ஆஸ்திரேலிய அரசு விரும்பினால், வருடமொன்றுக்கு பாப்புவா நியூகினி தீவுகளில் உள்ள அகதிகளில் 150 பேரை நியூசிலாந்தில் குடியமர்த்துவதாக தாம் ஐந்து வருடங்களுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதியின்படி இன்னமும் செயற்படத்தயாராக உள்ளபோதும் ஆஸ்திரேலிய அரசு அதனை தொடர்ந்தும் நிராகரித்துவருவதாக நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern, சிட்னி மோர்னிங் ஹெரால்ட் ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.
2013 ஆம் ஆண்டு மேற்படி தீவுகளில் கொண்டுபோய் தடுத்துவைக்கப்பட்ட ஆஸ்திரேலிய அகதிகளில் ஒரு தொகுதியினரை ஏற்றுக்கொள்வதாக அப்போதைய நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்திருந்தது.
அதனை அப்போது ஆட்சியிலிருந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிலார்ட் ஏற்றுக்கொண்டிருந்தபோதும் பின்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துடன் பதவிக்கு வந்த Tony Abbott இச்சலுகையை அடியோடு நிராகரித்திருந்தார். பின்னர் வந்த அரசுக்களும் அதனை தொடர்ச்சியாக நிராகரித்துவந்திருக்கின்றன.
இந்நிலையில் 2013 ஆம் ஆண்டுக்குப்பின்னர் பதவிக்கு வந்த நியூசிலாந்து பிரதமர்களும் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் சலுகையினை தொடர்ந்தும் முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ள Jacinda Ardern, தமது அரசு வழங்கிய உறுதிமொழி குறித்து ஆஸ்திரேலிய அரசு நன்கு அறியும் என்றும் படகில் வந்து பாப்புவா நியூகினி தீவில் தடுத்துவைக்கப்பட்டவர்களில் 150 பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கி வதிவிட உரிமையும் வழங்குவதற்கு நியூசிலாந்து தயாராக உள்ளது என்பதை தாங்கள் தொடர்ந்து கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆஸ்திரேலிய அரசுதான் முடிவெடுக்கவேண்டும் என்றும் ஆனால், இப்போதுவரைக்கும் தங்களது அறிவிப்பு ஆஸ்திரேலிய அரசினால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
