கேம்பிரிட்ஜ் அகராதி 2018 ஆம் ஆண்டின் மிகப்பிரபலமான சொல்லாக Nomophobia என்பதை தாங்கள் தெரிவு செய்வதாக அறிவித்துள்ளனர். ஆண்டுதோறும் தங்களது அகராதியில் இணைத்துக்கொள்வதற்கான பிரபல வழக்காற்று சொற்கள் குறித்த தெரிவுகளை தங்களது ஆசிரியர்கள் குழாத்தின் மத்தியில் தெரிவுக்கு எடுக்கும் கேம்ரிட்ஜ் அகராதி, இம்முறை Nomophobia என்ற சொல்லை தெரிவு செய்திருக்கின்றது.
Nomophobia என்ற சொல் ‘no mobile phone phobia' என்ற வசனத்தின் சுருக்கம் என்றும் இதன் அர்த்தம் கைத்தொலைபேசியை தொலைத்துவிட்டால் அல்லது தன் வசம் இல்லாவிட்டால் ஒருவருக்கு ஏற்படுகின்ற அச்சம் அல்லது பதற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல சொற்களை தெரிவு செய்வதற்கு ஆசிரியர்கள் குழாம் யோசித்தபோதும் 2018 இல் Nomophobia என்ற சொல் அதிகம் புழங்கப்பட்டிருப்பதனால் இதனை தங்களது அகராதியில் இணைத்துக்கொள்வதற்கு கேம்பிரிட்ஜ் அகராதி ஆசிரியர்கள் குழாம் முடிவு செய்வதாக கூறியுள்ளது.
இதேவேளை, ஆஸ்திரேலிய தேசிய அகராதி மையம் 2018 ஆம் ஆண்டுக்குரிய தங்களது தெரிவாக Canberra bubble என்பதை அறிவித்துள்ளது. இந்த சொல் பிரதமர் ஸ்கொட் மொறிஸனால் பயன்படுத்தப்பட்ட பின்னர் ஆஸ்திரேலியாவில் பிரபலமாகியுள்ளதாக தேசிய அகராதி மையம் தெரிவித்துள்ளது.இந்த சொல்லின் அர்த்தம், கன்பராவில் - அரசியல் வட்டாரங்களில் - பேசப்படுகின்ற புறணி அல்லது வதந்தி.
2018 ஆம் ஆண்டுக்குரிய பிரபலமான சொற்களாக கொலின்ஸ் அகராதி 'single-use' என்ற சொல்லையும் ஒக்ஸ்போர்ட் அகராதி 'toxic' என்ற சொல்லையும் Dictionary.com 'misinformation' என்ற சொல்லையும் தெரிவு செய்துள்ளன.