விக்டோரியா மாநிலத்தின் regional பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் விக்டோரியர்களுக்கு 200 டொலர்கள் பெறுமதியான கூப்பன்களை வழங்கவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட விக்டோரிய மாநிலத்தின் சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்புவதெற்கென நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள 465 மில்லியன் டொலர் நிதியுதவியின்கீழ் இத்திட்டமும் அடங்குவதாக Premier Daniel Andrews அறிவித்தார்.
இதன்படி விக்டோரியா மாநிலத்தின் regional பகுதிகளுக்கு சுற்றுலாச் சென்று 400 டொலர்களுக்கு மேலான பணத்தை, தங்குமிடம் மற்றும் டிக்கெட்டுகளில்(attractions & tours) செலவிட்டவர்கள் அரசு வழங்கும் 200 டொலர் கூப்பனைப்பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
இதற்கென எதிர்வரும் டிசெம்பர் முதல், 200 டொலர்கள் பெறுமதியான சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கூப்பன்கள் தயாராக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஏற்கனவே regional பகுதிகளில் வாழ்பவர்கள் தாம் வாழும் பகுதிகளைவிட்டு மற்றுமொரு பகுதிக்கு சுற்றுலாச் செல்லும்பட்சத்தில் இந்த இலவச கூப்பனைப் பெற்றுக்கொள்ளக்கூடும் என குறிப்பிடப்படுகிறது.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும்வகையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த இலவச கூப்பன்கள் எவ்வாறு வழங்கப்படவுள்ளது என்பது குறித்த மேலதிக விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என விக்டோரிய அரசு கூறியுள்ளது.
Share
