மாதவிடாய் வரும் வேளை மரணத்தை நினைப்பது ஏன்?

திறமை வாய்ந்த வைத்தியர்களும் கண்டுபிடிக்க முடியாத ஒரு சிக்கலால் பல பெண்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். சில சமயங்களில், தற்கொலை செய்யக் கூட அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஏன் சில பெண்கள் மட்டும் இப்படி அவதியுற வேண்டும்? ஒரு ஆராய்ச்சி கட்டுரை.

“செத்துப் போக வேண்டும் போலிருந்தது.....”

“சிறுசிறு சச்சரவுகளுடன் தான் இது தொடங்கியது. பின்னர் என்னை பயம் பற்றிக் கொண்டது.”

Linda, திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த ஒருவர். கல்வியில் முதுகலை பட்டத்தை முடித்திருக்கிறார். மேலும், தனது முதலாவது குழந்தையின் பிறப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பின்னர் – எங்கோ, ஏதோ, ஒரு குறை இருப்பதாக உணர்ந்தார். ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் வருவதற்கு முன் பயம் அவரை தழுவிக் கொள்ளும். அந்தப் பயம் பயங்கரமாக உருவெடுக்கும்.

PMDD
Lynda experience severe panic attacks ahead of her period each month. Source: The Feed

பல்வேறு குடும்ப மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று பல நாட்களின் பின்னர்தான் அவருக்கு இருக்கின்ற வியாதி என்னவென்று புரிந்தது: PMMD.

PMDD (பி.எம்.டி.டி), அல்லது Premenstrual Dysphoric Disorder எனப்படும் கோளாறு, மாதவிடாய் வரும் போது ஏற்படுவது. கடுமையான துன்ப உணர்வையும் பலவீனத்தையும் ஏற்படுத்தும். நம்மில் பெரும்பாலோர் இதைக் கேள்விப்பட்டதே இல்லை.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இது ஹோமோர்ன் எனப்படும் இயக்குநீர் மூளையில் எதிர்மறையாக ஏற்படுத்தும் தாக்கத்தினால் உருவாகிறது.  குழந்தை பெறும் வயதிலுள்ள எட்டு பெண்களில் ஒரு பெண் இதனால் பாதிக்கப்படுகிறார்.

மாதவிடாய் காலங்களில் வருகின்ற எரிச்சல் போன்ற குணங்கள் (PMS) போலவே, இதுவும் கால அடிப்படையில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு (Global Survey of PMDs) ஆய்வில், தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றி இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.  அதற்கும் மேலாக, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 12 வருடங்களுக்கு மேல் முயற்சி செய்த பின்னர் தான் சரியான சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.  

திகில், பதட்டம், மனச்சோர்வு, வேகமாக் இயங்க வேண்டும் என்ற நினைப்பு இவை எல்லாம் ஒரு கலவையாக Lyndaவின் உணர்ச்சிகள் மேலும் கீழும் என்று மாறுபட்டுக் கொண்டே இருக்கும்.

pmdd
Lynda says she suffered severe panic attacks as a part of her PMDD. Source: The Feed

இந்தக் கோளாறு, உடலையும் மனதையும் பாதிக்கும் அறிகுறிகளைக் கொண்டுள்ளது - இது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம், தூக்கமின்மை, சித்தப் பிரமை, வீங்கிய மார்பகங்கள், மூட்டு வலிகள், தனது கட்டுப்பாட்டுக்குள் எதுவும் இல்லை என்ற உணர்வு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதற்கான அறிகுறிகள் ஆபத்தானவை என்றாலும், இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவு வழங்கவோ, இது குறித்து ஆராய்ச்சி செய்யவோ நிதி ஒதுக்கப்படவில்லை.

பல நிபுணர்கள், மன நல மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சங்கங்கள் இந்தக் கோளாறுகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள மறுக்கின்றன.  அதனால் இதனை Medical Gaslighting என்று சிலர் விபரிக்கிறார்கள். (1944ஆம் ஆண்டு வெளியான Gaslight என்ற திரைப் படத்தில் ஒரு கணவன் தனது மனைவிக்கு மன நலம் சரியில்லை என்று மற்றவர்களை நம்ப வைக்கிறான், அதிலிருந்து உருவான உருவகச் சொல்.)

PMDD
Source: The Feed

இந்த நோயை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று, மன நல மருத்துவரும், பெண்களின் மன ஆரோக்கியத்தில் நிபுணருமான பேராசிரியர் ஜெயஸ்ரீ குல்கர்னி (Jayashri Kulkarni) நம்புகிறார்.

"எல்லா விரக்திகளுக்கும் மேலாக மற்றவர்கள் தன்னை நம்பவில்லை என்பது Lyndaவை மிக அதிகமாகப் பாதிக்கிறது” என்று ஜெயஸ்ரீ குல்கர்னி SBSஇன் The Feed என்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

பாரம்பரிய மருத்துவத்தில் PMDDஇன் அறிகுறிகளை அளவிட முடியாது என்பதால், Lynda போன்ற, பாதிக்கப்பட்டவர்கள் கடினமான இடையூறுகளை எதிர்கொள்கின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்தப் பரிசோதனை, தைராய்டு மற்றும் வேறு ஹார்மோன்களைப் பரிசோதித்துப் பார்க்கும் போது,  அசாதாரணமாக எதுவும் தெரிவதில்லை.  அதனால், மருத்துவரும் அத்துடன் தனது சிகிச்சையை நிறுத்திக் கொள்வார்.  நோயாளி அதற்குப் பின்னரும் முறையிட்டால், அந்த நோயாளி ஒரு மன நல மருத்துவரைப் பார்ப்பதற்குப் பரிந்துரைக்கப்படுகிறார். பெரும்பாலும், இவர்களுக்கான அறிகுறிகள் கடுமையான மனச்சோர்வு அல்லது பதட்டம் என தவறாகக் கண்டறியப்படுகின்றன.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக PMDD உடன் வாழ்ந்து வருகிறார், Kim என்ற பெண். அவருக்கு மனச்சோர்வு இருப்பதாகவும், அவர் துக்கத்தை அடக்கி வைத்திருப்பதாகவும் அவருக்குக் கூறப்பட்டது.

PMDD
Source: The Feed
எனக்கு என்ன வியாதி இருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் கேட்பதெல்லாம் அதற்கான சிகிச்சை தான்.

PMDD இன் அறிகுறிகள் மாதவிடாய் வருவதற்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்பே ஆரம்பித்து மாதவிடாய் தொடங்கியதும் சடுதியாக நின்றுவிடும் என்று விளக்குகிறார் ஜெயஸ்ரீ குல்கர்னி.  இந்த நிலை, குறிப்பாக ஹார்மோன் தொடர்பானது என்பதைக் குறிக்கிறது என்கிறார் அவர்.

“இப்படியான நிலையை ஒரு நோயாளி எதிர்கொள்ளும்போது, அது அவர்களது மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  அதனால் தான் மனச்சோர்வு ஏற்படுகிறது” என்கிறார் ஜெயஸ்ரீ குல்கர்னி.

PMDD என்ற நோயைப் புறக்கணிக்க முடியாது என்றும் அதன் பாதிப்பு அதிகம் என்றும் Lynda நம்புகிறார்.

இது மகளிர் மருத்துவ பிரச்சினை என்பதா அல்லது மன ஆரோக்கியம் குறித்ததா என்பதில் தெளிவு இல்லாததால், யாரும் இது குறித்து கவனம் செலுத்தவில்லை.

அறியாமை காரணமாக, PMDDற்கான சிகிச்சையிலும் அதிகளவு குழப்பம் இருக்கிறது.

Menopause எனப்படும் மாதவிடாய் நிற்கும் காலம் மற்றும் PMDD ஆகிய இரண்டும் முன்னர் குறிப்பிட்ட Medical Gaslighting என்கிறார், WHRIA என்ற மகளிர் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் ஜான் ஈடன் (John Eden.)

PMDD
Source: The Feed

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை மன அழுத்தத்திற்கான எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தார் Kim. இறுதியில், புற்றுநோய் நோயாளிகளுக்கு வழங்கப்படும் Zolodex என்ற மருந்து வழங்கப்பட்டதன் மூலம், அவருடைய மாதவிடாய் முற்றுக்குக் கொண்டுவரப்பட்டது (chemical menopause).

இந்த மருந்து கடந்த ஆறு மாதங்களாகத் தான் பாவனையிலுள்ளது.  நீண்டகால தீர்வைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், அவரது இரண்டு கற்பப்பைகளும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நீக்கப்பட்டு, அதன் பின்னர் அவர் பரிசோதிக்கப்படுவார்.

“அறுவை சிகிச்சையை யாரும் விரும்புவதில்லை.  குறிப்பாக குழந்தைகளைப் பெற்றவர்கள் யாரும் அறுவை சிகிச்சை செய்ய விரும்புவதில்லை, எந்தவொரு அறுவை சிகிச்சையிலும் ஆபத்து உள்ளது” என்று கூறும் அவர், அதற்குத் தான் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.

ஏற்கனவே சத்திரசிகிச்சை செய்துள்ள Lyndaவைப் பொறுத்தவரை, இது மிகவும் கடினமான முடிவு என்கிறார்.

“எனது உறுப்புகளை அகற்ற நான் விரும்பவில்லைன்.”

இன்னும் சில வருடங்களில், எங்கள் உறுப்புகளை சத்திர சிகிச்சை மூலம் அகற்றுவதே PMDDக்கான சிகிச்சை என்று பின் நோக்கிப் பார்க்கும் போது, அது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமான செயல் என்று நாங்கள் சிந்திப்போம்.
pmdd
Kim has been using Zolodex, a drug designed to bring on a 'chemical menopause'. Source: The Feed

பெண்களை நம்புவதே அடுத்த படிகள் என்கின்றனர் ஜெயஸ்ரீ குல்கர்னி மற்றும் ஜான் ஈடன்

“வலி எந்த வகையில் வந்தாலும் வலி தான்.  வலியைக் குறைப்பது சுகாதார நிபுணர்களின் வேலை” என்கிறார் ஜெயஸ்ரீ குல்கர்னி.

PMDD உள்ளவர்கள், அது குறித்து வெளிப்படையாகப் பேசும் படி அவர் ஊக்குவிக்கிறார், மேலும் தன்னைப் போன்ற மருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சையை வழங்குவதற்குத் தயக்கம் காட்டக்கூடாது என்கிறார்.

தனது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து, PMDD நோயாளிகளுக்கு உதவுகிறார் Lynda.

நோயாளியை மையப்படுத்திய ஆதரவுக் குழுவான Vicious Cycleளின் ஆஸ்திரேலிய ஒருங்கிணைப்பாளராக Lynda பணி புரிகிறார்.

ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இயங்கும் மன நல மருத்துவக் கல்லூரி மற்றும் பொது மருத்துவர்கள் சங்கங்களுக்கு PMDD குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவரும் அவரது குழுவும் தீவிரமாக முயற்சி செய்கின்றனர்.

இப்போதைக்கு, அந்த முயற்சி ஒரு தொடர்கதை தான்.

உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கோ PMDD இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், அது குறித்த மேலதிக தரவுகளை இந்த இணையத்தளத்தில், and இந்த இணையத்தளத்தில் காணலாம்.

மன அழுத்தத்திற்கு ஆதரவு பெற, நீங்கள் Lifeline ஐ 13 11 14 www.lifeline.org.au, மற்றும்

beyondblue 1300 224 636 www.beyondblue.org.au தொடர்பு கொள்ளவும்.

Catch The Feed 8:30pm Thursdays and 5pm Sundays on SBS VICELAND . Connect with us on Facebook, Twitter and Instagram.


4 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan, Tania Safi




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now