வரித்திணைக்களதுக்கு ஆண்டுதோறும் வருமானத்தை தெரியப்படுத்தும் காலப்பகுதி நெருங்கியிருக்கும் வேளையில் ஆஸ்திரேலிய வரித்திணைக்கம் இம்முறை கவனம் செலுத்தப்போகின்ற விடயங்கள் குறித்து அறிவித்திருக்கிறது.
வேலையுடன் தொடர்புடைய செலவினங்களாக லட்சக்கணக்கான வரி செலுத்துனர்களால் தெரிவிக்கப்படுகின்ற வாகனச்செலவினம், ஆடைச்சலவை செலவினம், கைத்தொலைபேசி பயன்பாட்டு செலவினம் ஆகியவை தொடர்பிலும் வீட்டு முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்ற செலவுகள் தொடர்பிலும் இம்முறை கூடுதல் கவனம் செலுத்தப்படப்போவது மாத்திரமல்லாமல் விசேட விசாரணைகளையும் மேற்கொள்வதற்கு முடிவெடுத்திருப்பதாக வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு கோடி 40 லட்சம் ஆஸ்திரேலியர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவினங்கள் தொடர்பான அறிக்கையை வரித்திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கிறார்கள்.
கடந்த நிதியாண்டில் ஆஸ்திரேலியர்கள் தாங்கள் செலுத்திய வரியிலிருந்து மீளப்பெற்றிருக்கும் தொகைகள் பற்றிய விவரங்கள் வருமாறு:
- கடந்த வருடம் 70 லட்சம் ஆஸ்திரேலியர்கள் சுமார் 16.5 பில்லியன் டொலர்களை வேலை சம்பந்தமான செலவீனங்கள் என்று கூறி தாங்கள் செலுத்திய வரியிலிருந்து மீளப்பெற்றிருக்கிறார்கள். இவர்களில் 28 லட்சம் ஆஸ்திரேலியவர்கள் சுமார் 6.2 பில்லியன் டொலர்கள் வேலைக்கான வாகனச்செலவு என்று மீளப்பெற்றிருக்கிறார்கள்.
- கடந்த வருடம் சுமார் 11 லட்சம் ஆஸ்திரேலியர்கள் கிட்டத்தட்ட 1.5 பில்லியன் டொலர்களை வேலைதொடர்பான உணவுச்செலவாக மீளப்பெற்றிருக்கிறார்கள்.
- அதேவேளை, 1.5 பில்லியன் டொலர்கள் ஆடை சுத்திகரிப்பு செலவினமாக கடந்த நிதியாண்டில் ஆஸ்திரேலியர்களால் மீளப்பெறப்பட்டிருக்கிறது.
- 60 லட்சம் ஆஸ்திரேலியர்கள், இதர செலவினங்கள் என்ற பகுதியின் கீழ் கைத்தொலைபேசிச்செலவு - அலுவலக செலவு ஆகியவற்றை மீளப்பெற்றிருக்கிறார்கள். இதன் மொத்த பெறுமதி 6.5 பில்லியன் டொலர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இம்முறை இந்த செலவுகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகவும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வரியை மீளப்பெறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் வீட்டு முதலீட்டாளர்கள் rental deductions தொடர்பில் அவதானமாக தங்களது கணக்குகளை சமர்ப்பிக்குமாறும் இம்முறை ஒவ்வொரு rental deduction ஆவணமும் மூன்று தடவைகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் வரித்திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
