சின்ன நூற்கண்டா நம்மை சிறைப்படுத்துவது என்று நம்மை உசுப்பிவிடும் வாக்கியத்தை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சுமார் 200 நானோமீட்டர் விட்டளவு கொண்ட ஒரு நோய்கிருமி இந்த உலகின் சுமார் 750 கோடி மக்களை சுற்றிவளைத்து கடந்த பல மாதங்களாக முடக்கிபோட்டிருக்கும் நிகழ்வு ஆச்சரியமானது; அரிதானது.
உலக வரலாற்றில் Pandemic எனப்படும் பெரும் பரவல் அவ்வப்போது நடந்தே வந்துள்ளது. 1918–1919 ஆண்டுகளில் Spanish Flu என்ற தொற்றுநோய்க்கு சுமார் ஐந்துகோடி மக்கள் பலியானார்கள். 1968 இல் ஏற்பட்ட "Hong Kong Flu” என்று அழைக்கப்பட்ட தொற்று நோயில் சுமார் நாற்பது லட்சம் மக்கள் பலியானார்கள். ஆனால் உலகம் இப்படி பீதியில் உறைந்துபோனதில்லை.

உலகில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று சுமார் எட்டுகோடி மக்களுக்கு ஏற்பட்டு இதுவரை இருபது லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை தொடர்கிறது. அச்சமும் சூழ்ந்தே வருகிறது.
கொரோனா வைரஸ் மனித வாழ்வின் ஒவ்வொரு கூறையும் பாதிக்கிறது. உடல் நலம், உள்ள நலம், பொருளாதாரம், சமூக உறவு, இடம் பெயர்வு, அறிவியல் முன்னேற்றம் என்று கொரோனா வைரசின் தாக்கம் எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்து நிற்கிறது.
உடல் நலம்
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். மனிதன் நலமாக இல்லை எனில் வாழ்வும் இல்லை வளமும் இல்லை. கொரோனோ வைரஸ் அதிகமாக தாக்கிய நாடுகள் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசில் நாடும் உள்ளன.
கல்லுளி தச்சன் போனவழி கல்லெல்லாம் தவிடுபொடி என்பதுபோல கொரோனோ வைரஸ் வந்ததுதான் வந்தது, அதுபோனபோக்கில் பல நோய்களுக்கான தடுப்பூசி திட்டங்களையும் தவிடுபொடியாக்கிவிட்டது. கொரோனோ வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக வேறு பல நோய்களுக்கு குழ்ந்தைகளுக்கு கட்டயாம் தரப்படவேண்டிய தரப்படவேண்டிய தட்டம்மை, இளம்பிள்ளை வாதம் போன்ற தடுப்பூசிகள் இந்த ஆண்டு தரப்படவில்லை.
உலகில் இந்த ஆண்டு வெறும் 28 சத குழந்தைகளுக்கே தட்டம்மை தடுப்பூசி தரப்பட்டுள்ளது. மட்டுமல்ல, வளரும் நாடுகளில் காலரா, மஞ்சள் காய்ச்சல், மூளைக் காய்ச்சல், போலியோ என்று அதிகமான குழந்தைகளுக்கு தரப்படவேண்டிய தடுப்பூசிகள் தரப்படவில்லை. இதன் விளைவு எதிர்வரும் ஆண்டுகளில் மிக மோசமாக இருக்கும் என்று ஆதங்கப்படுகிறார் Save the Children எனும் குழந்தைகள் நல அமைப்பின் Paul Ronald.

உலக பொருளாதாரம்
கடந்தாண்டு ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருந்த உலக பொருளாதராம் கொரோனா வைரஸ் உலகை பாதித்ததும் மளமளவென்று சரிந்தது. விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா? உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் என்று மதிப்பிடப்படும் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்தது. அமெரிக்க பொருளாதார அளவுகோலின் முக்கிய கூறுகளில் ஒன்றான Dow Jones Industrial Average கொரோனா வைரஸ் செய்தியைக் கேட்டதும் 1,191 புள்ளிகள் சரிந்தன. அமெரிக்க பொருளாதார வரலாற்றில் இதுவரை இந்த சரிவு நடந்ததில்லை.
கொரோனா பரவல் துவங்கிய மார்ச் மாதவாக்கில் “இந்தாண்டு மிகவும் கடினமான ஆண்டு” என்று ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison குறிப்பிடார். அவரின் வாக்கு அப்படியே பலித்து.
உலக மக்களில் சுமார் 65 கோடி மக்கள் 2021 ஆம் ஆண்டில் வறுமையில் வாடுவர் என்று முதலில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப்போட்டதால் 2021 ஆம் ஆண்டில் சுமார் 144 கோடி மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர் என்கிறார் Global Economy and Development நிறுவனத்தின் Homi Kharas அவர்கள்.

வறுமை நிலை ஏழை நாடுகளை அதிகம் பாதிக்கும் என்பதால் வறுமையின் தாக்கத்தினால் எழும் சமூக, உளவியல், உடல்நல பிரச்சனைகள் உலகை உலுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனித மற்றும் சமூக உறவு
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளில் அதீத விளைவை ஏற்படுத்தியது மனித உறவும், சமூக உறவும். ஆஸ்திரேலிய நாட்டை நாம் ஒரு ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொண்டால், கொரோனா காலத்தில் நாட்டில் குடும்ப வன்முறை பல மடங்கு அதிகரித்தது; மது விற்பனை கடந்த ஆண்டைவிட அமோகமாக நடந்துள்ளது; மக்கள் வீடுகளில் முடங்கிப்போனதால் இணையவழி சூதாட்டம் அதிகரித்துள்ளது; மனநலம் அதிகமாக பதிக்கப்பட்டது; லட்சக்கணக்கில் மக்கள் வேலை இழந்தனர்; குடியேற்றம் குறைந்துபோனது; வழக்கமான அனைத்து விமானப் பயணங்களும் நிறுத்தப்பட்டன; சர்வதேச சுற்றுலா முற்றாக முடங்கிப்போனது.
சர்வதேச விளையாட்டு
உலகமே விழி பிதுங்கி நிற்க ஒட்டுமொத்த சர்வதேச விளையாட்டுகளும் இந்த ஆண்டு நிறுத்தப்பட்டன.
இதில் முக்கியமானது ஒலிம்பிக் போட்டி. இரண்டு உலகப் போர் வேளைகளில் மூன்று முறை தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி போர் அற்ற சூழலில் முதன்முதலாக தள்ளிவைக்கப்படது.
குடல் கூழுக்கு அழுகிறதாம் கொண்டை பூவுக்கு அழுகிறதாம் என்றாகிப் போனது ஜப்பானின் கதை. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் இந்த ஆண்டின் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி 17 நாட்கள் நடைபெறவேண்டிய ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றார் சர்வதேச ஒலிம்பிக் கழகத்தின் தலைவர் Thomas Bach அவர்கள்.

இரண்டாம் உலக போருக்குப்பின்னர் முதன்முறையாக டென்னிஸ் போட்டியின் மிக முக்கிய ஆட்டமான விம்பிள்டன் ஆட்டமும் இந்த ஆண்டு நடைபெறவில்லை.
தடுப்பூசி இல்லாமல் கொரோனாவை முடக்கிய தலைவர்கள்
கொரோனா வைரஸ் எனும் முரட்டுக் காளையை அடக்க உலகின் பல மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளன. இதன்மூலம் 200 நானோமீட்டரே விட்டளவு கொண்ட கொரோனா வைரஸ் நோய்கிருமி இந்த உலகின் சுமார் 750 கோடி மக்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்ளும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், தடுப்பூசி இல்லாமலேயே கொரோனா வைரசை எங்களால் கட்டுப்படுத்த முடியும் என்று மிகச் சில நாடுகள் நிரூபித்துள்ளன. அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் New Zealand நாட்டின் பிரதமர் Jacinda Arden அவர்கள்.

தைவான், தென்கொரியா நாடுகள் பாராட்டப்படும் வகையில் கொரோனாவை காண்ட நாடுகள். உள்ளூரில் மேற்கு ஆஸ்திரேலியாவின் Mark McGowan, குயின்ஸ்லாந்தின் Annastacia Palaszczuk எனும் Premierகளையும் பாராட்டக் கூடிய அந்த வரிசையில் சேர்க்கலாம்.
குதிரை ராவுத்தனைத் தள்ளினதும் அல்லாமல், குழியும் தோண்டியதாம் என்ற கதையாக ஒரு ஆண்டில் இருபது லட்சம் மக்களை பலிகொண்டதோடு மீதி மக்களின் உடல் உள்ள நலம், பொருளாதாரம், சமூக உறவு, அறிவியல் முன்னேற்றம் என்று அனைத்தையும் குழிதோண்டி புதைத்துவரும் கொரோனா சூழ் உலகுக்கு 2021 விடியல் ஆண்டாக மலரட்டும்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
