarwe ஒன்பது தடவைகள் தலையில் மீண்டும் இரும்பு கம்பியினால் தாக்கப்பட்டுள்ளார். Codey Herrmann தன்னிடமிருந்த திரவமொன்றை ஊற்றி உடலத்தை எரிக்கமுற்பட்டதும் தடயங்களில் தெரியவந்துள்ளது என்று பொலீஸார் கூறினர்.

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் கடந்த டிசெம்பர் மூன்றாம் ஆறாம் திகதிகளில் Aiia Maasarwe வசிக்கும் அடுக்குமாடி தொடருக்குள் செல்வதற்கு Codey Herrmann முயற்சி செய்திருக்கிறார் என்ற தகவலையும் நேற்று நீதிமன்றத்தில் பொலீஸார் தெரிவித்தனர்.

Codey Herrmann தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் கூறும்போது - செய்த குற்றத்தை ஒருபோதும் நியாயப்படுத்தமுடியாது என்றும் ஆனால் இந்தச்செயல் அவரது இயல்பான பழக்கத்திற்கு முற்றிலும் முரணானது என்றும் தெரிவித்தார். Codey Herrmann சிறுவயதிலிருந்து இடர்மிகுந்த வளர்ப்பின் வழி வந்ததும் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகியிருந்ததும் இந்த குற்றத்துக்கு காரணமாகியிருக்கலாம் என்று அவர் கூறினார்.

குறிப்பிட்ட கொலைச்சம்பவம் நடைபெற்ற கடைசி இரண்டு மணி நேரம் தனக்கு என்ன நடைபெற்றது என்று எதுவும் தெரியாது என்றும் தான் போதையிலிருந்ததாகவும் Codey Herrmann கூறியுள்ளார்.

விசாரணைகள் தொடர்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now